அப்பாச்சியாரண்ணா

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுனயே நம:
ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:

appachiyarannaஅப்பாச்சியாரண்ணா – முதலியாண்டான் ஸ்வாமி திருமாளிகை, சிங்கப் பெருமாள்கோயில்

திருநக்ஷத்ரம் : ஆவணி ஹஸ்தம்

அவதார ஸ்தலம் : ஸ்ரீரங்கம்

ஆசார்யன் : பொன்னடிக்கால் ஜீயர்

சிஷ்யர் : அவர் திருமகனார் அண்ணாவிலப்பன் முதலானோர்

ஸ்ரீரங்கத்தில் மேன்மை பொருந்தியவரான முதலியாண்டான் திருவம்சத்தில் அவரது ஒன்பதாவது தலைமுறையினராய் சிற்றண்ணரின் திருமகனாராக அவதரித்த வரதராஜர், திருமஞ்சனம் அப்பாவின் திருமகள் ஆச்சியாரின் திருமகன். திருமஞ்சனம் அப்பாவின் தௌஹித்ரர், இத்திருநாமம் மணவாள மாமுனிகளால் சூட்டப் பட்டது. பொன்னடிக்கால் ஜீயரின் ப்ரிய சிஷ்யரும் (எப்படிப் பொன்னடிக்கால் ஜீயர் மாமுனிகளின் திருவடி நிலையாகக் கொண்டாடப்பட்டாரோ அப்படி) திருவடி நிலையுமான இவரை மாமுனிகள், “நம் அப்பாச்சியாரண்ணாவோ!” என்று பரிவோடு கொண்டாடினார்.

திருவரங்கம் பெரிய கோயிலில் தன்னலமற்ற கைங்கர்ய ஸ்ரீமானான திருமஞ்சனம் அப்பா மாமுனிகள் பெருமை அறிந்தவராதலால் மாமுனிகள் தினமும் நீராடச்  செல்லும்போது பின்தொடர்ந்து அவர் நீராடிய நீர்  பெருகி வருவதில் தாம் நீராடி அப்புனித நீரால் ஞானமும் உயர்குணங்களும் பெருகப்பெற்றார். அவரிடமே ஆச்ரயித்து அவருக்குக் கைங்கர்யமும் செய்தார்.

ஒருநாள் மாமுனிகள் திருக்காவேரியில் நீராடப் புறப்பட்டபோது மழை வரவும் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் திருமாளிகையில் ஒதுங்கினார். ஜீயரைக் கண்டதும் அவ்வில்லத்துப் பெண்மணி வெளியே ஓடி வந்து அவர் அமர ஆசனமிட்டு, நீரில் நனைந்திருந்த அவர் திருப்பாதுகைகளைத் தன்  சிரமேற் கொண்டு பின் தன்  துணியால்  நன்கு துடைத்தாள். இதனால் அவளுக்கு ஆசார்ய பக்தி மேலிட்டது, அவரைச் சரண் புகவும் விரும்பினாள். ஜீயர் அவளை  நீ யார் என்று  கேட்க, அவள் தான் திருமஞ்சனம் அப்பாவின் மகள், கந்தாடைச் சிற்றண்ணர்  மனைவி என்றாள். மழை விட்டவுடன் மாமுனிகள் அங்கிருந்து திருக்காவேரிக்குச் சென்றார்.

சில நாள்கள் கழித்து அவள் தன் விருப்பத்தைத் தன் தந்தைக்குச் சொல்ல, அவள் ஓர் ஆசார்ய புருஷருக்குத் திருமணமானவள் என்பதால் ஒருவருக்கும் தெரியாமல் தந்தை அவளை மாமுனிகளிடம் ஆச்ரயிப்பித்தார். மாமுனிகள் அவள் ஆசார்ய புருஷ திருமாளிகையைச் சேர்ந்தவள் என்பதால் முதலில் தயங்கினாலும், அவளின் எல்லையில்லாத ப்ரதிபத்தியைக் கண்டு அவளைத் தன் சிஷ்யையாக ஏற்றுக் கொள்கிறார்.

நாளடைவில் எம்பெருமான் திருவருளால் கந்தாடையார் அனைவரும் மாமுனிகளிடம் ஆச்ரயித்தனர். கந்தாடையார் தலைவராய் விளங்கிய கோயில் கந்தாடை அண்ணன் கனவில் எம்பெருமான் தோன்றிக் கட்டளையிட அவர் பொன்னடிக்கால் ஜீயர் புருஷகாரமாக மாமுனிகளிடம்  சரண் புகவும், கந்தாடையார் அனைவரும் அவ்வாறே செய்தனர்.

கோயில் அண்ணனுக்கும் பிறர்க்கும் பஞ்ச  சம்ஸ்காரம் அருளிய மாமுனிகள், பொன்னடிக்கால் ஜீயரிடம் தம் அன்பைப் வெளிப்படுத்துவாராக, கோஷ்டியாரிடம், “ஜீயர் அடியேன் ப்ராண ஸுஹ்ருத் ஆப்த தமர். அடியேனுக்கு உள்ள பெருமைகள் யாவும் அவருக்கும் ஏற்பட வேண்டும். அடியேன் பால் உள்ள ப்ராவண்யம் யாவரும் ஜீயரிடமும் பாராட்டவேணும், அவர்க்கும் ஆண்டான் வம்சீயர்கள் சிஷ்ய வ்ருத்தி செய்ய வேணும்” என்று பாரிக்க, கோயில் அண்ணன்.”ஜீயர் நியமித்திருந்தால் அடியேனே அவரிடம் சம்ஸ்காரம் பெற்றிருப்பேனே!” என்ன மாமுனிகள் அதற்கு “எனக்கு ஏற்பட்ட வஸ்துவைப் பிறருக்கு எப்படி அளிப்பது” என்று கூற, கோயில் அண்ணனும் தன் கோஷ்டியைப் பார்க்க, அவ்வளவில் அங்கிருந்த அப்பாச்சியாரண்ணா “ஸ்வாமி நியமனமாகில் அடியேன் செய்து கொள்வேன்” என வினயத்துடன் கூற, மாமுனிகள் போற உகந்து “நம் அப்பாச்சியாரண்ணாவோ!” என்று பாராட்டி, தன் சங்க சக்ரங்களைப் பொன்னடிக்கால் ஜீயரிடம் தந்து, தம் ஆசனத்தில் அவரை அமரச்சொல்ல அவர் மிக நடுங்கி மறுக்க மாமுனிகள் மிகச் சொல்லி ஜீயரின் முதல் சிஷ்யராக அண்ணா ஆனார்.

mamuni-ponnadikkaljiyar-appachiyarannaமாமுனிகள் (ஸ்ரீரங்கம்) – பொன்னடிக்கால் ஜீயர் (வானமாமலை) – அப்பாச்சியாரண்ணா

அன்றிலிருந்து அப்பாச்சியாரண்ணா தொடர்ந்து மாமுனிகள் மற்றும் பொன்னடிக்கால் ஜீயர் கைங்கர்யத்திலேயே ஈடுபட்டிருந்தார்.

மாமுனிகள் சிஷ்யர்களோடு திருவேங்கட யாத்ரை செல்கையில் காஞ்சியில் தேவப்பெருமாளை வைசாக உத்சவத்தில் கருட சேவையன்று மங்களாசாசனம் செய்தனர்.

varadhan-garudavahanam-mamunigaLதேவப்பெருமாள் கருடசேவை, மாமுனிகள்

மாமுனிகளை ஸ்ரீவைஷ்ணவர்கள் வரவேற்று சத்கரிக்க அவரும் உவந்து அவர்களுக்கு அருளிச்செயல், கைங்கர்யம் முதலானவற்றின் முக்யத்வம் கூற, அவர்களும் “ஜீயரே செய்தருளவேனும்” என்ன அவரும் பொன்னடிக்கால் ஜீயர் மூலம் அண்ணாவை வரவழைத்து, எல்லார்க்கும் காட்டித்தந்து, அவரிடம் “நீர் முதலியாண்டான் திருவம்சத்தவர், இங்கு நம்முடைய சார்பாக இருந்து முதலியாண்டான், கந்தாடை தோழப்பர் போன்றோர் திருவுள்ளங்கள் உகக்கும்படி தேவப்பெருமாளுக்கு மங்களாசாஸனம் செய்து போம்”  என்று கூற அண்ணாவும் காஞ்சி  கைங்கர்யங்களை வெகு சிறப்பாக நடத்திப் போந்தார். ஜீயரோடு அண்ணாவும் திருமலை மற்றும் பல திவ்ய தேசங்கள்  சேவித்து மீண்டும் ஸ்ரீரங்கம் அடைந்தனர்.

மாமுனிகள் அவர்க்கு தேவப்பெருமாள் கைங்கர்யம் பாரும் என்று நினைவுறுத்த, அவர் ஜீயர் பிரிவால் வாடவும், ஜீயர் தம் இராமானுசன் எனும் செப்புச் செம்பைப் பொன்னடிக்கால் ஜீயர் மூலம் தருவித்து, ”இதில் திருமண் சங்க சக்கரங்கள் அழிந்துள்ளன.இதில் நம் உருவங்கள் இரண்டு செய்து ஒன்று உம்  ஆசார்யனுக்கும் ஒன்று உமக்கும் கொள்வீர்” என்றார். தமது திருவாராதனப் பெருமாள் “என்னைத் தீமனம் கெடுத்தார்” என்பவரையும் அண்ணாவிடம் தந்தார்.

ennaitheemanamkedutharசிங்கப்பெருமாள் கோயில் முதலியாண்டான் சுவாமி திருமாளிகையில் என்னைத் தீ மனம் கெடுத்தான்

இவ்வெம்பெருமான் எம்பெருமானார் சிஷ்யர் ஆள் கொண்ட வில்லி  ஜீயரிடமும், அவரின் அதி ப்ரியரான கந்தாடை ஆண்டானிடமும் இருந்தவர், ”நீர் ஆண்டான் வம்சீயர் எனவே இவ்வெம்பெருமான் உம்மிடமே இருக்கத்  தக்கவன்” என்கிறார்.  மாமுனிகள் அப்பாச்சியாரண்ணாவிடம் கொண்ட பேரன்பால் அண்ணா தேவப்பெருமாள் அம்சம் என்பதையும் வெளிப்படுத்தினார். அண்ணாவும், மாமுனிகள் ஆணையை ஏற்று, காஞ்சீபுரம் வந்து தங்கி, அங்கிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களை வழி நடத்தினார்.

இவ்வாறு அப்பாச்சியாரண்ணாவின் வைபவம் மிக்க மேன்மை உள்ளது. அவர் மாமுனிகளுக்கும் பொன்னடிக்கால் ஜீயருக்கும் மிகவும் ப்ரியமானவராகத் திகழ்ந்தார். அவரது ஆசார்யாபிமானம் நமக்கும் வர அவர் திருவருளை வேண்டுவோம். இவர் தனியன்:

அப்பாச்சியாரண்ணாவின் தனியன்

ஸ்ரீமத் வாநமஹாசைல ராமாநுஜ முநிப்ரியம் |
வாதூல வரதாசார்யம் வந்தே வாத்ஸல்ய ஸாகரம் ||

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்:  http://guruparamparai.koyil.org/2013/09/07/appachiyaranna/

வலைத்தளம் – https://guruparamparai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment