விளாஞ்சோலைப் பிள்ளை

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

viLAnchOlai piLLai

திருநக்ஷத்ரம் : ஐப்பசி மாதம் – உத்திரட்டாதி

அவதார ஸ்தலம் : திருவனந்தபுரத்தின் அருகில் கரைமணை ஆற்றின் கரையில் உள்ள அரனூர் என்ற கிராமம்.

ஆசார்யன் : பிள்ளை லோகாசார்யர்

இவரின் தாஸ்ய நாமம் “ நலம் திகழ் நாராயணதாஸர் “ என்பது.

ஈழவ குலத்தில் அவதரித்த இவரால் அக்காலத்தில் கோயிலின் உள்ளே சென்று சேவிக்க முடியவில்லை. அவருடைய  கிராமத்தில் உள்ள விளா மரத்தின் உச்சியில் ஏறி திருவனந்தபுரம் அனந்தபத்மநாபர் கோவில் கோபுர தரிசனம் செய்து அங்கிருந்தே மங்களாசாஸனம் செய்வது வழக்கம்.

விளாஞ்சோலைப் பிள்ளையைப் பற்றி  சில விவரங்கள்:

இவர்  பிள்ளை லோகாசார்யரின் திருத்தம்பியாரான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆசார்யரிடம் ஈடு, ஸ்ரீபாஷ்யம்,  தத்வத்ரயம் மற்றும் பல ரகஸ்ய க்ரந்தங்களைக் கற்றார்.

ஸ்ரீவசனபூஷணத்தைத் தன் ஆசார்யரான ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரிடமிருந்து கற்றுக் கொண்டார். அதன் அர்த்தங்களை மிக நேர்த்தியாக கற்று அதற்கே அவர் அதிகாரியானார்.

ஸ்ரீ விளாஞ்சோலைப் பிள்ளை “ஸப்த காதை” என்கிற நூலை எழுதினார். இது இவருடைய ஆசார்யரின் ஸ்ரீ வசனபூஷணத்தின் சாராம்சம் ஆகும்.

குறிப்பு: ஸப்த காதையின் மூலத்தை ஸம்ஸ்க்ருதத்தில், தமிழிலும் மற்றும் ஆங்கிலத்திலும் அறிய http://acharya.org/sloka/vspillai/index.html .

விளாஞ்சோலைப் பிள்ளையின் மிகப்பெரிய கைங்கர்யம்,  தனது ஆசார்யரின் சரம தசையின் போது ஆசார்யர் கூறிய ஆணையை நிறைவேற்றியது. ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் அவருடைய  சிஷ்யர்களை அழைத்து (திருமலை ஆழ்வார்) திருவாய்மொழிப் பிள்ளையிடம் சென்று  , ஆசார்ய வம்சாவளியின் அடுத்த ஆசார்யராக பொறுப்பேற்பதற்குத் தயாராக்கியது.  மேலும் விளாஞ்சோலைப் பிள்ளையை ஸ்ரீவசன பூஷணத்தின் அர்த்தங்களைத் திருமலை ஆழ்வாருக்கு  உபதேசிக்கும்படி கூறினார்.

விளாஞ்சோலைப் பிள்ளையும் திருவாய்மொழிப் பிள்ளையும் :

திருவாய்மொழிப் பிள்ளை திருவனந்தபுரத்திற்கு வந்தபோது அங்குள்ள நம்பூதிரிகள் அவரை வரவேற்றனர். இவர் அனந்தபத்மநாபரை மூன்று வாயில்கள் வழியாக சென்று தரிசித்து மங்களாசாஸனம் செய்துவிட்டு விளாஞ்சோலைப் பிள்ளையைத் தேடிச்  சென்றார். அவர் இருக்கும் இடத்தை   கண்டுபிடித்து அடைந்தபோது அவருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது! அங்கு விளாஞ்சோலைப் பிள்ளை யோகமார்க்கத்தில் தன் ஆசார்யர் ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரின் திருமேனியையும், அவருடன் இருந்த  சிஷ்யர்களின் பெருமையையும் அவர்களுடன் திருவரங்கத்தில் கழித்த நாட்களை எண்ணி த்யானத்தில் அமர்ந்திருந்தார். அவரின் திருமேனி முழுவதும் சிலந்தி வலைகளால் மூடப் பட்டிருந்தது .

திருவாய்மொழிப் பிள்ளை விளாஞ்சோலைப் பிள்ளையின்  திருவடிகளில் தண்டன் சமர்ப்பித்து ஒன்றும் பேசாமல் அவர் முன்னே நின்று கொண்டிருந்தார். விளாஞ்சோலைப் பிள்ளை விழித்த உடனே அவரின் அருட்கடாட்ஷம் திருவாய்மொழிப் பிள்ளையின் மேல் விழுந்தது. சிஷ்யன் காத்திருப்பதை அறிந்து மிகவும் ஆனந்தமடைந்தார்.

ஸ்ரீ வசன பூஷணத்தின் ஆழ்ந்த  அர்த்தங்களை திருவாய்மொழிப் பிள்ளைக்கு அருளினார்.  மேலும் அவர் இயற்றிய ஸ்ரீவசன பூஷணத்தின் சாரமாகிய  சப்த காதையையும் திருவாய்மொழிப் பிள்ளைக்கு விளக்கினார்.

“கொடுமின் கொண்மின்” என்ற  தொண்டரடிப்பொடி ஆழ்வாரின்  பாசுரத்தின் மிகச் சிறந்த உதாரணம் – ஈழவ குலத்தைச் சேர்ந்த விளாஞ்சோலைப் பிள்ளையிடம் இருந்து ஸ்ரீ வைஷ்ணவத்தின் சாரத்தை  பிராமண குலத்தைச் சேர்ந்த திருவாய்மொழிப் பிள்ளை பெற்றுக்கொண்டது.

சிறிது காலத்திற்குப் பின் விளாஞ்சோலைப் பிள்ளையிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு, ஸ்ரீ ராமானுஜ தர்சனத்தின் தர்சன ப்ரவர்த்தகராகத்  திருவாய்மொழிப் பிள்ளை காலத்தைக் கழித்தார்.

விளாஞ்சோலைப் பிள்ளையின் சரம காலம்:

ஒருநாள் திருவனந்தபுரத்தில் உள்ள நம்பூதிரிகள் அனந்தபத்மநாபருக்குத் திருவாராதனம் செய்து கொண்டிருக்கும் போது விளாஞ்சோலைப் பிள்ளை கோயிலின் கிழக்கு வாசல் வழியாக நுழைந்து த்வஜ ஸ்தம்பத்தைக் கடந்து நரசிம்மரையும் தாண்டி கர்ப்ப க்ருஹத்தின்  வடக்கு வாசல் வழியாக படிகளில் ஏறி உரைகல் மண்டபம் அருகில் சென்று  பெருமானை சேவிக்கும்  மூன்று வாயில்களில் ஒன்றான பகவானின் திருவடித் தாமரைகளைக் காணும் வாயிலின் முன் சென்று நின்று விட்டார்.  இதைக் கண்ட நம்பூதிரிகள், விளாஞ்சோலைப் பிள்ளையின் குலத்தின் காரணத்தால் அக்காலத்தில்  இருந்த நடைமுறையின் படி கர்ப்ப க்ருஹத்திலிருந்து வெளியேறி சன்னதி கதவுகளை தாழிட்டு கொண்டு கோவிலை விட்டு வெளியில் சென்று விட்டனர்.

அதே சமயத்தில் விளாஞ்சோலைப் பிள்ளையின் சிஷ்யர்கள் சிலர் கோயிலை அடைந்து அவர்களுடைய ஆசார்யர் ,  பிள்ளை லோகாசார்யரின் திருவடியை அடைந்து விட்டார்.  அதனால் பகவானின் திருப்பரிவட்டமும், பூமாலையும் சரம திருமேனியில் சாற்றுவதற்கு வேண்டும் என்று அறிவித்தனர். அவர்கள் கோவிலின் வாசலில் நின்று கொண்டு இராமானுச நூற்றந்தாதி இயல் பலவற்றையும்  ஓதிக் கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்த நம்பூதிரிகள் ஆச்சர்யப்பட்டு கோயில் கர்ப்ப க்ருஹத்தில் சற்று முன் நடந்த அதிசயத்தை எல்லோரிடமும் விவரித்தனர்.

திருப்பாணாழ்வார் எவ்வாறு பெரிய பெருமாளின் திருவடிகளை அடைந்தாரோ அதுபோல் விளாஞ்சோலைப் பிள்ளையும் அனந்தபத்மநாபரின் திருவடிகளை அடைந்தார்.

இந்தச் செய்தியைக் கேட்ட திருவாய்மொழிப் பிள்ளை ஆசார்யனுக்கு ஒரு சிஷ்யன் எவ்வாறு சரம கைங்கர்யங்களைச் செய்வார்களோ அதுபோல் இவரும் செய்து திருவத்யயனமும் பூரணமாகச் செய்து முடித்தார். இது நமக்கு பெரிய நம்பி, மாறனேரி நம்பிக்குச் செய்த கைங்கர்யத்தை நினைவுபடுத்துகிறது.

பின்வரும் ச்லோகமானது திருவாய்மொழிப் பிள்ளை விளாஞ்சோலைப் பிள்ளையிடம் கொண்ட சிஷ்ய பாவத்தை சிறப்பித்து, திருவாய்மொழிப் பிள்ளையின் சிஷ்யர்கள் அருளிச் செய்தது.

பற்றாதவெங்கள் மணவாளயோகி பதம்பணிந்தோன்
நற்றேவராசனலந்திகழ் நாரண தாதருடன்
கற்றாரெங்கூரகுலோத்தமதாதன் கழல் பணிவோன்
மற்றாருமொவ்வாத் திருவாய்மொழிப் பிள்ளை வாழியவே.

விளாஞ்சோலைப் பிள்ளையைப் பற்றி திருவாய்மொழிப் பிள்ளை அருளிச் செய்த வாழித்திருநாமம்:

வாழி நலம் திகழ் நாரண தாதன் அருள்
வாழி அவன் அமுத வாய்மொழிகள் – வாழியவே
ஏறு திருவுடையான் எந்தை உலகாரியன் சொல்
தேறு திருவுடையான் சீர்.

தனியன்கள்:

துலாSஹிர்பு3த்4ந்யஸம்பூ4தம் ஸ்ரீலோகார்ய பதா3ஸ்ரிதம் |
ஸப்தகா3தா2 ப்ரவக்தாரம் நாராயணமஹம் ப4ஜே ||

ஸ்ரீலோகார்ய பதா3ரவிந்த3மகி2லம் ஸ்ருத்யர்த்த2 கோஸாம்ஸ்ததா2
கோ3ஷ்டீ2ஞ்சாபி ததே3கலீநமநஸா ஸஞ்சிதயந்தம் முதா3 |

ஸ்ரீநாராயண தா3ஸமார்யமமலம் ஸேவே ஸதாம் ஸேவதி4ம்
ஸ்ரீவாக்3பூ4ஷண கூ34பா4வவிவ்ருதிம் யஸ்ஸப்தகா3தா2ம் வ்யதா4த் ||

அடியேன் ஸந்தான க்ருஷ்ண ராமாநுஜ தாஸன்
அடியேன் ஸ்ரீவரமங்கா ராமாநுஜ தாஸி

ஆதாரம்: https://guruparamparai.koyil.org/2015/05/29/vilancholai-pillai/

வலைத்தளம் – https://guruparamparai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

 

2 thoughts on “விளாஞ்சோலைப் பிள்ளை”

Leave a Comment