வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

vadhi-kesari-azhagiya-manavala-jiyar

திருநக்ஷத்ரம் : ஆனி, ஸ்வாதி

அவதார ஸ்தலம் : மன்னார் கோயில் (ப்ரஹ்ம தேசம்) – அம்பாசமுத்திரம் அருகில்

ஆசார்யன் : பெரியவாச்சான் பிள்ளை (ஸமாச்ரயணம்), நாயனாராச்சான் பிள்ளை (க்ரந்த காலக்ஷேபம்)

சிஷ்யர்கள் :  யமுனாச்சார்யார் (தத்வபூஷணம், ப்ரமேயரத்னம் ஆகியவற்றின் ஆசிரியர் ), பின்சென்ற வில்லி மற்றும் பலர்.

பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம்

அருளிச் செய்தவை : திருவாய்மொழி 12000 படி வ்யாக்யானம், திருவிருத்தம் ஸ்வாபதேச வ்யாக்யானம், த்ராவிடோபநிஷத்  சங்கதி – திருவாய்மொழி சங்கதி ச்லோகங்கள், அத்யாத்ம சிந்தை, ரஹஸ்யத்ரய விவரணம், தீப ஸங்க்ரஹம், தத்வ தீபம், தீப ப்ரகாசிகை, தத்வ நிரூபணம், பகவத் கீதை வெண்பா – ஸ்ரீ பகவத் கீதையின் ச்லோகங்களுக்குத் தமிழ் பாசுரங்கள், பகவத் கீதையின் வ்யாக்யானம் மற்றும் பல.

இவர் பிறந்தவுடன், இவருக்கு  வரதராஜர் என்ற திருநாமம் பெற்றோர்களால் சூட்டப்பட்டது. தனது சிறு  பிராயத்திலேயே  பெரியவாச்சான் பிள்ளையின் சிஷ்யராய்ச்  சேர்ந்து அவருடைய திருமாளிகையில் திருமடப்பள்ளி கைங்கர்யம் செய்து வந்தார். இவர் சுமார்  முப்பத்து இரண்டு வயது  இருக்கும் பொழுது  சில வித்வான்கள் தத்வ உரையாடல்கள் நிகழ்த்துவதை கவனித்த இவர், அவர்களை அணுகி அவர்களின் உரையாடலைப்பற்றி மிக ஆவலுடன் வினவினார் . வரதராஜர் அடிப்படை ஞானம் இல்லாதவர் என்பதை அறிந்த வித்வான்கள் முஸலகிஸலயத்தைப் (இல்லாத  ஒரு க்ரந்தத்தைப்) பற்றி உரையாடிக் கொண்டிருக்கிறோம்  என்றனர் . மேலும் வரதராஜரிடம் கல்வி அறிவு உனக்கு இல்லாததால் சாஸ்திரம் ஒன்றும் புரியாது என்று சொல்லி மனதை வேதனைப்படுத்தினர். வரதராஜர் தன்னுடைய ஆசார்யரான பெரியவாச்சான் பிள்ளையிடம் சென்று இந்த நிகழ்ச்சியை விவரித்தார். “கல்வி அறிவு உனக்கு இல்லாததால் உன்னை வேதனைப்படுத்தினர்” என்று பெரியவாச்சான் பிள்ளையும் எடுத்துரைத்தார். அதற்கு வரதராஜர் மிகவும் வெட்கப்பட்டுத் தனக்கு சாஸ்திரம் கற்றுத்தரும்படி வேண்டினார். மிக அன்பு கூர்ந்து தன் கருணை உள்ளத்துடன் பெரியவாச்சான் பிள்ளை அவருக்கு சாஸ்திரங்களை உபதேசித்தார். மேலும் அவருக்குக்  காவியம், நாடகம், அலங்காரம், சப்தம், தர்க்கம், பூர்வ மீமாம்ஸா, உத்தர மீமாம்ஸா மற்றும் பலவற்றைக் கற்பித்தார்.  ஆசார்யரின் அநுக்ரகத்தினால் வரதராஜர் குறைந்த கால அளவிலேயே சாஸ்திரத்தில் சிறந்த வல்லுநராகி முஸலகிஸலயம் என்ற க்ரந்தத்தை இயற்றி இவரை முன்னால் படிப்பறிவு இல்லாதவர் என்று அவமதித்த வித்வான்களிடம் கொடுத்தார். நாயனார் ஆச்சான்  பிள்ளையிடம் சாஸ்திரங்களையும் பகவத் விஷயம் மற்றும் பல வற்றையும் இவர் கற்றார். ஆசார்யரின் கடாக்ஷத்தினால் ஒருவர் எவ்வாறு உயர்ந்தவர் ஆகலாம் என்பதற்கு வரதராஜரின் வாழ்க்கை தக்க  ஒரு எடுத்துக்காட்டாகும்.

வெகு சீக்கிரத்திலேயே முழுப் பற்றற்று ஸந்யாஸாச்ரமத்தை ஸ்வீகரித்து அழகிய மணவாள ஜீயர் (ஸுந்தர ஜாமாத்ரூ முனி) என்ற திருநாமம் பெற்றார். மேலும்  மற்ற தத்வவாதிகளை வாதத்தில் தோற்கடித்து “வாதி கேஸரி” (வாதியர்களின் சிங்கம்) என்ற பட்டத்தையும் பெற்றார்.

நம் ஸம்ப்ரதாயத்திற்கு  பெருமை சேர்க்கும் க்ரந்தங்களை இவர் அருளிச் செய்துள்ளார்.  இவர் திருவாய்மொழிக்கு பன்னிரண்டாயிரப்படி வியாக்கியான உரை எழுதியுள்ளார். ஸ்ரீமத் பாகவதத்தின் பன்னிரண்டாயிரம் ச்லோகத்திற்கு ஒப்பானது. இது மிகச்சிறந்த உரையாகும் –  திருவாய்மொழிக்கு மற்றவர்கள் உரை எழுதும்போது பாசுரத்தின் ஒட்டுமொத்தமான  நடையும், ஆழ்வார் உள்ளத்தின் உணர்வும் மட்டுமே வெளிப்படுத்தும்.  ஆனால் வேறு எந்த வ்யாக்யானத்திலும் பாசுரங்களை தெள்ளத்தெரிவுற   அறிந்து கொள்வதற்கு, இது போன்று பத-பதார்த்தம் (வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்) விளக்கப்படவில்லை. கீதையின் ஒவ்வொரு ச்லோகத்திற்குத் தமிழ் பாசுரமாக அருளிச்செய்தது இவரின் முக்கியத்துவம் வாய்ந்த க்ரந்தத்தில் ஒன்றாகும். கீதை ச்லோகங்களில் சொல்லப்பட்டுள்ள கொள்கைகளை  எளிய தமிழ் பாசுரங்களாக விளக்கியுள்ளார். அவர் மேலும் பல க்ரந்தங்களை அருளிச் செய்துள்ளார்.

வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயரின் சிஷ்யரான திருமாலை ஆண்டான் வம்சத்தில் அவதரித்த யாமுனாசாரியாரின்  இரண்டு ரஹஸ்ய க்ரந்தங்கள் (தத்வபூஷணம், ப்ரமேயரத்னம்) நமது ஸம்ப்ரதாயத்தின் மதிப்புமிக்க அம்சங்கள் நிறைந்தவையாகும். மணவாள மாமுனிகள்  திருவாய்மொழியின் பல  வ்யாக்யானங்களைப்பற்றி  விவாதிக்கும் பொழுது வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயரை பெருமைப் படுத்தியும்  அவருடைய பன்னிரண்டாயிரப்படி வ்யாக்யானத்தையும் மிக விரிவாகச் சிறப்பித்துள்ளார். நாம் உபதேச ரத்தின மாலையின் நாற்பத்தி ஐந்தாவது பாசுரத்தை இங்கு விவரமாகப் பார்ப்போம்.

அன்போடு அழகிய மணவாளச் சீயர்
பின்போரும் கற்றறிந்து பேசுகைக்காகத்
தம் பெரிய போதமுடன் மாறன் மறையின் பொருள் உரைத்தது
ஏதமில் பன்னீராயிரம்

எளிய மொழியாக்கம்:  அழகிய மணவாள ஜீயர் மிக அன்புடன் திருவாய்மொழிக்குத் தமது பன்னிரண்டாயிரப்படியில் ஒவ்வொரு வார்த்தைக்கும் அறிவாற்றல் மிகுந்த அர்த்தத்தை அருளிச் செய்து,  வருங்காலத்தில் எல்லோரும் திருவாய்மொழியைப் பற்றிப் பேசும்படி விவரித்துள்ளார்.

இந்த வ்யாக்யானத்திற்கு பின் வரும் குறிப்புகளை பிள்ளை லோகம் ஜீயர் சுட்டிக் காட்டியுள்ளார்:

  • அன்போடு என்ற சொல்லுக்கு – 1) திருவாய்மொழி மீது உள்ள பற்று/ஈடுபாடு 2) ஜீவாத்மாக்களிடம் உள்ள இரக்கம் (ஜீவாத்மாக்கள் உஜ்ஜீவனம் அடைய  இந்த வ்யாக்யானத்தை அருளினார்).
  • திருவாய்மொழிக்கு மற்ற நான்கு வ்யாக்யானங்கள் இருந்த போதிலும் ஒரு குறிப்பிட்ட பாசுரத்தில் ஏதேனும் ஒரு பதத்தில் (வார்த்தையில்) சந்தேகம் இருந்தால் ஒவ்வொருவரும் பன்னிரண்டாயிரப்படி வ்யாக்யானத்தையே நம்பி இருக்க வேண்டியுள்ளது. ஆகையால் இதுவும் முக்கியமான வ்யாக்யானம் என்று கருதப்படுகிறது.
  • திருவாய்மொழியில் சிறந்த வல்லுனராக இருந்ததால் அதனின் அரிய அர்த்தங்களை அளித்துள்ளதால், மாமுனிகள் வாதி கேஸரி  அழகிய மணவாள ஜீயரின் ஞானம் மற்றும் அறிவாற்றலை பெரிதும் கொண்டாடியுள்ளார்.
  • ஆழ்வாரின் உள்ளக்கருத்தினை/உணர்வுகளை இவரது வ்யாக்யானத்தில் உண்மை உருவில் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். மற்ற வ்யாக்யானங்களையும் இது அனுசரித்து உள்ளது. உதாரணமாக, பிள்ளானின் ஆறாயிரப்படியில் சொல்லப்பட்டிருக்கிற பொருளை, விரித்து வ்யாக்யானம் அளித்துள்ளார்.  பெரியவாச்சான் பிள்ளையின் இருபத்திநாலாயிரப்படியில் அல்லது நம்பிள்ளையின் முப்பத்தாறாயிரப்படியில் என்ன விளக்கப்பட்டுள்ளதோ அதையே சுருக்கமாக இவர் அருளிச் செய்துள்ளார்.
  • ஆழ்வாரே , ஏதமில் (தூய்மையான/ மாசற்ற) என்று தன் பாசுரங்களை  அறிவித்தது போல மாமுனிகளும்  வாதி கேஸரி ஜீயரின் பன்னிரண்டாயிரப்படியை அவ்வாறே  தூய்மையானதும் மாசற்றதும்  என்று அறிவித்துள்ளார்.

இது வரை நாம், வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயரின் பெருமை மிக்க வாழ்க்கைச் சம்பவங்களை அனுபவித்தோம். இவர் சிறந்த பாகவத நிஷ்டை உடையவராயும், பெரியவாச்சான் பிள்ளை  மற்றும்  நாயனாராச்சான் பிள்ளை இவர்களின்  அன்புக்கு மிகவும் பாத்திரமானவரும் ஆவார்.  நாமும் இது போன்று சிறிதளவாவது  பாகவத நிஷ்டையில் ஈடுபாடு கொள்ள அவரது திருவடித் தாமரைகளில் ப்ரார்த்தனை செய்வோம்.

வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயரின் தனியன்:

ஸுந்தரஜாமாத்ருமுநே: ப்ரபத்யே சரணாம்புஜம் |
ஸம்ஸாரார்ணவ ஸம்மக்ந ஜந்து ஸந்தாரபோதகம் ||

அடியேன் ஸந்தான க்ருஷ்ண ராமாநுஜ தாஸன்
அடியேன் ஸ்ரீவரமங்கா ராமாநுஜ தாஸி

ஆதாரம்: http://guruparamparai.koyil.org/2013/03/22/vadhi-kesari-azhagiya-manavala-jiyar/

வலைத்தளம் – https://guruparamparai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

1 thought on “வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர்”

  1. இப்படிப்பட்ட ஆச்சார்யர்களன்றோ நம் எம்பெருமானார் தர்சனத்தை நிலைக்கச்செய்தனர்.

Leave a Comment