திருவரங்கப் பெருமாள் அரையர்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

thiruvarangaperumal-arayarதிருவரங்கப்பெருமாள் அரையர் – ஸ்ரீரங்கம்

திருநக்ஷத்ரம் : வைகாசி, கேட்டை

அவதார ஸ்தலம்: திருவரங்கம்

ஆசார்யன்: மணக்கால் நம்பி, ஆளவந்தார்

சிஷ்யர்கள்: எம்பெருமானார் (க்ரந்த காலக்ஷேப சீடர்)

பரமபதித்த இடம் : திருவரங்கம்

திருவரங்கப் பெருமாள் அரையர் ஆளவந்தாரின் திருக்குமாரர் மற்றும் ப்ரதான ஶிஷ்யர் ஆவார்.

திருவரங்கப் பெருமாள் அரையர் இசை, அபிநயம், நாடகம் ஆகிய மூன்றிலும் சிறந்து விளங்கினார். அரையர் ஓரு அத்யயந உத்ஸவத்தில் நம்பெருமாள் முன்பு அரையர் சேவையில், திருவாய்மொழியில் “கெடுமிடர்” (10-2) பதிகத்தை அபிநயித்துக் கொண்டிருந்தார். அப்பதிகத்தில் பரமாசார்யரான ஆளவந்தாரைப் பார்த்துக் கொண்டே “நடமினோ நமர்களுள்ளீர்! நாம் உமக்கு அறியச் சொன்னோம்” (அடியார்களே! திருவனந்தபுரம் உடன் செல்வீர்) என்று இசைத்தார். இதனைக் கேட்ட ஆளவந்தார், அவ்வார்த்தையை நம்பெருமாளின் வார்த்தையாக சிரமேற்கொண்டு உடனே திருவனந்தபுரத்தில் எழுந்தருளிருக்கும் அனந்தஶயனப் பெருமாளை மங்களாஶாஸனம் செய்ய எழுந்தருளினார்.

அரையர் பெரிய பெருமாளிடமும், திருப்பாணாழ்வாரிடமும் மிகுந்த ப்ரதிபத்தியுடையவராய் இருந்ததால் அரையரை அனைவரும்  ஆஶ்ரயித்து இருக்க வேண்டும் என்று ஆளவந்தார் தமது அந்திம காலத்தில் தெரிவித்தார். இவ்வாறு அரையர் ஆளவந்தாரே கொண்டாடும்படியான பெருமையைப் பெற்றிருந்தார்.

எம்பெருமானாரை ஸ்ரீரங்கம் அழைத்து வந்ததில் அரையருக்கு பெரும் பங்கு உண்டு. ஆளவந்தார் காலத்துக்குப் பிறகு எம்பெருமானார் ஸந்யாஸாஶ்ரமம் பெற்றுக்கொண்டு காஞ்சி தேவப்பெருமாளுக்கு கைங்கர்யம் செய்து வந்தார். எம்பெருமானாரை ஸ்ரீரங்கம் அழைத்து வர வேண்டும் என்று  திருவரங்கன் திருமுற்றத்து அடியார்கள் பெரிய பெருமாளிடம் ப்ரார்த்தித்தனர், உடனே திருவரங்கநாதனும் எம்பெருமானாரை வேண்டி தேவப்பெருமாளிடம் கேட்டார். ஆனால் தேவப்பெருமாளோ எம்பெருமானாரை விடேன் என்றார். பெரிய பெருமாள் அரையரை அழைத்து இசைப் பிரியரான தேவப்பெருமாளிடம் அபிநயித்து எம்பெருமானாரை வரமாகப் பெற்றுவரும்படி நியமித்தார்.

varadhar-arayar-ramanujar

அரையரும் காஞ்சிபுரம் சென்றார். அவரை அவ்வூர் அரையரான வரம் தரும் பெருமாள் அரையர் வரவேற்று தம் திருமாளிகைக்கு அழைத்துச் சென்றார். மறுநாள் இதை கேள்விப்பட்ட திருகச்சிநம்பிகள் அரையரிடம் சென்று தன் ப்ரணாமங்களைத் தெரிவித்துக் கொண்டார். அரையர், நம்பியிடம் தன்னை தேவப்பெருமாள் மங்களாஶாஸனத்திற்கு அழைத்துச்செல்லும்படி வேண்டினார் (ஸ்ரீவைஷ்ணவர்கள் திவ்யதேசப் பெருமாளை மங்களாஶாஸனம் செய்யும்பொழுது அவ்வூர் கைங்கர்யபரர்களுடன் செல்வது வழக்கம்). நம்பியும் அவரை அழைத்துச்சென்றார். அரையர் தேவப்பெருமாளைப் பார்த்து

கதாபுநச்சங்க ரதாங்க கல்பக
த்வஜாரவிந்தாங்குச வஜ்ர லாஞ்சநம் |
த்ரிவிக்ரம த்வச்சரணாம்புஜத்வயம்
மதீய மூர்த்தாநமலங்கரிஷ்யதி ||

என்று ஸேவித்தார். இதன் அர்த்தம் “த்ரிவிக்ரமா! மங்களகரமான ஸுதர்சன சக்கரம், கல்பக வ்ருக்ஷம், தாமரை போன்ற அடையாளங்களை உடைய உனது திருவடித்தாமரைகள் எப்போழுது என் தலையை அலங்கரிக்கப் போகிறது”. எம்பெருமான் அர்ச்சகர் மூலம் தீர்த்தம், ஸ்ரீஶடகோபம், ப்ரஸாதம் போன்றவற்றைக் கொடுத்தருளி தம் முன்பு அரையர் ஸேவை ஸேவிக்கும் படி நியமித்தார். அரையரும் ப்ரதிபத்தியுடன் எம்பெருமான் மூன்பு ஆழ்வார்களுடைய ஸ்ரீசூக்திகளை அபிநயித்தார். எம்பெருமான் மிக மகிழ்ந்து அரையருக்குப் பரிசுகளை வழங்கினார். ஆனால் அரையரோ அவையெல்லாம் வேண்டாம் என்று கூறி அடியேன் வேண்டுவதை கொடுத்தருளவேணும் என்றார். என்னையும் என் திருமாமகளையும் தவிர எது வேண்டுமானலும் கேளும் என்றார். அதற்கு அரையர் இராமாநுசரை காண்பித்து “இராமாநுசரைத் தந்தருளவேணும்” என்றார். இதனை எதிர்பாராத தேவப்பெருமாள் வேறு ஏதாவது கேளும் என்றார். அதற்கு அரையர் “இரு சொல் இல்லாத ஸ்ரீ ராமன் நீர் ஆதலால் நீர் இதனை மறுக்கலாகாது” என்றார். தேவப்பெருமாளும் தந்தோம் என்று இராமாநுசரை அனுப்பிவைத்தார். அரையர் இராமாநுசர் கையைப் பிடித்துக் கொண்டு ஸ்ரீரங்கம் புறப்பட்டார். இராமாநுசர் ஆழ்வானையும், ஆண்டானையும் தம் திருவாராதனப் பெருமளையும் (பேரருளாளன்) திருவாராதனத்துக்குரிய வஸ்துக்களையும் மடத்திலிருந்து எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வரும்படி (எடுத்து வரும்படி) நியமித்துப் பிறகு தேவப்பெருமாளிடம் நியமனம் பெற்று ஸ்ரீரங்கம் புறப்பட்டார். எம்பெருமானாரை ஸ்ரீரங்கம் அழைத்துவந்து அரையர் நம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயதிற்குப் பேருதவி புரிந்தார்.

ஆளவந்தார் தம் ஐந்து ப்ரதான சீடர்களிடம் உடையவருக்கு ஐந்து அர்த்த விஶேஷங்களை       ஸாதிக்கும்படி  நியமித்தார்.

உடையவருக்கு பெரிய நம்பி பஞ்ச ஸம்ஸ்காரம் ஸாதித்தார்

திருக்கோஷ்டியூர் நம்பி திருமந்த்ர மற்றும் சரம ச்லோக அர்த்தங்களை ஸாதித்தார்.

பெரிய திருமலை நம்பி ஸ்ரீ ராமாயணம் ஸாதித்தார்

திருமாலை ஆண்டான் திருவாய்மொழி ஸாதித்தார்

திருவரங்கப் பெருமாள் அரையர் ஆளவந்தாரின் நியமனப்படி உடையவருக்கு அருளிச்செயல் சிலவற்றையும் சரமோபாயமும் (ஆசாரிய நிஷ்டை அர்த்த விஶேஷம்) ஸாதித்தார்.

எம்பெருமானார் திருவாய்மொழியைப் பூர்த்தியாக திருமாலை ஆண்டானிடம் கற்றார். பெரிய நம்பி எம்பெருமானரை ஸம்ப்ரதாய அர்த்தங்களை அரையரிடம் கேட்கும்படி நியமித்தார். எம்பெருமனார் அரையரிடம் அர்த்தங்களை அறிவதற்கு முன்பு நியம நிஷ்டையாக ஆறு மாத காலம் அவருக்கு கைங்கர்யம் புரிந்தார். அவருக்கு இதமான சூட்டில் பால் அமுது செய்யக் கொடுத்தார். அரையருக்குத் தேவையான பொழுது அவருக்கு மஞ்சள் அரைத்துச் சாற்றினார்.

namperumal-arayar-ramanujar

ஓரு முறை எம்பெருமானார் அரையருக்கு மஞ்சள் அரைத்துச் சாற்றினார். ஆனால் அதில் அரையர் மனம் உகக்காததை அவருடைய முக பாவானையிலேயே கண்டறிந்தார். பின்னர் மறுபடியும் மஞ்சள் அரைத்து ஆசார்யன் மனம் உகக்கும் படி சாற்றி ஆசார்ய கைங்கர்யத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தினார். திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் எம்பெருமானே ஆசார்யர்களாக அவதரித்திருக்கிறான் என்பதனை உணர்த்தினார். சரமோபாயம்  பற்றி ponnadi.blogspot.in/p/charamopaya-nirnayam.html  என்கிற பக்கத்தில் முன்பே அனுபவித்துள்ளோம்.

அரையருடைய ஏற்றத்தை நம் பூர்வாசார்யர்கள் பல இடங்களில் மேற்கோள் காட்டியுள்ளனர். அதில் சில:

ஈடு வ்யாக்யானம் திருவாய்மொழி 1.5.11, “பாலேய் தமிழர் இசைகாரர்” என்பதை விவரிக்கும் பொழுது, இசைகாரர் என்றால் இசையில் வல்லுனர். நம்பிள்ளை மஹாசார்யர் இவ்விடத்தில் “இசைகாரர் என்றால் திருவரங்கப்பெருமாள் அரையர் என்பர் ஆழ்வான்” என்று விவரித்தார்.

ஈடு வ்யாக்யானம் திருவாய்மொழி 3.3.1, நம்பிள்ளை மஹாசார்யர் விவரிக்கும் பொழுது, அரையர் “ஒழிவில் காலமெல்லாம்” பாசுரத்தை அநுஸந்திக்கும் பொழுது ப்ரதிபத்தி மிகுதியால் காலமெல்லாம், காலமெல்லாம்… என்றே பாடுவார். இப்பதிகத்தில் ஆழ்வார் எப்பொழுதும் இடைவிடாது திருவேங்கடமுடையானுக்கு கைங்கர்யம் புரிய வேண்டும் என்று விண்ணபித்தார். இப்பதிகம் த்வயத்தின் உத்தர வாக்கியத்துக்கு விவரணமாக உள்ளது (கைங்கர்ய ப்ரார்த்தனை).

திருவரங்கப்பெருமாள் அரையர் திருவடித் தாமரைகளைச் ஸேவித்து அவரைப் போல் எம்பெருமானிடமும், ஆசாரியனிடமும் ப்ரதிபத்தியுடையவராய் இருக்க ப்ரார்த்திப்போம்.

திருவரங்கப்பெருமாள் அரையர் தனியன்

ஸ்ரீராமமிச்ர பத பங்கஜ ஸஞ்சரீகம் ஸ்ரீயாமுனார்ய வர புத்ரம் அஹம் குணாப்யம்
ஸ்ரீரங்கராஜ கருணா பரிணாம தத்தம் ஸ்ரீபாஷ்யகார சரணம் வரரங்கமீடே

அடியேன் சக்கரவர்த்தி ராமாநுஜ தாஸன்

ஆதாரம்: https://guruparamparai.koyil.org/2013/01/12/thiruvarangapperumal-arayar/

வலைத்தளம் – https://guruparamparai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

3 thoughts on “திருவரங்கப் பெருமாள் அரையர்”

  1. ஆச்சார்ய வைபவம் எத்துணை அனுபவித்தாலும் திருப்தி ஏற்படாது. இன்னும் அனுபவம் வேண்டி நிற்கும்
    அடியேன்
    மஞ்சுளா

  2. 🙏🙏🙏🙏🙏🙏
    தாங்களின்கைங்கர்யம் அடியே ாங்களின் பாக்யம்!

Leave a Comment