திருக்கச்சி நம்பி

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

tirukkachinambi

திருநக்ஷத்ரம்: மாசி, ம்ருகசீரிஸம்

அவதார ஸ்தலம்: பூவிருந்தவல்லி

ஆசார்யன்: ஆளவந்தார்

சீடர்கள்: எம்பெருமானார்

முக்தியடைந்த இடம்: பூவிருந்தவல்லி

படைப்புகள்: தேவராஜ அஷ்டகம்

திருக்கச்சி நம்பிகள் பூவிருந்தவல்லியில் அவதரித்தவர். அவர் காஞ்சி பூர்ணர் மற்றும் கஜேந்திரதாசர் என்றும் அழைக்கப்பட்டார். இவர் தினமும் காஞ்சி தேவப்பெருமாளுக்கு திருவாலவட்டம் வீசும் கைங்கர்யம் செய்து வந்தார். அந்தக் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருக்கும் அதே சமயம் நேரடியாக தேவப்பெருமாள் மற்றும் பெருந்தேவித் தாயாருடன் உரையாடவும் வல்லவர்.

வாரணாசி யாத்திரையின் போது தன்னைக் கொல்ல நடந்த சதியிலிருந்து தப்பித்தபின் காஞ்சி திரும்பிய இளையாழ்வார் (ஸ்ரீராமானுஜர்), தன் தாயாரின் அறிவுரையின்படி ஆளவந்தாரின் சீடரும் காஞ்சி தேவப்பெருமாளின் அந்தரங்க கைங்கர்யபரரான திருக்கச்சி நம்பிகளைத் தன்னுடைய வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டார். நம்பிகள், இளையாழ்வாரைக் காஞ்சி தேவப்பெருமாள் கோயிலிலிருந்து சிறிது தூரத்திலுள்ள சாலைக்கிணற்றிலிருந்து தினமும் தீர்த்தம் கொண்டு வந்து காஞ்சி தேவப்பெருமாளுக்கு திருமஞ்சன தீர்த்த கைங்கர்யம் செய்யும்படி கூறினார். இளையாழ்வாரும் அந்த ஆணையை மகிழ்வுடன் ஏற்று தினமும் தீர்த்த கைங்கர்யத்தைச் செய்து வந்தார்.

பெரிய நம்பிகள் ஆளவந்தாரின் விருப்பத்தின் பேரில், ஆளவந்தாருக்கு அடுத்தபடியாக இளையாழ்வாரை ஆசாரியராக  நியமிக்கவும், அதன் பொருட்டு இளையாழ்வாரை சம்பிரதாயத்தில் ஈடுபடுத்தவும் எண்ணம் கொண்டு காஞ்சிபுரம் விஜயம் செய்தார். பெரிய நம்பிகள், திருக்கச்சி நம்பிகளை அணுகித் தான் வந்த காரியத்தை எடுத்துரைத்தார். திருக்கச்சி நம்பிகளும் அதற்கு மகிழ்வுடன் ஒப்புக்கொண்டார். அதன் பிறகு பெரிய நம்பிகள் ஆளவந்தாரின்  பெருமைகளை இளையாழ்வாருக்கு  எடுத்துரைத்தார். பெரிதும் ஈர்க்கப்பட்ட இளையாழ்வார் ஆளவந்தாரை சரணடையும் பொருட்டு பெரிய நம்பிகளுடன் ஸ்ரீரங்கம் புறப்பட்டார். ஆனால் ஆளவந்தாரை இளையாழ்வார் சந்திப்பதற்குள் ஆளவந்தார் திருநாட்டுக்கு எழுந்தருளிவிட்டார். இதனால் மனமுடைந்த இளையாழ்வார் காஞ்சிபுரம் திரும்பி, தீர்த்த கைங்கர்யத்தில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார்..

நாளடைவில் இளையாழ்வாருக்கு திருக்கச்சி நம்பிகளிடம் மிகுந்த ஈடுபாடு ஏற்பட அவரையே சரணடைந்து தனக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்துவித்துத் தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். திருக்கச்சி நம்பிகள் தான் பிராமணன் அல்லாததால் தனக்கு ஆசார்யனாகும் தகுதி இல்லை என்றும் அதனால் பஞ்ச சம்ஸ்காரம் செய்துவைக்க இயலாது என்றும் தன்னுடைய இயலாமையை எடுத்துக் கூறினார். சாஸ்திரங்களில் தனக்கு இருந்த அதீத நம்பிக்கையினால் திருக்கச்சி நம்பிகளின் கூற்றை இளையாழ்வார் வருத்தத்துடன் ஏற்றுக்கொண்டார்.

ஒரு முறை திருக்கச்சி நம்பிகளின் உச்சிஷ்டத்தை (அவர் உண்ட பிரசாதத்தின் மிகுதியை) ஸ்வீகரிக்க விரும்பிய இளையாழ்வார், திருக்கச்சி நம்பிகளைத் தன் இல்லத்திற்கு விருந்திற்கு வருமாறு அழைத்தார். திருக்கச்சி நம்பிகளும் இளையாழ்வாரின் அழைப்பை ஏற்றுக்கொண்டார். மிகுந்த மகிழ்ச்சியடைந்த இளையாழ்வாரும் தன் மனைவியிடம் விருந்துக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறிவிட்டு தன்னுடைய தீர்த்த கைங்கர்யத்துக்காகச் சென்றிருந்தார். அவர் வீடு திரும்புவதற்குள் திருக்கச்சி நம்பிகள் இளையாழ்வார் வீட்டிற்கு வந்து உணவருந்திவிட்டு சென்று விட்டார். இளையாழ்வாரின் மனைவி இளையாழ்வார் வீடு திரும்புவதற்குள், திருக்கச்சி நம்பிகள் (அவர் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர் என்பதால்) சாப்பிட்ட இலையை அப்புறப்படுத்தி விட்டு, அவர் சாப்பிட்டு முடித்த இடத்தையும் சாணமிட்டு மெழுகி சுத்தம் செய்தபின் தானும் குளித்து விட்டார். தன் கைங்கர்யத்தை முடித்து விட்டு வீடு திரும்பியதும் திருக்கச்சி நம்பிகளின் உச்சிஷ்டத்தை உண்ண எண்ணியிருந்த இளையாழ்வாருக்கு திருக்கச்சி நம்பிகளின் மகிமையை அறியாமல் அவரது குலத்தின் தாழ்ச்சியை மட்டும் நினைத்து தன் மனைவி தஞ்சம்மாள் செய்த செயல்கள் மிகுந்த ஏமாற்றத்தையும் மன வருத்தத்தையும் அளித்தன.

நம்பிகள் தேவப்பெருமாளுடன் நேரிடையாக உரையாட வல்லவர் என்பது அனைவரும் நன்கு அறிந்திருந்த உண்மை. இளையாழ்வாரின் மனதில் நெடுநாட்களாக சில சந்தேகங்கள் இருந்துவந்தன. அவர் திருக்கச்சிநம்பிகளை அணுகி தன்னுடைய சந்தேகங்களுக்கான விடைகளை (குறிப்பு: ஸ்ரீராமானுஜர் ஆதிசேஷனுடைய மறு அவதாரம் ஆகியபடியால் அனைத்தும் அறிந்தவர். என்றாலும் பூர்வாசார்யர்களின் ஸ்ரீஸூக்திகளை ஸ்தாபிக்கும் முகமாக)   தேவப்பெருமாளிடமிருந்து பெற்றுத்தருமாறு வேண்டினார். அன்றைய தினம் இரவு தன்னுடைய கைங்கர்யங்களை முடித்திருந்த நம்பிகளை தேவப்பெருமாள் வழக்கமான மிகுந்த கருணையுடன் நோக்கினார்.

தேவப்பெருமாள் அனைத்தும் அறிந்தவர் ஆகையால் நம்பிகளை நோக்கி “நீர் ஏதாவது கூற விரும்புகிறீரா?” என்று வினவினார். நம்பிகளும் பெருமாளிடம் இளையாழ்வாரின் மனதில் சில சந்தேகங்கள் இருப்பதாகவும் அதற்கான விளக்கங்களைத் தந்தருளுமாறு வேண்டினார். உடனே தேவப்பெருமாளும் “நான் கலைகளைக் கற்பதற்காக ஸாந்திபினி ஆஸ்ரமத்திற்கு சென்றதைப் போல (ஆதிசேஷ அவதாரமான) அனைத்து சாத்திரங்களிலும் வல்லவரான  இளையாழ்வாரும் தன்னுடைய சந்தேகங்களுக்கான விடைகளை என்னிடம் கேட்கிறார்” என்று கூறினார். பிறகு தேவப்பெருமாளும் அனைவராலும் “ஆறு வார்த்தைகள்” என்று பிரபலமாக அழைக்கப்படும் (ஆறு கட்டளைகளை) நம்பிகள் வாயிலாக இளையாழ்வாருக்கு அனுக்கிரஹித்தருளினார். அவைகள்:

  • அஹமேவ பரம் தத்வம் – நானே எல்லாவற்றுக்கும் மேலான மெய்ப்பொருள்
  • தர்சனம் பேத ஏவ – ஜீவாத்மாக்களும்/அசேதனங்களும் என்னிலிருந்து வேறுபட்டவை (அவை என்னுடைய சரீரமாக விளங்குபவை)
  • உபாயம் ப்ரபத்தி – “என் ஒருவனையே தஞ்சமாகப் பற்றுவாய்” என்னிடத்தில் சரணம் அடைவது ஒன்றே என்னை அடைவிக்கும் வழி.
  • அந்திம ஸ்ம்ருதி வர்ஜநம் – தங்களின் மரணத்தருவாயில் இருக்கும் சரணாகதர்களுக்கு, என்னைப்பற்றிய சிந்தனை கட்டாயமில்லை. வராஹ சரம ஸ்லோகத்தில் நானே அறிவித்தது போல, உன்னுடைய அந்திம காலத்தில் நானே உன்னைப்பற்றிய சிந்தனையை ஏற்கிறேன். (நம் ஸம்ப்ரதாயத்தில் ஆசார்யர்கள் நமக்கு காட்டிச்சென்ற இனிமையான பாதை – நாம் எல்லா நேரத்திலும் நம்முடைய ஆசார்யரைப் பற்றியே சிந்தித்தபடி இருக்கவேண்டும்)
  • தேஹாவஸானே முக்தி – சரணாகதர்கள் தற்போதுள்ள தங்களுடைய இந்த சரீரத்தின் முடிவிலேயே முடிவில்லாத பரமாத்மாவிற்கு கைங்கர்யம் செய்வதற்கான பரமபதத்தை அடைவர்
  • பூர்ணாசார்ய பதாச்ரிதா – மஹாபூர்ணரை (பெரிய நம்பிகளை) ஆசார்யனாக ஏற்றுக்கொள்வாயாக

திருக்கச்சி நம்பிகள் இளையாழ்வாரிடம் சென்று பகவானின் இந்த ஆறு கட்டளைகளையும் தெரிவித்தார். இளையாழ்வாரும் திருக்கச்சி நம்பிகளின் பேருதவிக்காக அவருக்கு நன்றி தெரிவித்தார். அதே சமயம் இளையாழ்வாரும் தன்னுடைய விருப்பமும் அதுவே என்று கூற, திருக்கச்சி நம்பிகள் பகவானின் திருவுள்ளமும் இளையாழ்வாரின் திருவுள்ளமும் ஒரே விதமாக இருப்பது கண்டு பேர் உவகை எய்தினார்

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இளையாழ்வாரும் பெரிய நம்பிகளை ஆசார்யனாக ஏற்று மதுராந்தகத்தில் பஞ்சஸம்ஸ்காரம் செய்துகொண்டு ஸ்ரீராமானுஜர் என்ற திருநாமத்தை ஏற்றார்.

இவற்றைத்தவிர, திருக்கச்சி நம்பிகளைப் பற்றிய விவரங்கள் பூர்வாசார்யர்களின் க்ரந்தங்களில் காணப்படவில்லை. வியாக்யானங்களில் அவரைப்  பற்றிய சில குறிப்புகள் காணப்படுகின்றன. அவை:

  • பெரியாழ்வார் திருமொழி – 3.7.8 – திருவாய்மொழிப் பிள்ளை ஸ்வாபதேச வியாக்யானம் – திருக்கச்சி நம்பிகள் தேவப்பெருமாளிடம் எம்பெருமானுக்கு உகந்த திருநாமம் ஒன்றை தனக்கு சூட்டுமாறு வேண்டி நிற்க, (கஜேந்திராழ்வான் காஞ்சியில் தேவபெருமாளை வழிபட்டதால், கஜேந்திராழ்வான் தேவப்பெருமாளுக்கு மிகவும் பிடித்தமானவர் என்பதால்) எம்பெருமானும் கஜேந்திரதாஸர் என்ற திருநாமத்தை திருக்கச்சி நம்பிகளுக்கு சூட்டி மகிழ்ந்தார்.
  • திருவிருத்தம் – 8 – நம்பிள்ளை ஈடு – ஒரு முறை எம்பெருமானார் சில ஸ்ரீவைஷ்ணவர்களுடன் கோஷ்டியாக அமர்ந்திருந்தார். திடீரென திருக்கச்சி நம்பிகளைப் பற்றிய நினைவு வந்தவராக கோஷ்டியை நோக்கி யாராவது ஒருவர் காஞ்சி சென்று திருக்கச்சி நம்பிகளின் நலம் விசாரித்து வர இயலுமா என்று வினவினார். அப்போது கோஷ்டியில் ஒருவரும் முன்வரவில்லை. மறுநாள் காலை பெரிய நம்பிகள் (மஹாபூர்ணர்) எம்பெருமானாரை அணுகி எம்பெருமானாருக்குத் திருவுள்ளாமானால் தான் காஞ்சிபுரம் சென்று வருவதாகக் கூறினார். எம்பெருமானாரும் மிக்க மகிழ்ச்சியடைந்தவராக பெரிய நம்பிகள் தன் மீது பூரண அதிகாரம் உள்ளவர் ஆகையால் தன் விருப்பத்தை நிறைவேற்றும் தகுதியும் அவருக்கே உள்ளது என்று கூறி அதற்கு சம்மதித்தார். பெரிய நம்பிகளும் காஞ்சிபுரம் சென்று திருக்கச்சி நம்பிகளைச் சந்ததித்து அவர் நலம் பற்றி விசாரித்துவிட்டு உடனடியாக ஸ்ரீரஙத்திற்குத் திரும்பத் தயாரானார். திருக்கச்சி நம்பிகள் எதிர் வரும் உத்ஸவத்தைக் காரணம் காட்டி பெரிய நம்பிகளை சில நாட்கள் கழித்து செல்லலாமே என்று கூறினார். பெரிய நம்பிகளோ, காஞ்சிபுரத்திற்கு வர ஒருவரும் முன்வராததாலேயே தான் வர நேர்ந்ததையும், மேலும் தான் வந்த காரியத்தின் நோக்கம் திருக்கச்சி நம்பிகளின் நலம் பற்றி விசாரித்தல் மட்டுமே அது நிறைவேறிவிட்டபடியால் உடனே கிளம்ப வேண்டும் என்று கூறினார். எம்பெருமானாரின் ஆசார்யரான பெரிய நம்பிகளே திருக்கச்சி நம்பிகளை சந்திப்பதற்காக காஞ்சிபுரம் சென்ற வந்ததிலிருந்து திருக்கச்சி நம்பிகளின் பெறுமையை நாம் நன்கு அறியலாம்.
  • ஆசார்ய ஹ்ருதயம் – 85ம் சூர்னிகை – த்யாக மண்டபத்தில் ஆலவட்டமும் கையுமான அந்தரங்கரை வைதிகோத்தமர் அனுவர்த்தித்த க்ரமம் – அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ப்ராமண குலத்தில் பிறக்காத பாகவதர்களின் பெருமைகளைப்பற்றிக் குறிப்பிடும்போது, தியாக மண்டபம் என வழங்கப்படும் காஞ்சிபுரத்தில் தேவப்பெருமாளுக்கு ஆலவட்டம் வீசிக் கைங்கர்யம் செய்து வந்தவருக்கு (திருக்கச்சி நம்பிகளுக்கு) மிக உயர்ந்த வைதிகோத்தமரான (எம்பெருமானாரே) சேவை செய்ததை இவ்வாறாக குறிப்பிடுகிறார்.
  • மாமுனிகள் தன்னுடைய தேவராஜ மங்களம் 11வது ஸ்லோகத்தில் திருக்கச்சி நம்பிகளின் மேன்மையையும், தேவப்பெருமாளுக்கு அவர் மீதுள்ள பரிவையும் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.

ஸ்ரீ காஞ்சிபூர்ணமிச்ரேண ப்ரீத்யா ஸர்வாபிபாஷனே
அதிதார்ச்சாவ்யவஸ்தாய ஹஸ்தத்ரீஸாய மங்கலம்

திருக்கச்சி நம்பிகளிடம் உள்ள பேரன்பினால் தன்னுடைய அர்ச்சாவதாரப் பெருமைகளை குலைத்துக்கொண்டு உரையாடிய ஹஸ்திகிரீசனுக்கு ஸர்வ மங்கலங்களும் உண்டாகட்டும்.

மாமுனிகள், இந்த ச்லோகத்தின் மூலம் தேவப்பெருமாளுக்கும் திருக்கச்சி நம்பிகளுக்கும் இடையே உள்ள உறவை தெளிவுபடுத்துவதுடன், நாமும் பக்தர்களை முன்னிட்டுக்கொண்டே பகவானை வழிபடவேண்டும் எனத் தெளிவுபடுத்துகிறார்.

நாம் அனைவரும் திருக்கச்சி நம்பிகளின் திருவடித் தாமரைகளில் பணிந்து, அவருக்கும் பகவானுக்கும் உள்ள ஸம்பந்தத்தை போலவே நமக்கும் எம்பெருமான் மற்றும் ஆசார்யன் ஆகியோரிடம் ஸம்பந்தத்தை ஏற்படுத்தித் தரும்படி ப்ரார்த்திப்போம்.

திருக்கசி நம்பி தனியன்

தேவராஜ தயாபாத்ரம் ஸ்ரீ காஞ்சி பூர்ணம் உத்தமம்
ராமாநுஜ முநேர் மாந்யம் வந்தேஹம் ஸஜ்ஜநாச்ரயம்

தேவராஜ அஷ்டகம் என்னும் அற்புத ப்ரபந்தத்தின் மூலம் இவரின் அர்ச்சாவதார அனுபவத்தை நாமும் அனுபவிக்கலாம் – http://ponnadi.blogspot.in/2012/11/archavathara-anubhavam-thuirukkachi-nambi.html.

அடியேன் ராமானுஜன் ராமாநுஜ தாஸன்

ஆதாரம்: https://guruparamparai.koyil.org/2013/02/15/thirukkachi-nambi/

வலைத்தளம் – https://guruparamparai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment