ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுனயே நம:
ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:
திருநக்ஷத்ரம் : ஐப்பசி திருவாதிரை
அவதார ஸ்தலம் : ஸ்ரீரங்கம்
ஆசார்யன் : வடக்குத் திருவீதிப் பிள்ளை. இவர் பிள்ளை லோகாசார்யர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் இருவரிடமும் காலக்ஷேபம் கேட்டவர்.
கூர குலோத்தம நாயன் என்றும் திருநாமம் பூண்ட இவர் ஸ்ரீரங்கத்தில் பிறந்து அங்கேயே வாழ்ந்திருந்தார். இவரே திருமலை ஆழ்வார் எனும் திருவாய்மொழிப் பிள்ளையை ஸம்ப்ரதாயத்துக்கு மீட்டுத் தந்தவர். இவர் பிள்ளை லோகாசார்யரோடு மிகவும் அணுக்கராய் இருந்து கலாப காலத்தில் அவர் நம்பெருமாளைக் காக்க திருவரங்கன் உலா நடந்த போது, ஜ்யோதிஷ் குடியில் லோகாசார்யரின் அந்திம தசையில், தன்னிடம் இளமையிலேயே பஞ்ச ஸம்ஸ்காரம் பெற்றுக் கொண்ட திருவாய்மொழிப் பிள்ளைக்கு ஸம்ப்ரதாய விஷயங்களைக் கற்பித்து அவரை ஸம்ப்ரதாயத்தின் தலைவராக ஆக்கும்படி திருப்புட்குழி ஜீயர், திருக்கண்ணங்குடிப் பிள்ளை, நாலூர்ப் பிள்ளை, விளாஞ்சோலைப் பிள்ளை ஆகியோருக்கு லோகாசார்யர் ஆணையிட்டார்.
மதுரை ராஜ்யத்தில் மந்திரியாக இருந்த திருமலை ஆழ்வாரைச் சந்திக்க கூர குலோத்தம தாசர் முதலில் சென்றார். திருமலை ஆழ்வாரின் நிர்வாகத் திறமையாலும், தமிழ்ப் புலமையாலும், நாட்டு அரசர் இளம் வயதில் மாண்டதாலும், இளவரசருக்கு அறிவுரைகள் சொல்லிக் கொண்டு ராஜ்யத்தையும் நிர்வஹித்து வந்தார். தாசர் முதலில் சென்றபோது நம்மாழ்வாரின் திருவிருத்தத்தைச் சேவித்துக் கொண்டு இருந்தார். அப்போது, திருமலை ஆழ்வார் பல்லக்கில் பவனி வந்து கொண்டிருந்தார். இவரைக் கண்டும், பல்லக்கில் இருந்தவாறே தாஸரிடம் தனக்கும் அதன் அர்த்தத்தைக் கற்பிக்குமாறு வேண்டினார். தாஸரோ அவரை நோக்கி எச்சில் உமிழ்ந்தார். இதைக் கண்ட திருமலை ஆழ்வாரின் சேவகர்கள் தாஸரைத் தண்டிக்க முயல, தாஸரின் பெருமையை உணர்ந்த திருமலை ஆழ்வாரோ அவர்களைத் தடுத்து விட்டார்.
அதன்பின் அவர் இதைத் தம் சிறிய தாயாரிடம் சொல்ல அந்த அம்மை கூரகுலோத்தம தாசர் பெருமை, அவர் ஆசார்யர் லோகாசார்யர் பெருமைகளை விளக்க, அவர் தாசரைத் தேடலானார்.
ஒருநாள் யானை மீது பிள்ளை செல்கையில், தாசர் ஓர் உயர்ந்த குன்றின் மீதமர்ந்து திருமலை ஆழ்வார்க்குக் காட்சி தர, அவர் ஆனையை விட்டிறங்கி தாசர் திருவடிகளில் விழுந்து தொழுதார். தாசரும் உவப்போடு தினமும் அவர் இடம் செல்லலானார். திருமலை ஆழ்வார் தன்னுடன் கூர குலோத்தம தாசரைத் தன் திருமாளிகைக்கு அழைத்துச் சென்று பிள்ளை லோகாசார்யரின் சீரிய உபதேசங்களைச் சுருக்கமாகப் பெற்றார். அந்த உபதேசங்களால் பரிசுத்தம் அடைந்த திருமலை ஆழ்வார், தாசரிடம் தான் ராஜ்ய கார்யத்தில் இருப்பதாலும் தனக்கு அதிக நேரம் இல்லாமையாலும் தன் திருமாளிகைக்கு தினமும் காலையில் அனுஷ்டான காலத்தில் வந்து தனக்கு ஸம்ப்ரதாய விஷயங்களைக் கற்பிக்குமாறு ப்ரார்த்தித்தார். தாசர்பால் பக்தி கொண்ட திருமலை ஆழ்வார் அவர் வசிக்க வைகைக் கரையில் ஓர் இல்லம் சமைத்து எல்லா வசதிகளும் செய்தார்.
தாசர் தினமும் திருமலை ஆழ்வாரைச் சென்று சந்திக்கிறார். திருமலை ஆழ்வார் திருமண் காப்பு அணியும் பொழுது பிள்ளை லோகாசார்யரின் தனியன் சேவிப்பதைக் கண்டு உகக்கிறார் (திருமண் காப்பு அணிந்து கொள்ளும் பொழுது குரு பரம்பரை தனியன்களைச் சேவிப்பது வழக்கம்). அவர் திருமலை ஆழ்வாக்கு அரும்பொருள்கள் அறிவித்தார், ஒருநாள் தாசர் வாராமல் போகவே, பிள்ளை சேவகர்களை அனுப்பி விசாரித்தார். ஆகிலும் விடை வராததால் பிள்ளை தாமே தாசரின் திருமாளிகைக்குச் சென்று, அவரைத் தொழுது தம் பிழைகள் பொறுத்து ஆட்கொள்ள வேண்டினார். அவர் காலக்ஷேப வேளையில் வந்ததால் அவரை அப்படியே ஏற்று தாசரும் அவர்க்கு ஸ்ரீபாத தீர்த்தம் முதலியன ப்ரஸாதித்து அருள, பாகவத சேஷ ப்ரசாதத்தின் பெருமையால் அவர் “கூர குலோத்தம நாயன் திருவடிகளே சரணம்” என்று பல முறை சொல்லி அரசியல் துறைகளை அறவே விட்டு விஷய விரக்தரானார்.
பின்னர் தாசர் திருப்புல்லாணி அருகே சிக்கில் சென்று இருக்கவும், திருமலை ஆழ்வாரும் உடன் சென்று அவர்க்குக் கைங்கர்யங்கள் செய்து சாரார்த்தங்களைக் கற்றார். அதன்பின் தாசர் அவரிடம் மேற்கொண்டு விஷயங்கள் விளாஞ்சோலைப் பிள்ளை, திருக்கண்ணங்குடிப் பிள்ளையிடம் கற்குமாறு கூற அவரும் அவ்வாறே செய்து வரலானார். தாசர் பிள்ளை லோகாசார்யர் திருவடிகளை நெஞ்சில் இருத்தி நலமந்தமில்லாதோர் நாடு புகுந்தார்.
மாமுனிகள், “கூர குலோத்தம தாசம் உதாரம்” என தாசரின் பரோபகார சிந்தையையும் கருணையையும் போற்றுகிறார். ரஹஸ்ய க்ரந்த காலக்ஷேப பரம்பரையில் தாசர் முக்கிய ஸ்தானம் வகிக்கிறார். ரஹஸ்ய க்ரந்த தனியன்களும் அவர்க்கு ஏற்பட்டுள்ளன.
ஸ்ரீ வசன பூஷண திவ்ய சாஸ்திரத்தின் திரண்ட பொருள் “ஆசார்யாபிமானமே உத்தாரகம்” என்பது. இதை விளக்குகையில் மாமுனிகள், “இவன் என் சிஷ்யன்” என நிர்ஹேதுக க்ருபையோடு ஆசார்யர் நினைப்பதே எல்லா உபாயங்களையும் விட்ட ப்ரபன்னனுக்கு உபாயம், வேறில்லை என்பார், கூர குலோத்தமை தாசர் பக்கலிலும் திருவாய்மொழிப பிள்ளை பக்கலிலுமான பிள்ளை லோகாசார்யரின் நிர்ஹேதுக க்ருபா விசேஷமே இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
பிள்ளை லோகாசார்யரை எப்போதும் நினைத்திருக்கும் கூர குலோத்தம தாசரை நாம் எப்போதும் நினைப்போம்.
கூர குலோத்தம தாசரின் தனியன்
லோகாசார்ய க்ருபாபாத்ரம் கௌண்டிந்ய குல பூஷணம்
ஸமஸ்தாத்ம குணாவாஸம் வந்தே கூர குலோத்தமம்
அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்
ஆதாரம்: http://guruparamparai.koyil.org/2012/11/02/kura-kulothama-dhasar/
வலைத்தளம் – https://guruparamparai.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org
Excellent article seamy a dimensions Janakiraman
All your articles abiut Azhvar/Acharyar
arputham.
Perumal/Thayar anugrahaththal padikka kidaiththathu.