ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
திருநக்ஷத்ரம் : சித்திரை ரோஹிணி
அவதார ஸ்தலம் : திருவெள்ளறை
ஆசார்யன் : எம்பெருமானார், திருக்குருகைப் பிரான் பிள்ளான்
சிஷ்யர்கள் : நடாதூர் அம்மாள்
பரமபதம் அடைந்த தேசம் : கொல்லன் கொண்டான் (மதுரை அருகில்)
க்ரந்தங்கள் : சாரார்த்த சதுஷ்டயம் (வார்த்தா மாலையின் ஒரு பகுதி), விஷ்ணு சித்தீயம் (விஷ்ணுபுராண வ்யாக்யானம்)
திருவெள்ளறையில் பிறந்த எங்களாழ்வானுக்கு அவருடைய பெற்றோர் விஷ்ணு சித்தர் என்று திருநாமமிட்டனர். பின்னர் இவர் எம்பெருமானாரின் சிஷ்யரானார். இவர் பகவத்விஷய காலஷேபமும் ஸ்ரீபாஷ்ய காலஷேபமும் திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடியில் அதிகரித்துக்கொண்டார். ஞானம், பக்தி, ஆசார்ய நிஷ்டை முதலியவை கூரத்தாழ்வானைப் போலவே இவரிடம் குடிகொண்டிருந்ததால் எம்பெருமானார் இவருக்கு “எங்களாழ்வான்” என்று திருநாமம் சூட்டியதாகச் சொல்லப்படுகிறது.
நடாதூர் ஆழ்வானின் (எம்பெருமானாரின் சிஷ்யர்) சிஷ்யரான நடாதூர் அம்மாள் (வாத்ஸ்ய வரதாசார்யார்) எங்களாழ்வானின் ப்ரதான சிஷ்யராவார். நடாதூர் அம்மாள் தன் பாட்டனாரான நடாதூர் ஆழ்வானிடம் ஸ்ரீபாஷ்ய காலஷேபம் செய்ய ஆசைப்பட்டபோது அவர் மிகவும் வயது முதிர்ந்த நிலையில் இருந்ததால் பேரனாரை எங்களாழ்வானிடம் சென்று கற்குமாறு அனுப்பினார். நடாதூர் அம்மாள் எங்களாழ்வான் திருமாளிகைக்குச் சென்று கதவைத் தட்டினார். எங்களாழ்வான் “வாசலில் நிற்பது யார்?” என்று கேட்டார். அதற்கு அம்மாள் “நான் வரதன்” என்று பதில் கூறினார். அதற்கு ஆழ்வான் “நான்” செத்த பிறகு இங்கு வரவும் என்று அவரைத் திருப்பி அனுப்பிவிட்டார். அம்மாள் வீட்டிற்கு சென்று தன் பாட்டனாரிடம் நடந்த விஷயத்தைக் கூறி அதன் அர்த்தத்தைக் கேட்டார். ஆழ்வார் தன் பேரனிடம் “நாம் எப்பொழுதும் நம்மை ‘அடியேன் (தாஸன்)’ என்றே மிகவும் அடக்கத்துடன் அறிமுகம் செய்து கொள்ளவேண்டும். நாம் எப்பொழுதும் ‘நான்’, ‘என்னுடைய’ என்பது போன்ற அஹங்காரத்தை விளைவிக்கும் வார்த்தைகளை உபயோகப்படுத்தக்கூடது” என்று கூறினார். “நாம் எல்லோரும் எப்பொழுதும் எம்பெருமானார்க்கும் அவன் அடியவர்களுக்கும் அடியவர்” என்று உணர்ந்துகொண்ட நடாதூர் அம்மாள் எங்களாழ்வான் திருமாளிகைக்குச் சென்று அவரிடம் “அடியேன் வரதன் வந்துள்ளேன்” என்று கூறினார். இதனைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த எங்களாழ்வான் அம்மாளை ஆசையுடன் வரவேற்று அவருக்கு எல்லா ரஹஸ்ய க்ரந்தங்களையும் காலக்ஷேபம் செய்வித்து அருளினார். பின்னர் நடாதூர் அம்மாள் ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தின் மிகப்பெரிய இவரின் ஆசார்யரானபடியால், எங்களாழ்வான் “அம்மாள் ஆசார்யன்” என்றே அறியப்பட்டார்.
எம்பெருமானார் தன் அந்திம காலத்தின் போது எங்களாழ்வானை அழைத்து அவரைத் திருகுருகைப் பிரான் பிள்ளான் திருவடிவாரத்தில் இருக்குமாறு அருளினார்.
நம் வ்யாக்யானங்களில் எங்களாழ்வானின் மேன்மையைப் பறைசாற்றும் சில ஐதிஹ்யங்கள் (சம்பவங்கள்) இடம் பெற்றுள்ளன. அவற்றை இங்கே காண்போம்:
- பெரியாழ்வார் திருமொழி 2.9.10 – திருவாய்மொழிப் பிள்ளை வ்யாக்யானம் – இந்தப் பாசுரத்தில் பெரியாழ்வார் கண்ணனுக்கு நாவல் பழத்தின் மீதுள்ள ஆசையை எடுத்துரைக்கிறார். இப்பாசுர வ்யாக்யானத்தில் எங்களாழ்வானும் நஞ்சீயரும் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவம் கூறப்பட்டுள்ளது. எங்களாழ்வான் இரவு படுத்து உறங்கியதும் பாதி உறங்கிய நிலையில் அவர் கனவில் ஒரு சிறுவன் தோன்றி, தனக்குக் கொஞ்சம் நாவல் பழங்களைக் கொடுக்குமாறு கேட்டான். எங்களாழ்வான் அச்சிறுவனை “நீ யார் ?” என்று கேட்க, “நான் ஆயர் தேவு – நஞ்சீயரின் பிள்ளை” (ஆயர் தேவு என்பது நஞ்சீயரின் திருவாராதனப் பெருமாளின் திருநாமமாகும்) என்று பதில் கூறினான். உடனே எங்களாழ்வான் நஞ்ஜீயரிடம் சென்று உங்கள் திருவாராதனப் பெருமாள் என்னிடம் நாவல் பழங்களைக்கேட்டு என்னைத் தூங்கவிடாமல் செய்கிறார் என்று கூற நஞ்சீயரும் திருவாராதனை செய்யும் அறைக்குச் சென்று எங்களாழ்வானைத் தொந்திரவு செய்யாமல் இருக்கும்படி எம்பெருமானை ப்ரார்த்தித்துக் கொண்டார்.
- முதல் திருவந்தாதி 44 – நம்பிள்ளை / பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – இந்தப் பாசுரத்தில் பொய்கையாழ்வார் எம்பெருமான் எப்படித் தன் பக்தர்கள் ஆசைப்பட்ட உருவத்தையும் பெயரையும் ஏற்றுக்கொள்கிறார் என்பதை நிலை நாட்டுகிறார். முன்பு கூறப்பட்ட திருவாய்மொழிப் பிள்ளையின் பெரியாழ்வார் திருவாய்மொழி வ்யாக்யானத்தில் கூறப்பட்ட ஐதிஹ்யத்தையே வேறு கோணத்தில் எடுத்து கூறுகிறார். எம்பெருமான் எங்களாழ்வான் கனவில் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது “ஆயர் தேவு” என்று நஞ்சீயர் சூட்டிய திருநாமத்தைச் சொல்லியே தன்னைக் கூறிக்கொள்கிறார். இதை எங்களாழ்வானிடமிருந்து அறிந்து கொண்ட நஞ்சீயர் தாம் சூட்டிய பெயரைக்கொன்டே எம்பெருமான் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதால் மிகவும் பரவசமடைந்தார்.
வார்த்தா மாலையில் எங்களாழ்வான் சம்பந்தப்பட்ட சில ஐதிஹ்யங்களைக் (நிகழ்வுகளை) காண்போம் :
- 17 – அம்மங்கி அம்மாள் என்பவர் எங்களாழ்வானிடம் சென்று ஸ்ரீவைஷ்ணவ சம்பிராதயத்தைப் பற்றிய ஞானத்தை தனக்கு விவரிக்குமாறு பிரார்த்தித்துக் கொண்டார். எங்களாழ்வான் அவருக்கு சாரார்த்த சதுஷ்டயத்தை விவரித்துரைக்கிறார். (சாரார்த்த சதுஷ்டயம் என்பது 4 அடிப்படைக் கொள்கைகளும் 4 மிக முக்கியமான கொள்கைகளும்). அவையாவன :
- ஸ்வரூப ஞானம் (ஜீவாத்மாவுக்குத் தான் யார் என்பதைப் பற்றிய அறிவு) தன்னைப் பற்றிய ஞானமானது, தான் பகவானுக்கு அடிமை என்று அறிதலும், தான் எப்பொழுதும் பகவான் இட்ட வழக்காக அவர் விரும்பும் கைங்கர்யங்களைச் செய்வதும் ஆகும்.
- ஸ்வரூப யாதாத்ம்ய ஞானம் (ஜீவாத்மவுக்கு தான் யார் என்பதைப் பற்றிய உயர்ந்த ஞானம்) – தான் எம்பெருமானுக்கு மட்டும் அடியவன் என்ற எண்ணம் இல்லாமல் அவனுடைய அடியவர்களுக்கும் தான் அடிமை என்ற ஞானம் உடையவராய் இருத்தல்.
- விரோதி ஞானம் – (விரோதியைப்பற்றிய அறிவு) – அடியவர்களைப் பிரிந்திருக்கும் பொழுது அதனைப் பொறுக்க மாட்டாமல் தவிப்பது.
- விரோதி யாதாத்ம்ய ஞானம் – (விரோதியைப் பற்றிய முதிர்ந்த ஞானம்) எம்பெருமானின் அடியவர்களை (பாகவதர்களை) அடைந்து அவர்களுடன் இருக்கும் காலத்தில் அவர்களிடம் எந்த குற்றமும் இருப்பதாக நினைக்கக் கூடாது.
- பல ஞானம் – (இலக்கைப்பற்றிய ஞானம்) அடியவர்களின் கட்டளைகளை சிறிதும் யோசிக்காமல் செயல்படுத்துவது.
- பல யாதாத்ம்ய ஞானம் – (இலக்கைப்பற்றிய முதிர்ந்த ஞானம்) இவ்வுலகத்தில் உள்ள எம்பெருமானின் அடியவர்களுக்கு தான் அவர்கள் ஆசைப்பட்ட சேவையைச் செய்வதினால், பரமபதத்தை அடையும் வாய்ப்பு கிடைக்காமல் போனாலும் அவர்கள் ஆசைப்பட்டதை நிறைவேற்றுவது.
- உபாய ஞானம் (எம்பெருமானை அடையும் வழிமுறை பற்றிய ஞானம்) எம்பெருமானுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள சம்பந்தத்தைப் பற்றித் தெளிவாக அறிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல நடந்துகொள்வது (இதற்கு மிகவும் விரிவான விளக்க உரை உள்ளது).
- உபாய யாதாத்ம்ய ஞானம் – (எம்பெருமானை அடையும் வழிமுறைகளைப் பற்றிய முதிர்ந்த ஞானம்) எம்பெருமானே எல்லாவற்றிற்கும் ஆத்மா (சரீரீ) எல்லா ஜீவாத்மாக்களும் அவனுக்கு சரீரம் என்பதை அறிந்தும், எம்பெருமான் தன்னுடைய உகப்பிற்காகவே எல்லாக் காரியங்களையும் செய்கிறான் என்ற ஞானம் பெற்று, மற்ற எல்லா உபாயங்களிலும் மேலுள்ள பற்றுதலை விட்டு எம்பெருமானை அடைய எம்பெருமானே உபாயம் என்ற ஞானத்தைப் பெறுதல்.
- 118 – எங்களாழ்வான் நடாதூர் அம்மாளுக்குச் சரம ச்லோகத்தின் அர்த்த விசேஷங்களை விரித்து உரைத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது “ஸர்வதர்மான் பரித்யக்ஞ” என்ற இடத்தை எங்களாழ்வான் விவரிக்கும்போது, நடாதூர் அம்மாளுக்கு எல்லா சாஸ்த்ரங்களையும் படைத்த எம்பெருமானே எப்படி ஸர்வ ஸ்வதந்த்ரனாய் எல்லா தர்மங்களையும் (உபாயம்) விட்டுவிடும்படிக் கூறுகிறான் என்று ஆச்சர்யம் உண்டாயிற்று. அதற்கு எங்களாழ்வான் பகவானானவன் ஒருவனே எவராலும் குலைக்கமுடியாத நிரங்குச ஸ்வாதந்திரியத்தை உடையவன். அதுவே அவனுடைய உண்மையான ஒரு குணமும் ஆகும். அதனால் அவன் ஒருவன் மட்டுமே “எல்லா தர்மங்களையும் விட்டு என் ஒருவனையே சரணமாகப் பற்று ” என்று கூறத் தகுதியுடையவன் ஆவான் என்று பதில் உரைத்தார். மேலும் ஒரு ஜீவாத்மாவின் தன்மையானது, வேறு எந்த உபாயத்திலும் கை வைக்காது “எம்பெருமானே உபாயம்” என்றிருப்பதாகும். எல்லா ஜீவாத்மாக்களும் எம்பெருமானின் அடியவர்களே. அப்படி இருக்கும் பொழுது “எம்பெருமானே தஞ்சம் (உபாயம்)” என்று இருப்பதே ஜீவாத்மாக்களுக்குப் பொருத்தமுடைய ஒன்றாக இருக்கும். இப்படியாக எங்களாழ்வான் எம்பெருமானின் சரம ச்லோக அர்த்தத்தை சந்தேகத்திற்கு இடமில்லாமல் அவன் (எம்பெருமான்) ஒருவனாலேயே கூறப்பட வேண்டிய ஒன்று என்பதை விளக்கியுள்ளார்.
- 153 – இதில் எங்களாழ்வான் ஒரு ஆசார்யனின் திருக்குணங்களை அழகாக எடுத்துரைக்கிறார். ஆசார்யன் என்பவர் சரீராத்ம ப்ரமத்தை (சரீரமே ஆத்மா என்ற அஞ்ஞானம்) அறவே ஒழித்தவராவார். எம்பெருமானுக்குத் தான் அடிமை என்பதை நன்கு உணர்ந்தவராவார். மற்றும் பிற தேவதைகளை மறந்தும் உபாஸிக்காமல் அந்தந்த தேவர்களுக்கும் ஆத்மாவாக இருந்துகொண்டு செயல்படுத்துபவரும் எம்பெருமானே என்றும், எம்பெருமானே ஸர்வ வியாபி என்பதையும் நன்கு உணர்ந்தவராவார். தான் இவ்வுலகிலுருக்கும்வரை அர்ச்சாவதார எம்பெருமானுக்கு கைங்கரியம் செய்வதிலேயே காலத்தைக் கழித்து பின் பரமபதம் சென்றடைகிறார். மற்றவர்களோ (உண்மையான ஆசார்யர்கள் அல்லாதவர்) இந்த ப்ரபஞ்சம் முழுவதற்கும் தாங்களே தலைமையானவர் என்று கூறிக்கொண்டு தம் சிஷ்யர்கள் மூலமாகவே தனத்தை சம்பாதித்து அவர்களுக்கே உதவுவர்.
- 174 – ஒரு சமயம் பின்பழகராம் பெருமாள் ஜீயர் (நம்பிள்ளையின் மிகவும் அன்புக்குரிய் சிஷ்யர்) உடல்நலம் சரியாக இல்லாமல் இருந்தபோது மற்ற ஸ்ரீவைஷ்ணவர்களை அழைத்துத் தனக்கு விரைவாக குணமடைவதற்கு எம்பெருமானை ப்ரார்த்திக்கும்படி கேட்டுக்கொன்டார். இப்படி பெருமாளை வேண்டிக்கொள்வது ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணமில்லை – (ஒருவன் எதற்காகவும் எம்பெருமானை வேண்டிக் கொள்ளக் கூடாது – வியாதி போகும்படிகூட ப்ரார்த்தித்துக் கொள்ளக் கூடாது என்றால் அதற்காக மருத்துவரிடம் செல்வதைப் பற்றிக் கூறவும் வேண்டுமோ?) இப்படி இருக்கும்போது ஜீயர் எப்படி மற்ற ஸ்ரீவைஷ்ணவர்களை எம்பெருமானிடம் பிரார்த்தித்துக் கொள்ளச் சொல்வார் என்று மற்ற சிஷ்யர்கள் நம்பிள்ளையிடம் சென்று கேட்டனர். இப்படி ஜீயர் செய்ததற்குக் காரணம் என்ன என்று மற்ற ஆசார்யர்களிடம் அறிந்து வரும்படி நம்பிள்ளை தன் சிஷ்யர்களை அனுப்பினார். முதலில் ஸகல சாஸ்த்ரங்களையும் கற்ற எங்களாழ்வானிடம் சென்று சந்தேகத்தைக் கேட்டு பதில் அறிந்து வரும்படி கூறினார். அதற்கு எங்களாழ்வான் “ஜீயருக்கு ஸ்ரீரங்கத்தின் மேலுள்ள பற்றுதல் காரணமாக இன்னும் சில காலம் ஸ்ரீரங்கத்திலேயே இருக்க ஆசைப்படுகிறார் போலும் என்று கூறினார். பின் நம்பிள்ளை தன் சிஷ்யர்களை அழைத்து திருநாராயணபுரத்து அரையர் ஸ்வாமியிடம் இதற்கு காரணம் அறிந்து வரும்படி அனுப்பினார். பின்பழகியராம் பெருமாள் ஜீயருக்கு இன்னும் முடிக்கவேண்டிய முக்கியமான கடமைகள் இருப்பதால் அவர் மேலும் சில காலம் இப்பூமியில் தங்கியிருக்க ஆசைப்படுகிறார் போலும் என்று திருநாராயணபுரத்து அரையர் பதில் கூறி அனுப்பினார். பிறகு நம்பிள்ளை தன் சிஷ்யர்களை அம்மங்கி அம்மாள் ஸ்வாமியிடம் சென்று பதில் அறிந்து வருமாறு அனுப்பினார். அதற்கு அம்மாள் “யாருக்குத் தான் நம்பிள்ளையின் காலக்ஷேப கோஷ்டியை விட்டுப் பரமபதம் செல்ல ஆசையிருக்கும்? அதனால் அவர் மேலும் சில காலம் இங்கேயே தங்கியிருந்து நம்பிள்ளையின் காலக்ஷேபத்தை அனுபவிக்க நினைக்கிறார்” என்று கூறி அனுப்பினார். பின் நம்பிள்ளை தன் சிஷ்யர்களை பெரிய முதலியாரிடம் சந்தேகத்தைக் கூறி பதில் அறிந்து வருமாறு அனுப்பினார். அதற்கு பெரிய முதலியார் பின்பழகராம் பெருமாள் ஜீயருக்கு நம்பெருமாளின் மேல் உள்ள மிகுந்த ஈடுபாட்டினால் எம்பெருமானை விட்டு பரமபதம் செல்வதற்கு ஆசையில்லை போலும் என்று கூறினார். பின்னர் நம்பிள்ளை ஜீயரிடம், எல்லா ஸ்வாமிகளும் அவர் இவ்வுலகத்தில் மேலும் சில காலம் இருப்பதற்கு ஆசைப்படுவதின் காரணங்களைக் கூறியவற்றை எடுத்துரைத்து, அவர் அக்காரணங்கள் ஏதோ ஒன்றினால் தான் எம்பெருமானிடம் தனக்கு வியாதி சீக்கிரம் குணமாகும்படி வேண்டிக் கொள்ளச் சொன்னாரோ என்று வினவினார். அதற்கு ஜீயர் “உங்களுக்கு எல்லாம் தெறிந்திருந்தும் உங்களுக்கு என் மேலுள்ள தயை காரணமாக அதை என் வாயினாலேயே அறிய விரும்புகிறீர்கள்” என்று பதில் கூறினார். “நீங்கள் தினமும் நீராடிவிட்டு வரும்பொழுது என்னுடைய ஆசார்யரான உங்களைக் கண்குளிர தரிசித்து உங்களுக்கு ஆலவட்டம் வீசுவது முதலிய அந்தரங்க பணிவிடைகளைச் செய்வதை விட்டு நான் பரமபதம் செல்வதற்கு எப்படி ஆசைப்படுவேன்?” என்று பின்பழகராம் பெருமாள் ஜீயர் மிகவும் உயர்ந்ததான சிஷ்ய லக்ஷணத்தை (ஆசார்யனைப் பிரிந்திருக்கமுடியாத நிலை) வெளிப்படுத்தினார். இந்த பதிலைக் கேட்டு அனைவரும் ஜீயருக்கு நம்பிள்ளை மேலுள்ள குருபக்தியை நினைத்து மெய்சிலிர்த்தனர். குருபக்தியின் மேன்மையைப் பிள்ளை லோகாசார்யர் தம்முடைய ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்திரத்தில் (சூத்ரம் 333) விளக்கியுள்ளார் – “ஆசார்யன் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தைப் பேணக்கடவன்; சிஷ்யன் ஆசார்யனுடைய தேஹத்தைப் பேணக்கடவன்”. மணவாள மாமுநிகளும் தன்னுடைய உபதேச ரத்தின மாலையில் குரு பக்தியின் மேன்மையைப் பாசுர ங்கள் 65, 66 இல் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆசாரியன் சிச்சனாருயிரைப் பேணுமவன்
தேசாரும் சிச்சனவன் சீர்வடிவை ஆசையுடன் நோக்குமவனென்னும்
நுண்ணறிவைக் கேட்டுவைத்தும்
ஆர்க்கும் அந்நேர் நிற்கை அரிதாம் (65)
பின்பழகராம் பெருமாள் ஜீயர் பெருந்திவத்தில்
அன்பதுவுமற்று மிக்கவாசையினால் நம்பிள்ளைக்கான
அடிமைகள் செய் அந்நிலையை தன்னெஞ்சே
ஊனமற வெப்பொழுதுமோர் (66)
இப்படியாக நாம் எங்களாழ்வான் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களைப் பார்த்தோம். அவர் தம் வாழ்க்கை முழுவதும் பாகவத கைங்கரியத்திலேயே திளைத்திருந்தார். அவர் எம்பெருமானாரின் அன்புக்கு மிகவும் பாத்திரமானவராயிருந்தார். நமக்கும் சிறிதேனும் இப்படிப்பட்ட பாகவத நிஷ்டை கிடைக்கப் பெற வேண்டுமென்று அவருடைய திருவடிகளில் ப்ரார்த்திப்போம்.
எங்களாழ்வான் தனியன்
ஸ்ரீவிஷ்ணுசித்த பத பங்கஜ ஸம்ச்ரயாய சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத: பரேண
நோசேந் மமாபி யதிசேகரபாரதீனாம் பாவ: கதம் பவிதுமர்ஹதி வாக்விதேய:
அடியேன் சாந்தி ராமாநுஜ தாஸி
ஆதாரம்: http://guruparamparai.koyil.org/2013/04/04/engalazhwan/
வலைத்தளம் – https://guruparamparai.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org