திருவரங்கத்து அமுதனார்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுனயே நம:
ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:

Thiruvarangathu-Amudhanar

திருநக்ஷத்ரம் : பங்குனி ஹஸ்தம்

அவதார ஸ்தலம் : ஸ்ரீரங்கம்

ஆசார்யன் : கூரத்தாழ்வான்

பரமபதம் அடைந்த இடம் : ஸ்ரீரங்கம்

பூர்வத்தில் பெரிய கோயில் நம்பி என்ற திருநாமம் பூண்டிருந்த திருவரங்கத்து அமுதனார் கோயில் காப்பாளராகவும் புரோஹிதராயும் இருந்தார். பௌரோஹித்யமாவது கோயிலில் பஞ்சாங்கம், புராணம் வாசிப்பது வேத விண்ணப்பம் செய்வது முதலியன. முதலில் இவர் எம்பெருமானாரின் கோயில் சீர் திருத்த முயற்சிகளை ஆதரிக்கவில்லை. ஆனால் எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபையால் மனம் மாறி, அவர் அருளுக்குப் பாத்ரபூதரானார்.

பெரிய பெருமாள் எம்பெருமானாருக்கு உடையவர் எனும் திருநாமம் சூட்டி, சந்நிதி க்ரமங்களைச் சீர்படுத்தத் திருவுள்ளமானபோது, பெரிய கோயில் நம்பி எம்பெருமானார் பக்கல் சற்று உதாசீனராய் இருக்கவே, ஸ்வாமி திகைப்பூண்டு என் செய்வோம் என்று கவலை கொண்டிருந்தார். அவரை அப்பதவியிலிருந்து விலக்குவதே சரியான உபாயம் என ஸ்வாமி திருவுள்ளம் பற்றியபோது ஒருநாள் புறப்பாட்டின் போது பெருமாள் ஸ்வாமிக்குப் பெரிய கோயில் நம்பி தமது நெடுநாள் அந்தரங்கக் கைங்கர்யபரர் என உணர்த்தினார்.

எம்பெருமானார் கோயில் நம்பி பால் தமக்குள்ள வருத்தம் நீங்கி, ஆழ்வானைக் கொண்டு அவரைத் திருத்திப் பணிகொள்ளத் திருவுள்ளமாகி நம்பியே சீர்திருத்தங்களை ஆதரிக்குமாறு செய்தார், ஆழ்வானின் உபதேசங்களால் மனம் மாறிய நம்பி, எம்பெருமானாரிடம் சிஷ்யராக விரும்பினார். ஆழ்வானால் அவர் திருத்தப்பட்டதால், எம்பெருமானார் அவரை ஆழ்வானுடைய சிஷ்யராகவே ஆக்கினார். அவர் ஆழ்வானின் சிஷ்யரானபின் அவரது அபார கவிதா சாமர்த்யத்தைப் பற்று ஸ்வாமி தாமே அவர்க்கு அமுதனார் என்னும் திருநாமம் சாற்றினார், இதன்பின் அமுதனார் ஆழ்வானிடமும் எம்பெருமானாரிடமும் அளவிறந்த பக்தி பூண்டொழுகலானார்.

அமுதனார் பெரிய கோயில் நிர்வாகத்தை எம்பெருமானாருக்கு ஸமர்ப்பித்தல்

அமுதனாரின் தாயார் பரமபதித்தபோது, அவரது சரம கைங்கர்யங்களில் ஒரு பகுதியாகப் பதினோராம் நாள் செய்யப்படும் ஏகாஹத்தில் பங்குகொள்ள  ஒரு ஸ்ரீ  வைஷ்ணவரைத் தேடினர் , அந்நிகழ்ச்சியில் பங்கு கொள்பவர் இறந்தவரின் பிரேதமாகக் கருதப் படுவார். மேலும் ஓராண்டு  காலம் அவர கோயில் கைங்கர்யம் எதுவும் செய்ய முடியாது, எம்பெருமானார் நியமனப் படி ஆழ்வான் அந்த ஏகாஹத்தில் அமர்ந்தார். அந்த ஸ்தானத்தில் அமர்பவர் த்ருபதோஸ்மி (த்ருப்தி அடைந்தேன்) என்று சொன்னாலே ச்ரார்த்தம் சம்பூர்ணமாகும் என்ற நியமமிருப்பதால், எம்பெருமானாரின் திருவாணைக்குப் பெரியகோயிலை உட்பட்டதாக்க வேணும் என்ற ஆர்ப்பத்தோடு, ஆழ்வான் நம்பியிடம் கோயில் திறவு கோல் கொண்டு சொல்வேன் என்று கூறி, கோயில்  கதவுச் சாவியைப் பெற்று நேரே எம்பெருமானார் மடம் சென்று தொழுது “தேவர் நியமித்த படி ச்ராத்த கார்யம் ஆயிற்று, சாவிகள் இதோ சமர்ப்பித்தேன் இனி கோயில் கார்யங்கள் ஸ்வாமி திருவுளப்படி” என்றார்.  எம்பெருமானாரும், பெருமாள் திருவாக்கை நினைந்து, கோயிலில் பௌரோஹித்யம் புராண படநங்கள் ஆழ்வான் வம்சத்தார்க்கும், திவ்ய ப்ரபந்த சேவைகளை அரையர்க்கும் ஆக்கி, இயற்பாவை அமுதனார் வம்சத்தார்க்காக்கி, அவை இன்றளவும் அவ்வாறே நடக்கிறது,

இராமானுச நூற்றந்தாதி தோற்றமும் பெருமைகளும்

இதன்பின் அமுதனார் எம்பெருமானார் விஷயமாக இராமாநுச நூற்றந்தாதி எனும் 108 பாசுரங்களை இயற்றி நம்பெருமாளுக்கும் எம்பெருமானார்க்கும் சமர்ப்பிக்க, அதை உகந்த நம்பெருமாள் அன்றைய புறப்பாட்டில் எம்பெருமானாரை வாராமல் தடுத்து, அந்தாதியை சேவிக்கச் சொல்லிக் கேட்டுகந்து,அதன்பின் அதை வழக்கமாக்கி சேவிக்க நியமிக்கவும், எம்பெருமான் திருவுளமறிந்த ஸ்வாமியும், நம்மாழ்வார் விஷயமான கண்ணிநுண் சிறுத்தாம்பு பூர்வர்களால் முதலாயிரத்தில் சேர்க்கப்பட்டது போல, அதை இயற்பாவில் சேர்த்து எப்போதும் சேவிக்க நியமித்தார், இதுவே ப்ரபந்ந காயத்ரி என  ப்ரஸித்தி பெற்றது. யஜ்யோபவீதம் பெற்றோர் தினமும் காயத்ரி அநுஸந்தித்தல்போல்  ஸமாச்ரயணமானோர், ஸ்ரீவைஷ்ணவர், ப்ரபன்னர் எனப்படுவோர் இதை ஒரு முறையாகிலும் தினமும் அநுஸந்திக்கவேணும்,

இதில் இராமானுசர் திருநாமம் ஒவ்வொரு பாசுரத்திலும் வருவதால் இப்பெயர் பெற்றது, ஆசார்ய அபிமான  நிஷ்டர் அறிய வேண்டும் அர்த்தங்கள் யாவும் இதிலுள்ளதால், ஆசார்யன் (எம்பெருமானார்) சம்பந்தமடியாக எம்பெருமான் சம்பந்தம் நமக்குண்டு என்றும் எம்பெருமானார் திருவடித் தாமரைகளே நமக்கு உத்தாரகம் என்பதை இப்ரபந்தம் உறுதிப்படுத்துகிறது.

பேறொன்று மற்றில்லை எனும் 45ம் பாசுரத்தையும், நின்றவண் கீர்த்தி எனும் 76ம் பாசுரத்தையும்  வைத்து ஆசார்யர்களில் தலைவரான நடாதூரம்மாள் எம்பெருமானாரே ப்ராப்ய ப்ராபகங்கள் என்று அறுதியிட்டார், பெரியவாச்சான் பிள்ளை குமாரர் நாயனாராச்சான் பிள்ளை தம் சரமோபாய நிர்ணயத்தில் (http://ponnadi.blogspot.in/p/charamopaya-nirnayam.html) ஸ்வாமியின் வைபவங்களை விளக்க இப்ரபந்தத்தைப் பரக்க உதாஹரிக்கிறார்,

மாமுனிகள் இதற்கு ரத்தினச் சுருக்கமான ஒரு திவ்ய வ்யாக்யானம் அருளியுள்ளார். அதன் தொடக்கத்தில் அமுதனார் மற்றும் நூற்றந்தாதியின் பெருமைகளை மிக அழகாக விளக்கியுள்ளார்:

ஆசார்யனையே சார்ந்திருக்கும் சரம பர்வ நிஷ்டையே திருமந்திரம், மற்றும் அனைத்துப் பாசுரங்களின் உட்பொருள். நம்மாழ்வார் விஷயமான தம் பிரபந்தத்திலும்  தம் அனுஷ்டானத்திலும் மதுரகவி ஆழ்வார் இதைக் காட்டினார், அமுதனாரும் மதுரகவி ஆழ்வார் போன்றே எம்பெருமானாரிடத்துத் தம் ப்ரதிபத்தியை வெளியிடுகிறார், ஆசார்ய நிஷ்டர்கள் தம் நிஷ்டையால் எம்பெருமானையே அடிக்கிறார்கள். இவர் எம்பெருமனாரின் நிர்ஹேதுக க்ருபையினாலும் ஆழ்வானின் கருணைமிக்க விடா முயார்சியாலும் திருத்தப்பட்டவர். எப்படி மதுரகவி ஆழ்வார்  11 பாசுரங்கள் மூலமாக தன்னுடைய ஆசார்ய நிஷ்டையை எல்லோருடைய நன்மைக்காகவும் வெளியிட்டாற்போலே, இவரும் 108 பாசுரங்கள் மூலமாக அனைவரும் ஆசார்ய நிஷ்டையைப் பற்றி அறிந்து கொண்டு அனுஷ்டிப்பதற்காக வெளியிட்டார். உபவீததாரிகளுக்கு காயத்ரிபோலே ப்ரபன்னர்களுக்கு இது என்று மாமுனிகள் திருவுள்ளம், ஆகையால் இது ப்ரபன்ன ஸாவித்ரி என்று அழைக்கப் படுகிறது,

அமுதனார் நிபுணத்வம்

அமுதனார் தென்கலையும் (தமிழ்) வடநெறியும் (ஸம்ஸ்க்ருதம்) திகழ்ந்த நாவர், அவரது அளவற்ற பாண்டித்யத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு:

திருவிருத்தம் 72ம் பாசுரத்தில் ஆழ்வார் நிலையை நம்பிள்ளை அப்பாசுரத்துக்கான தம் உரையில் விளக்குகிறார், பராங்குச நாயகி இரவில் எம்பெருமானின் பிரிவை உணர்கிறாள். நிலவில் விரகம் அதிகம், அப்போது குளிர் தென்றல் மேலும் கொடிது. இந்நிலையில் சிறு பிறை நிலா வரினும் இருள் விலகும். சேர்த்தியில் நிலவு இனிது, பிரிவில் பிறை நிலவும் கொடிது. இதை விளக்க அமுதனார் தரும் உதாரணம் சுவையானது. காட்டு வழியில் தனியே இரவில் சென்று கொண்டிருந்த ஒரு மெலிந்த பிராமணனை ஒரு கொடிய விலங்கு துரத்த, அவன் ஓடி ஒரு மரம் ஏறித் தன்னைக் காத்து கொண்டான். அப்பொழுது அவ்விலங்கை ஒரு புலி அடித்து உண்கிறது, பிராமணன் நிம்மதி அடையும் போது புலி மேலே மரத்தை நிமிர்ந்து பார்க்க அவன் அச்சம் பன்மடங்காகிறது போல், பிறை நிலவில் பராங்குச நாயகி பிரிவுத் துயர் இருளில் இருந்ததை விட மிகுந்து விட்டதாம்.

பட்டரும் அமுதனாரும்

பட்டர் தாம் ஞான வைராக்கியங்கள் மிக்க ஆழ்வான் குமாரர் என்பதில் செருக்குள்ளவர், இதை அவரே ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில் வெளியிடுகிறார். அமுதனாரும் நூற்றந்தாதியுயில் “மொழியைக் கடக்கும்” பாசுரத்தில் ஆழ்வான் பெருமையைப் பரக்கத் பேசி ஸத்தை பெற்றார். ஒருக்கால் அமுதனார் வேறொரு ஸ்ரீவைஷ்ணவர் மூலம் பட்டருக்கு, “நீர் ஆழ்வானோடு தேஹ சம்பந்தமுள்ளவர், அடியேனுக்கு அவரோடு ஆத்ம சம்பந்தமுண்டு காணும்” என்று தெரிவிக்க, பட்டர், “அந்தப் பெருமையை நீரே சொல்லலாகாது” என்கிறார். நம் பூர்வாசார்யர்கள் இவ்விஷயங்களை பெரிது படுத்தார், அமுதனார் ஆழ்வான் பக்தியிலேயே ஊன்றி இருந்தார். நம் பூர்வர்கள் மிகவும் அரிய சமயங்களில் சில மனவேற்றுமைகள் கொண்டிருந்தாலும் அதைப் பெரிதுபடுத்தாமல் பெருந்தன்மையுடன் வாழ்ந்து காட்டியது நாம் உணர்ந்து கைக்கொள்ளத்தக்கது.

ஆர்த்தி ப்ரபந்தத்தில் மாமுனிகள் 40ம் பாசுரசத்தில் நாம் ஆசார்ய பக்தியில் இடையறாதிருந்து எம்பெருமானாரிடம் சரணடைந்து, இராமானுசரடியார்களுடன் பொழுது போக்கி, இராமானுச நூற்றந்தாதியை அநுஸந்தித்து சம்சாரக் கடலைத் தாண்டலாம் என்கிறார்.

இப்படி, நாமும் அமுதனாரின் மேன்மைமிகு சரித்திரத்தில் ஒரு சில துளிகளை அநுபவித்தோம். இவர் பாகவத நிஷ்டையில் நிலை நின்று, எம்பெருமானார் மற்றும் ஆழ்வானின் அபிமானத்தைப் பெற்றவர். நாமும் இப்படிப்பட்ட பாகவத நிஷ்டையை அடைய இவர் திருவடிகளில் ப்ரார்த்திப்போம்.

அமுதனாரின்  தனியன்:

ஸ்ரீரங்கே மீநஹஸ்தே ச ஜாதம் ரங்கார்யநந்தநம்
ராமாநுஜபதாஸ்கந்தம் ரங்கநாதகுரும் பஜே

அமுதனார் திருவடிகளே சரணம்

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://guruparamparai.koyil.org/2013/03/26/thiruvarangathu-amudhanar/

வலைத்தளம் – https://guruparamparai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

1 thought on “திருவரங்கத்து அமுதனார்”

Leave a Comment