கிடாம்பி ஆச்சான்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுனயே நம:
ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:

kidambi achan

திருநக்ஷத்ரம்: சித்திரை, ஹஸ்தம்

அவதார ஸ்தலம்: காஞ்சிபுரம்

ஆசார்யன்: எம்பெருமானார்

பிறந்தபோது அவர்க்குத் திருக்கச்சி நம்பிகள் துதித்தபடி தேவப்பெருமாளின் திருநாமம் ப்ரணதார்த்திஹரன் என்பது சாத்தப்பட்டது.

இவரே திருக்கோஷ்டியூர் நம்பியால் எம்பெருமானாருக்குத் தளிகை அமுது பண்ணி சமர்ப்பிக்க நியமிக்கப்பட்டவர். இச்சரித்திரம் 6000 படி குரு பரம்பரா ப்ரபாவத்திலும் வேறு சில பூர்வாசார்ய க்ரந்தங்களிலும் அழகாக விளக்கப்பட்டுள்ளது.

kidambi achan-emperumanarஎம்பெருமானார் கத்ய த்ரயம் சாதித்து நித்ய கிரந்தமும் அருளிச் செய்து பலவகையிலும் ஸம்பிரதாய ஸம்ரக்ஷணம் செய்தபின்பும் அவர்பால் அஸூயாளுக்களாய் நின்றார் இருந்தனர் ஸ்ரீரங்கத்தில். அவர்கள் அவரது ஸித்தாந்தத்தில் தம் வேறுபாடு காரணமாக, அவர்தம் கருத்தை மறுத்துரைக்க மாட்டாமல் அவரையே முடிக்க நேரம் பார்த்து அவரது பிக்ஷையில் நஞ்சு கலந்துவிட எண்ணி அவர்க்கு பிக்ஷை இடும் பெண்மணியிடம் அவள் இடும் அன்னத்தில் விஷம் கலந்து தந்தனர்.

அவ்வில்லம் வந்த எம்பெருமானாரும் அவ்வுணவை ஏற்றார். கணவனின் இச்செயலை விரும்பாத அவள், அவர்க்கு இட்ட உணவிலிருந்து இதைத் தனியே வைத்து முகத்தில் சோகம் காட்ட ஸ்வாமி இதை உணர்ந்து அந்த அன்னத்தைத் திருக்காவேரியில் கரைத்து உபவாசம் இருந்தார். இதைக் கேள்வியுற்ற திருக்கோட்டியூர் நம்பி உடனே திருவரங்கம் வர, எம்பெருமானார் அவரை எதிர்கொண்டு அழைக்கக் காவேரிக் கரைக்கு எழுந்தருளினார். கொதிக்கும் வெயிலில் ஸ்வாமி நம்பிகள் திருவடிகளில் தண்டம் சமர்ப்பிக்க விழுந்தபோது நம்பி ஸ்வாமிப்பால் மிக்க அன்பர் யாரென அறிய அவரை எழுப்பாதிருக்க, அங்கிருந்த கிடாம்பி ஆச்சான், “ஐயோ இது என்ன ஆசார்ய சிஷ்ய வ்ருத்தி! இளந்தளிர்போல் எம்பெருமானார் சூடு மணலில் கிடக்கவும் காண ஒண்ணுமோ!” என்று ஓடிப் பரிவுடன் அவரைத் தூக்கவும், நம்பி, “ஆச்சான்! நாமும் உம்போல் பரிவார் எம்பெருமானார்க்கு யார் என்று அறியவே காத்திருந்தோம், இன்று முதல் இவர்க்கு நீரே தளிகை அமுது சமைத்து ஸமர்ப்பியும். பிக்ஷை அமுது வேண்டா” என்று நியமித்தருளினார். அன்று முதல் கிடாம்பி ஆச்சானே ஸ்வாமிக்குத் தளிகை பண்ணி ஸமர்ப்பிக்கும் கைங்கர்யம் இடைவிடாது செய்துவந்தார்.

வ்யாக்யானங்களில் கிடாம்பி ஆச்சான் தொடர்புள்ள ஐதிஹ்யங்கள்:

  • திருப்பாவை பாசுரம் 23 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம்: இப்பாசுரத்தில் ஆண்டாள், ஆய்ச்சிமார் கண்ணன் எம்பெருமானிடம் தங்களுக்கு வேறு புகல்  இல்லை என்று சொல்வதாகப் பாடுகிறாள். ஆய்ச்சியருக்கு எம்பெருமான் புகலாக உளனாதலால் அவர்களுக்குப் புகல் இல்லாமலில்லை . ஒருமுறை கிடாம்பி ஆச்சான் திருமாலிருஞ்சோலை அழகரைச் சேவிக்கச் சென்றபோது அவரை அழகர் ஏதாவது மங்களாசாசனம் செய்யச் சொல்ல, அவர், ஆளவந்தாரின் “அகதிம் சரணாகதம்” எனும் ச்லோகத்தைச் சேவிக்கவும், அழகர், ”ஆச்சான்! உமக்கு எம்பெருமானார் புகலாக இருக்கும்போது அகதி என்று சொல்லிக் கொள்ளலாமோ!” என்று கடிந்தாராம்.
  • திருவிருத்தம் 99 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம். ஆச்சான் காலந்தாழ்த்து வர, எம்பெருமானார் காரணம் கேட்டார். ஆச்சான், ஆழ்வானின் காலக்ஷேபம் அநுபவித்து வந்ததாகக் கூறினார். எம்பெருமானார் அங்கு என்ன நடந்தது என்று வினவினார். ஆச்சான், “ஆழ்வான் ஆழ்வாரின் பாசுரத்தைப் பாடினார். பிறந்தவாறும் என்றார், கண்ணீர் பெருக உருகி, பேச்சின்றி இருந்தார் சிறிதுபோது, பின்னர் ஓ ஆழ்வாரின் பாவம் நமக்கு வாராது இதற்கு ஒன்றும் விளக்ககம் சொல்ல முடியாது என்று காலக்ஷேபத்தை நிறுத்திவிட்டார்” என்றார். எம்பெருமானார், “ஆழ்வாரின் பெருமாள் பக்தியைவிட ஆழ்வான் ஆழ்வாரிடம் கொண்ட பக்தி மிகவும் ஆழமானது.அவர்க்கு ஆழ்வார் திருவாக்கில் இருக்கும் ஈடுபாடு அளவற்றது” என்றார்.
  • திருவாய்மொழி 4.8.2 – நம்பிள்ளை ஈடு. ஆழ்வார் எம்பெருமான் தம்மைத் தன் கைங்கர்யத்தில் ஈடுபடுத்திய கருணையை எண்ணிக் கரைகிறார். இவ்விடம் கிடாம்பி ஆச்சான் தொடர்புள்ள ஒரு ஐதிஹ்யம் காட்டப்படுகிறது. எம்பெருமானார் மடத்தில் ததீயாராதனை நடந்தபோது ஒருநாள் நடந்த விஷயம். உணவு அருந்தும்போது ஒவ்வொருவருக்கும் நீரருந்தத் தனிப் பாத்திரம் வைக்காமல், ஒரு பானையில் ஓட்டைவழியே நீர் வேண்டுவோருக்கு வார்க்கும் கைங்கர்யம் செய்துகொண்டிருந்த ஆச்சான், ஒருவர் நீர் வேண்ட, அவரிடம் எட்டி நின்று ஒரு காலை சாய்த்துக்கொண்டு பக்கவாட்டில் நின்று நீர் ஊற்ற, எம்பெருமானார், அருகில் சென்று ஆச்சான் முதுகில் தட்டி, “ஆச்சான்! நேராக நின்று நீர் சாதியும்!” என்று கடிந்துகொண்டார். நீர் சாதிக்கும்போது நேராக நின்று ஊற்றினால் சரியாக வேண்டியவர் வாயில் விழும் என்பதை ஸ்வாமி இப்படிக் காட்டினார். “பணிமானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட” என்பது இங்கு ஆழ்வார் திருவாக்கு. எம்பெருமானே, தவறுகள் நிகழாமல் அடியேன் கைங்கர்யம் செய்ய என்னைத் தடுத்துத் திருத்தினாய் என்று ஆழ்வார் திருவுள்ளம். இதை விளக்க வ்யாக்யாதா ஆச்சான் மற்றும் எம்பெருமானார் தொடர்பான இந்த ஐதிஹ்யத்தைக் காட்டுகிறார்.
  • திருவாய்மொழி 6.7.5 – நம்பிள்ளை ஈடு – ஆழ்வார் திவ்யதேச ப்ரபாவங்களைச் சொல்லும் போது, பாசுரத்தில் கண்கள் படைத்த பயனாக அவ்விடங்களில் எழிலை அனுபவிப்பதே என்று பேசுகிறார். ஆச்சானும் முதலியாண்டானும் ஒருக்கால் திருக்குடந்தை சேவிக்கக் கிளம்பி வழியில் அப்பக்குடத்தான் சந்நிதியைக் கண்டு பெரு வியப்பும் மகிழ்ச்சியும் மீதூரப் பெற்று மயங்கினர் என்கிறார் வ்யாக்யாதா.
  • திருவாய்மொழி 10-6-1 – கிடாம்பி ஆச்சான் பட்டரிடம் பெரும் ஈடுபாடும் பணிவும் கொண்டிருந்தார். ஓர் அடியார் ஆச்சானிடம்,”நீர் ஏன் பட்டரிடம் அவரது சிஷ்யர்களைவிட பக்தியோடிருக்கிறீர்?” என்று கேட்க, ஆச்சான்,”ஒரு நாள் எம்பெருமானார் சந்நிதியிலிருந்த போது பட்டர் வரவும் அவரை எம்பெருமானார் பெரிய பெருமாளிடம் கொண்டுபோய் நிறுத்தி ஒரு ச்லோகம் விண்ணப்பித்து அர்த்தம் கூற நியமித்தார். பட்டர் கூறி முடித்ததும் அவரைக் கையைப் பிடித்து வெளியே அழைத்துவந்து, எல்லாரிடமும், நீங்கள் என்னிடம் உள்ளதுபோல் இவரிடமும் நீங்கள் யாவரும் இருக்க வேண்டும் என்றார். ஆகவே எம்பெருமானார் நியமனப்படியே பட்டரிடம் பெருமதிப்புக் கொண்டுள்ளோம்” என்றார்.

கிடாம்பி ஆச்சான் மரபினரான கிடாம்பி நாயனார் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீ பாஷ்யம் கற்பித்தபோது, நாயனார் வேண்டியபடியே மாமுனிகள் அவர்க்குத் தம் ஆதிசேஷ வடிவைக் காட்டவும், அதுமுதல் நாயனார் மாமுனிகளிடம் மிகப் பெரும் மதிப்போடிருந்தார்.

பாகவத நிஷ்டையில் இருந்த கிடாம்பி ஆச்சானின் க்ருபையால் நாமும் எம்பெருமானார் அருளால் அந்நிலை எய்துவோமாக.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: http://guruparamparai.koyil.org/2013/03/31/kidambi-achan/

வலைத்தளம் – https://guruparamparai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

1 thought on “கிடாம்பி ஆச்சான்”

Leave a Comment