ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
திருநக்ஷத்ரம்: ஆவணி ரோஹிணி
அவதார ஸ்தலம்: மதுரமங்கலம்
ஆசார்யன்: கோயில் கந்தாடை ரங்காசார்யர் ஸ்வாமி (சண்டமாருதம் தொட்டாசார்யர் திருவம்ஸம்)
சிஷ்யர்கள்: பலர்
பரமபதித்த இடம்: ஸ்ரீபெரும்பூதூர்
இவர் மதுரமங்கலத்தில் ராகவாசார்யருக்கும் ஜானகி அம்மாளுக்கும் ஆவணி ரோஹிணி அன்று அவதரித்தார். கண்ணன் மற்றும் பெரியவாச்சான் பிள்ளை ஆகியோரின் திருநக்ஷத்திரத்தன்று பிறந்ததால் இவருக்கும் கிருஷ்ணன் என்றே பெயரிட்டனர். இவர் சீரியதான ஸ்ரீவத்ஸ குலத்தில் அவதரித்தார். இவர் ஆங்கில ஆண்டு 1805இல் அவதரித்தார்.
அவருடைய பெற்றோர்கள் தக்க வயதில் அந்தந்த வயதிற்குரிய வைதீக ஸம்ஸ்காரங்களை கிருஷ்ணமாசார்யருக்கு செய்து வைத்தனர். சிறு வயது முதற்கொண்டே இவர் எம்பெருமானிடத்தில் மிகுந்த பற்றுதல் உடையவராய் விளங்கினார். எப்பொழுதும் எம்பெருமானின் விக்ரஹங்களை வைத்துக்கொண்டு விளையாடுவார். மேலும் பகவத் விஷங்களில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.
உரிய வயதில் இவருக்கு மணம் முடித்து வைக்க விரும்பிய இவருடைய தந்தையார், பெண் பார்க்கும் படலத்தை துவக்கினார். ஒருசமயம் பெண் தேடும் நிமித்தம் இவருடைய தந்தையாரும் கிருஷ்ணமாசார்யரும் வெளியூர் புறப்பட்டனர். பிரயாணத்தின்போது, ஒரு தம்பதியினர் தங்களுடைய குழந்தையுடன் பயணித்ததை கவனிக்க நேர்ந்தது. அதில் கணவன் அதிகப்படியான சுமைகளுடன் குழந்தையையும் சுமந்தபடி தன் மனைவியுடன் அடிக்கடி சண்டையிடுவதும் பின்னர் அவ்வப்போது அவள் மீதுள்ள மோகத்தின் காரணமாக அமைதியடைவதுமாய் இருப்பதை காணமுடிந்தது. இதைக் கண்ணுற்ற கிருஷ்ணமாசாரியர் அதிர்ந்து போனார். உடனே தன்னுடைய தந்தையாரிடம் தனக்கு திருமணமே வேண்டாம் எனக் கூறிவிட்டார். இச்சம்பவத்திற்கு பிறகு, ஒரு சமயம் கோயில் கந்தாடை ரங்காசார்யர் அவருடைய கப்பியாமூர் கிராமத்திற்கு வந்திருந்தபோது ஆசார்ய ஸம்பந்தம் கிடைக்கப்பெற்றார். ஆசார்யர் இவருக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்துவைத்து ஸத் ஸம்ப்ரதாயத்தின் முக்கிய தத்துவார்த்தங்ளைப் போதித்தார். இதனைத் தொடர்ந்து ஆசார்ய கைங்கர்யத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதுடன் ஆசார்யருடன் இணைந்தே பல திவ்யதேசங்களுக்கும் யாத்திரைகள் சென்றுவந்தார்.
ஒரு சமயம் அவர் திருவேங்கடத்தில் தங்கி இருந்தபோது, எம்பார் அவருடைய கனவில் தோன்றி மதுரமங்கலம் வரும்படி அழைத்து தனக்கு குளிராக இருப்பதாகவும் அதனால் ஒரு சால்வை கொண்டுவரும்படியும் பணித்தார். கிருஷ்ணமாசார்யர் திருவேங்கடமுடையானிடம் சென்று விஷயத்தைச் சொல்லி உத்தரவு வேண்டி நின்றார். திருவேங்கடமுடையானும் தன்னுடைய சால்வையையே கொடுத்து ஆசீர்வத்து விடை கொடுத்தனுப்பினார். கிருஷ்ணமாசார்யர் அந்த சால்வையை மதுரமங்கலம் எடுத்துச் சென்று எம்பாரிடம் சமர்ப்பித்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, எம்பாரின் ஆசீர்வாதத்தினால் கிருஷ்ணமாசார்யருக்கு சன்னியாசத்தில் தீராத விருப்பம் மேலிட்டது. திருவேங்கடத்திற்கு திரும்பிய அவர் வகுளாபரண ஜீயரிடம் (பெரிய ஜீயர்) தனக்கு சன்னியாஸாச்ரமத்தை அளிக்கும்படி வேண்டினார். கிருஷ்ணமாசார்யர் இன்னும் வயதில் மிகவும் இளையவராக இருப்பதாக நினைத்த வகுளாபரண ஜீயர் சில காலம் பொறுத்திருக்கும்படி கூறினார். ஆனால், கிருஷ்ணமாசார்யர், எம்பாருடைய அருளினால் தான் பற்றற்ற நிலையை எட்டிவிட்டதாகவும் தன்னால் தொடர்ந்து ஸம்ஸாரத்தில் நீடிக்க இயலாது என்று கூறியும் தனக்கு உடனே ஸன்யாஸத்தை அளிக்கும்படி வற்புறுத்தினார்.
வகுளாபரண ஜீயர், எம்பெருமான் ஆணை அதுவானால் தனக்கு சித்தம் எனச் சொல்லிவிட்டு திருமலைக்குச் சென்று விட்டார். வழியில் முறையாக தயார் செய்யப்பட்ட த்ரிதண்டம் ஒன்றை கண்டார். அதையும் எடுத்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்தார். இரவு நித்திரையில் எம்பெருமான் அவர்முன் தோன்றி கிருஷ்ணமாசார்யருக்கு அந்த த்ரிதண்டத்தை அளித்து ஸந்யாஸாச்ரம ஸ்வீகாரம் செய்து வைக்கும்படி கட்டளையிடுகிறார். மிக்க மகிழ்ச்சி அடைந்த பெரிய ஜீயர், கிருஷ்ணமாசாரியாரை அழைத்து அவர்க்கு ஸந்யாஸாச்ரம ஸ்வீகாரம் செய்து செய்து வைத்தார்.
திருமலை ஜீயரும் எம்பார் ஜீயரும்
கிருஷ்ணமாசார்யருக்கு திருவேங்கடமுடையானிடம் இருந்த பக்தியை அறிந்த வகுளாபரண ஜீயர் அவருக்கு திருவேங்கட ராமானுஜ ஜீயர் என பெயர் சூட்டி மகிழ்ந்தார். மதுரமங்கலம் திரும்பிய திருவேங்கட ஜீயர், சில காலம் அங்கேயே தங்கியிருந்து எம்பாருக்குப் பணிவிடைகள் செய்து வந்தார். அது முதல் மதுரமங்கலம் எம்பார் ஜீயர் என அன்புடன் எல்லோராலும் அழைக்க்ப்பட்டார்.
அவர் பல திவ்யதேசங்களுக்கு விஜயம் செய்தபின் இறுதியாக எம்பெருமானாரின் அவதார ஸ்தலமான ஸ்ரீபெரும்பூதூர் வந்தடைந்தார். அங்கேயே தங்கி எம்பெருமானாருக்கு சேவை செய்யவும் தீர்மானித்தார். அவருடய சீடர்கள் அவர் தங்குவதற்கேற்ப கோயிலுக்கு தெற்கே ஒரு மடத்தையும் நிறுவினர்.
ஆதி கேசவப் பெருமாள் – பாஷ்யகாரர் ஸன்னிதி, ஸ்ரீபெரும்பூதூர்
எம்பார் ஜீயர் மடம், மணவாள மாமுனிகள் கோயில் தெரு, ஸ்ரீபெரும்பூதூர்
அவர் ஸ்ரீபெரும்பூதூரில் இருந்த காலங்களில் பல ஸ்ரீவைஷ்ணர்கள் அவரை அணுகி அவரிடம் நம்முடய ஸத்ஸம்ப்ரதாயத்தின் மிக உயர்ந்த கோட்பாடுகளைக் கற்று அறிந்தனர். அவரும் நமது பூர்வாசார்யர்களின் ஸ்ரீஸுக்திகளையும் அவற்றில் அடங்கியுள்ள தத்துவார்த்தங்களையும் விளக்கியதோடு அவருடய காலத்தில் பல வித்வான்களையும் உருவாக்கினார்.
அவர் இந்த லீலா விபூதியில் குறுகிய காலமே வழ்ந்து தன்னுடைய 77 வது வயதில் விஷு வருடம் தை மாதம் கிருஷ்ணபக்ஷ த்ரயோதசி திதியில் பரமபதத்திற்கு எழுந்தருளினார்.
அவர் இயற்றிய பல நூல்களில் தலை சிறந்ததாக போற்றப்படுவது பிள்ளை லோகாசார்யர் இயற்றிய ஸ்ரீவசனபூஷணத்திற்கு மணவாள மாமுனிகள் அருளிச்செய்த வ்யாக்யானத்திற்கான அரும்பதம் (விளக்க உரை நூல்). ஸ்ரீவசனபூஷண திவ்ய சாஸ்த்ரத்திற்கு மிக உன்னதமான விளக்க உரை எழுதியதோடு நில்லாமல், ஸ்ரீவசனபூஷணத்தின்படி தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் பகவத் மற்றும் பாகவத கைங்கர்யத்திற்கே அர்ப்பணித்தார். ஸத் ஸம்ப்ரதாயத்தின் தத்துவங்களை நிலை நிறுத்தக்கூடிய பல கிரந்தங்களையும் இவர் சாதித்துள்ளார்.
விஷ்ணுபுராணம், தத்வ த்ரயம், யதீந்த்ர மத தீபிகா போன்ற நூல்களில் உள்ள விளக்கங்களை அடிப்படையாகக்கொண்ட தன்னுடைய நூலில் ப்ரஹ்மாண்டம், அதன் வடிவம் பற்றி மிக அழகாக விவரித்துள்ளார். இந்த விளக்கம் ஒரு சித்திர வடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீப காலத்தில் ஸ்ரீ ரவி எனப்படும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவரால் மறுபதிப்பீடாக வெளியிடப்பட்டது.
திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமியின் சித்திரப் படம்
ப்ரஹ்மாண்டம் – ஒரு ப்ரஹ்மாவின் உலகம் – சித்திர வடிவில்
படைப்புகள்:
அவருடைய படைப்புகளில் சில:
- ஸ்ரீவசனபூஷணம் அரும்பதம்
- ஸித்தோபாய ஸுதரிசனம்
- ஸத் தரிசன ஸுதரிசனம்
- துத் தரிசன கரிஸனம்
- விப்ரதிபத்தி நிரஸனம்
- நம்மாழ்வாரின் “செத்தத்தின் …” ஸ்ரீஸூக்தி வ்யாக்யானம்
- சரணாகதிக்கு அதிகாரி விசேஷணத்வ ஸமர்த்தனம்
- ஜ்யோதிஷ புராணங்களுக்கு ஐக கண்ட்ய ஸமர்த்தனம்
- துருபதேஸதிக்காரம்
- சரண சப்தார்த்த விசாரம்
- ச்ருத ப்ரகாசிகா விவரநம்
- முக்தி பதசக்தி வாதம்
- ப்ரஹ்மபத சக்தி வாதம்
- பூகோள நிர்ணயம்
- த்யாக சப்தார்த்த டிப்பணி
- கீதார்த்த டிப்பணி
- கைவல்ய ஸத தூஷணி
- ஸ்ரீராமானுஜ அஷ்டபதி
- ஸித்தாந்த தூளிகை
- ஸித்தோபாய மங்கள தீபிகை
- தர்மக்யா ப்ராமாந்ய ப்ரகாசிகை
- ஸித்தாந்த பரிபாஷை
- ஸ்ரீராமானுஜரின் தெய்வீக வடிவத்தில் மூழ்குதல் – திருமஞ்ஞன கட்டியம், மற்றும் பல.
இவ்வாறாக, அப்பன் திருவேங்கட ராமானுஜ ஜீயர் அவர்களின் புகழ்மிக்க வாழ்வில் சில துளிகளை அனுபவித்தோம். அவர் ஒரு தலைசிறந்த ஞானியாக விளங்கியதோடு தன்னுடைய படைப்பிலக்கியங்களின் மூலம் நம்முடைய ஸம்ப்ரதாயதிற்கு பலவகையில் தொண்டு புரிந்துள்ளர். நாம் அனைவரும் ஸ்வாமிகளின் திருக்கமல பாதங்களை பணிந்து பகவத், பாகவத, ஆசார்ய விஷயங்களில் அவரைப்போலவே நாமும் ஞானம், பக்தி ஆகியவற்றைப் பெற்று வாழ்வோமாக.
அப்பன் திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமிகள் தனியன்:
ஸ்ரீவாதூல ரமாப்ரவாள ருசிர ஸ்ரக்ஸைந்ய நாதாம்சஜ
ஸ்ரீகுர்வீந்த்ரம் மஹார்ய லப்த நிஜஸத் ஸத்தம் ச்ருதா பீஷ்டதம்
ஸ்ரீராமாநுஜ முக்ய தேசிகலஸத் கைங்கர்ய ஸம்ஸ்தாபகம்
ஸ்ரீமத்வேங்கடலக்ஷ்மணார்ய யமிநம் தம்ஸத்குணம் பாவயே
அடியேன் ராமானுஜன் ராமாநுஜ தாஸன்
ஆதாரம்: https://guruparamparai.koyil.org/2013/08/28/sriperumbuthur-first-embar-jiyar/
வலைத்தளம் – https://guruparamparai.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org
அடியேன் நமஸ்காரம் .
திருவேங்கட ராமானுஜ ஜீயர் திருக்கழுத்தில் திருநாமம் பற்றி தெரிவிக்குமாறு
பிரார்த்தனை .
அடியேன் தாசன் .
தொண்டை மண்டலத்தில், மேல்த் தோளில் இருந்து கீழ்க் கழுத்து வரை திருமண் இடும் வழக்கம் உள்ளது. மற்ற ப்ரதேசங்களில், கீழ்க் கழுத்தில் இருந்து மேல்க் கழுத்து வரை திருமண் இடும் வழக்கம் உள்ளது. இது தேசாசாரமாகக் கொள்ளலாம்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்