திருவாய்மொழிப் பிள்ளை

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

முந்தைய பதிவில் (https://guruparamparai.koyil.org/2015/10/18/pillai-lokacharyar/) பிள்ளை லோகாசாரியரை அனுபவித்தோம். இப்பொழுது ஓராண் வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனான திருவாய்மொழிப் பிள்ளையைப் பற்றி அனுபவிப்போம் .

திருவாய்மொழிப் பிள்ளை – குந்தீநகரம் (கொந்தகை)

திருநக்ஷத்ரம் : வைகாசி விசாகம்

அவதார ஸ்தலம் : குந்தீநகரம் (கொந்தகை)

ஆசார்யன் : பிள்ளை லோகாசார்யர்

ஶிஷ்யர்கள் : அழகிய மணவாள மாமுனிகள், ஶடகோப ஜீயர் (பவிஷ்யதாசார்யன் சன்னிதி), தத்வேஶ ஜீயர் மற்றும் பலர்.

பரமபதித்த இடம் : ஆழ்வார் திருநகரி

அருளிச் செய்தவை : பெரியாழ்வார் திருமொழி ஸ்வாபதேஶம்

திருமலையாழ்வார் என்ற திருநாமத்துடன் அவதரித்தார், அவருக்கு ஸ்ரீஶைலேஶர் மற்றும் ஶடகோபதாஸர் என்ற திருநாமமும் உண்டு. இவருக்கு ஆழ்வார் மீதும், ஆழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி மீதும், இருந்த பற்றினாலும் அவர் திருவாய்மொழியைப் பரப்பின விதத்தினாலும் இவருக்கு திருவாய்மொழிப் பிள்ளை என்ற திருநாமமே இன்றளவும் மிகப் பிரசித்தமாக உள்ளது.

திருமலையாழ்வார் சிறு வயதிலேயே பிள்ளை லோகாசாரியரின் திருவடித் தாமரைகளை ஆஶ்ரயித்து பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொண்டார். அவர் தமிழில் மிகச்சிறந்த பண்டிதராகவும் மற்றும் மிகச்சிறந்த நிர்வாகியாகவும் இருந்தார். அவர் ஸம்பிரதாயதிலிருந்து விலகி, மதுரை பேரரசின் ராஜா அவனுடைய சிறு குழந்தையை விட்டு இறந்து போனதால், அந்தப் பேரரசின் தலைமை ஆலோசகராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். பிள்ளை லோகாசாரியார் தன்னுடைய கடைசி காலத்தில், திருமலையாழ்வாரை மானஸீகமாக கடாக்ஷித்தார். பிறகு கூரகுலோத்தம தாஸர் மற்றும் பிற ஶிஷ்யர்களை அழைத்துத் திருமலையாழ்வாரைத் திருத்திப் பணிகொண்டு அவரை நமது ஸம்பிரதாயத்தின் அடுத்த தர்ஶன ப்ரவர்த்தகராக மாற்றவேண்டும் என்று நியமித்தார். கூரகுலோத்தம தாஸர் திருமலையாழ்வரைத் திருத்திப் பணிகொள்வதற்காக அவரைச் சந்திக்கச் சென்றார்.

அந்த நேரத்தில் (துருஷ்கர்கள் படையெடுப்பின் பிறகு) நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரியிலிருந்து புறப்பட்டு கோழிக்கோட்டில் நம்பெருமாளுடன் சேர்ந்து சிறிது காலம் இருந்தார். ஆனால் நம்பெருமாள் அங்கிருந்து புறப்படும்பொழுது அங்குள்ள சில ஸ்ரீவைஷ்ணவர்களிடம் இருந்த கருத்து வேறுபாட்டினால் ஆழ்வார் அவருடன் செல்லவில்லை. அந்த நேரத்தில் ஆழ்வாரை தென் மேற்கு மலைப் பகுதியில் அழைத்துச்சென்றார்கள். அங்கு திருடர்கள் பயம் அதிகமாக இருப்பதால், ஆழ்வாரை ஒரு பெட்டியில் வைத்து ஒரு குன்றின் அடியில் (உயரமான செங்குத்தான பாறைக்கு நடுவில்) பாதுகப்பாக அந்த பெட்டியை வைத்து விட்டார்கள். சிறிது நாள் கழித்து தோழப்பர் என்ற ஸ்ரீவைஷ்ணவர், நம்மாழ்வாரிடம் மிகவும் பற்று உள்ளவர், திருமலையாழ்வரை சந்தித்து நம்மாழ்வாரை மீட்டெடுக்க சில வீரர்களை அனுப்பி வைக்குமாறு அவரிடம் ப்ரார்த்தித்தார். திருமலையாழ்வரும் மிகவும் ஸந்தோஷமாக ஆழ்வாரை மீட்டெடுக்க வீரர்களை அனுப்பி வைத்தார். தோழப்பரும் அவர்களை அந்த குன்றிற்கு வழிநடத்திச்சென்றார். அனைவரும் அந்த குன்றின் நடுவில் (உயரமான செங்குத்தான பாறையின் நடுவில்) இறங்குவதற்குப் பயப்பட்ட பொழுது, தோழப்பர் ஆழ்வார் மீதுள்ள பற்றினால் தாமாகவே அந்த பாறையின் நடுவில் இறங்குவதாகக் கூறினார். அந்த நேரத்தில் ஆழ்வார் திருநகரியிலிருந்து வந்த சில ஸ்ரீவைஷ்ணவர்கள் அவரைப் பாராட்டி, அன்றிலிருந்தே ஆழ்வாருடைய சிறப்பான மரியாதைகள் மற்றும் ப்ரஸாதங்கள் அவருக்கு கிடைக்கும் என்று அவர்கள் அனைவரும் கூறினார்கள். ஊஞ்சல் போல உள்ள அமைப்பில் அவர் கீழே இறங்கி ஆழ்வாரை அந்த பெட்டியோடு அந்த ஊஞ்சலில் எழுந்தருளப் பண்ணி அனுப்பினார். ஆழ்வாரை மேலே எழுந்தருளப் பண்ணிய பிறகு, இரண்டாவது முறை தோழப்பரை கூப்பிடுவதற்காக அந்த ஊஞ்சலைக் கீழே இறக்கினார்கள். அதை அங்குள்ள வீரர்கள் மேலே இழுக்கும் பொழுது, அவர் தவறி அதிலிருந்து கீழே விழுந்து உடனே அங்கேயே பரமபதித்தார். நம்மாழ்வார் உடனே தோழப்பருடைய திருக்குமாரரைச் ஸமாதானப்படுத்தி, தாமே அவருக்குத் தகப்பனாராக இருப்பதாகக் கூறினார். இவ்வாறு தோழப்பருடைய முயற்சியால் (திருமலையாழ்வருடைய உதவியினால்) நம்மாழ்வார் அங்கிருந்து மீட்கப்பட்டபிறகு சிறிது காலம் திருக்கணாம்பியில் இருந்து வந்தார். இப்பொழுது திருமலையாழ்வார் சரித்திரத்திற்கு வருவோம். திருமலையாழ்வார் வழக்கமாக பல்லக்கில் வலம் வரும்பொழுது, ஆழ்வாருடைய திருவிருத்தத்தை அனுஸந்தித்துக்கொண்டிருந்த கூரகுலோத்தம தாஸரைப் பார்த்தார். ஏற்கனவே திருமலையாழ்வாருக்குப் பிள்ளை லோகாசாரியருடைய க்ருபா கடாக்ஷம் இருப்பதால், தாஸருடைய பெருமையை உணர்ந்து, உடனே பல்லக்கிலிருந்து இறங்கி, திருவிருத்தத்திற்கான அர்த்தத்தை கற்றுக்கொடுக்குமாறு தாஸரிடம் பணிவுடன் கேட்டுக்கொண்டார். ஆனால் தாஸர் அவருக்கு அர்த்தத்தை கூற முடியாது என்று கூறிவிட்டார். திருமலையாழ்வார் ஸாத்விகராக இருப்பதால், அவருடைய வீரர்கள் அவருக்கு தீங்கு செய்யப் போகும்பொழுது அவர்களைத் தடுத்து அந்த இடத்திலிருந்து கிளம்பிவிட்டார். நடந்த ஸம்பவத்தை திருமலையாழ்வார் அவருடைய வளர்ப்புத் தாயாரிடம் கூறினார், அவருடைய தாயார் அவருக்கும் பிள்ளை லோகாசாரியருடைய ஸம்பந்தத்தை நினைவு படுத்தினார். உடனே திருமலையாழ்வார் அவர் இழந்ததை உணர்ந்து  வருத்தப்பட்டார். மற்றொறு முறை திருமலையாழ்வார் யானை மீது வந்துகொண்டிருக்கும் பொழுது தாஸரை மீண்டும் பார்த்தார். இந்த முறை உடனே மேலிருந்து இறங்கி தாஸருடைய திருவடித்தாமரைகளில் விழுந்து ஸேவித்தார். தாசரும் அதை ஏற்றுக்கொண்டு அவருக்கு அனைத்து ஸம்பிரதாய அர்த்தங்களையும் கற்றுகொடுப்பதாக கூறினார். திருமலையாழ்வார் தாஸர் திருவாரதனம் மற்றும் பல விஷயங்களுக்காக ஒரு தனி அக்ரஹாரத்தை (இடத்தை) ஏற்பாடு செய்து கொடுத்தார். திருமலையாழ்வார் அவருடைய நிர்வாகத்தில் மிகவும் அதிகமாக வேலை இருப்பதால், தினமும் அவர் திருமண்காப்பு இட்டுக்கொள்ளும்பொது தாஸரை வந்து அர்த்தவிசேஷங்களைக் கற்றுக்கொடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொண்டார், தாஸரும் அதற்குச் ஸம்மதித்தார். முதல் முறை தாஸர் திருமலையாழ்வரை சந்திக்கும் பொழுது, அவர் பிள்ளை லோகாசாரியர் தனியனை அனுஸந்தித்துக்கொண்டே திருமண்காப்பு இட்டுக்கொள்வதை கவனித்தார். இதை பார்த்த தாஸர் மிகவும் சந்தோஷமடைந்தார். தாஸர் தான் பிள்ளைலோகாசாரியரிடம் கற்றுகொண்ட அனைத்து அர்த்த விஶேஷங்களையும் திருமலையாழ்வருக்குத் தினமும் கற்றுக்கொடுத்து வந்தார். ஒரு நாள் திருமலையாழ்வர் தனது வேலையில் மிகவும் மும்மரமாக இருந்ததால் அவர் அன்று பாடத்தைக் கவனிக்கவில்லை. அன்றிலிருந்து சில நாட்களுக்கு தாஸர் திருமலையாழ்வருக்கு கற்றுக்கொடுக்கச் செல்லவில்லை. தனது தவறை உணர்ந்த திருமலையாழ்வார் உடனே தாஸரைச் சந்தித்து அபராத க்ஷாமணம் கேட்டார். தாசரும் அவரை ஏற்றுக்கொண்டு அவருக்குத் தன் ஶேஷ பிரசாதத்தைக் (போனகம் செய்த ஶேடம்) கொடுத்தார். அப்பொழுதிலிருந்தே திருமலையாழ்வார் அனைத்து லௌகிக விஷயத்திலிருந்தும் விலகினார், அதோடு தனது பதவி மற்றும் பேரரசின் அதிகாரத்தையும் இளம் இளவரசனிடம் ஒப்படைத்து விட்டு, எல்லா நேரங்களிலும் தாஸருடனே இருந்து ஸம்பிரதாய விஶேஷார்த்தங்களை கற்றுக்கொண்டார்.

தாஸருடைய கடைசி நாள்களில், அவர் திருக்கண்ணங்குடிப் பிள்ளையிடம் திருவாய்மொழி அர்த்தத்தை விளக்கமாகவும், விளாஞ்சோலைப் பிள்ளையிடம் அனைத்து ரஹஸ்யார்த்தங்களையும் கற்றுக்கொள்ளுமாறு நியமித்தார். தாஸர் திருமலையாழ்வரை நமது ஸம்பிரதாயத்திற்கு அடுத்த தர்ஶன ப்ரவர்த்தகராக நியமித்தார். பிறகு பிள்ளைலோகாசாரியாரை தியானித்துக்கொண்டே தாஸர் திருநாடலங்கரித்தார். திருமலையாழ்வார் அவருக்கு அனைத்து சரம கைங்கர்யங்களையும் மிகச் சிறந்த முறையில் செய்து முடித்தார்.

திருமலையாழ்வார் திருக்கண்ணங்குடிப் பிள்ளையைச் சந்தித்து திருவாய்மொழியினுடைய அர்த்த விஶேஷங்களைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். திருவய்மொழியினுடைய ஸாராம்ஸத்தைக் கற்றுக்கொடுக்கும்போது, திருமலையாழ்வார் பதவுரைக்கு (வார்த்தைக்கு வார்த்தை) அர்த்தம் கேட்க வேண்டும் என்று ஆசை உள்ளதாகக் கூறினார். அதனால் பிள்ளை திருமலையாழ்வரை திருப்புட்குழி ஜீயரிடம் சென்று இவ்வர்த்தத்தைக் கேட்குமாறு நியமித்தார். திருமலையாழ்வாரும் திருப்புட்குழிக்குச் சென்று அந்த ஜீயரை சந்திக்கபோகும் சற்று நேரத்திற்கு முன்பு ஜீயர் திருநாடலங்கரித்தார். திருமலையாழ்வார் மிகவும் வருத்தமடைந்து, பின்பு தேவப்பெருமாளை மங்களாஶாஸனம் செய்வதற்காகச் சென்றார். அவர் எழுந்தருளியதும் அங்குள்ள ஒவ்வொருவரும் அவரை வரவேற்றார்கள், தேவபெருமாளும் அவருக்குத் தீர்த்தம், ஸ்ரீஶடகோபம், சாத்துப்படி மற்றும் பல மரியாதைகளைப் ப்ரஸாதித்தார். அந்த நேரத்தில் நாலூர் பிள்ளை தேவப்பெருமாள் ஸன்னதியில் இருந்தார் (குறிப்பு : நம்பிள்ளை ஈடு வ்யாக்யானத்தை ஈயுண்ணி மாதவப் பெருமாளிடம் கொடுத்தார். அவர்  அவருடைய திருக்குமாரரான ஈயுண்ணி பத்மனாபப் பெருமாளுக்குக் கற்றுக்கொடுத்தார். நாலூர் பிள்ளை ஈயுண்ணி பத்மனாபப் பெருமாளுக்கு நேர் ஶிஷ்யர். அதனால் அவரிடம் இருந்து முழுமையாக ஈடு வ்யாக்யானத்தை முழுமையாகக் கேட்டவர். அதோடு நாலூர் பிள்ளை ஈடு வ்யாக்யானத்தை தன் குமாரரான நாலூர் ஆச்சான் பிள்ளைக்கும் கற்றுக்கொடுத்தார். அந்த நேரத்தில் தேவப்பெருமாள் அர்ச்சகர் மீது ஆவேசித்து நாலூர் பிள்ளையிடம் “அருளிச்செயலினுடைய அனைத்து அர்த்த விஶேஷங்களையும் உம்மைத் திருமலையாழ்வாருக்கு கற்றுக்கொடுக்குமாறு ஜ்யோதிஷ்குடியில் (பிள்ளைலோகாசாரியராக இருந்து) நியமித்தோம். ஆனால் இப்பொழுது இவருக்குத் திருவாய்மொழியினுடைய அர்த்த விஶேஷங்களைத் திருப்புட்குழி ஜீயரிடம் கேட்க முடியாததால் அந்த குறை தீர, ஈடு வ்யாக்யானத்தையும் இவருக்கு கற்றுக்கொடுக்குமாறு நியமிக்கிறோம்” என்று கூறினார். இதற்கு நாலுர் பிள்ளை “இவருக்கு கற்றுக்கொடுப்பதில் எனக்கு ஆசை தான், ஆனால் அடியேனுடைய வயது இதற்கு ஒத்துழைக்காது” என்று கூறினார். உடனே தேவப்பெருமாள் “உம்முடைய குமாரரான நாலூர் ஆச்சான் பிள்ளை இவருக்கு ஈடு வ்யாக்யானத்தை கற்றுகொடுத்தால் அது நீரே கற்றுக்கொடுப்பது போல” என்று கூறினார். தேவப்பெருமாளுடைய இந்த கட்டளையைக் கேட்டவுடன் நாலூர் பிள்ளை திருமலையாழ்வரை மிகவும் ஸந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டு அவரை நாலூர் ஆச்சான் பிள்ளையிடம் சேர்த்து, நாலூர் ஆச்சான் பிள்ளையைத் திருமலையழ்வாருக்கு அருளிச்செயலினுடைய அர்த்த விஶேஷங்களுடன் சேர்த்து ஈடு வ்யாக்யானத்தையும் கற்றுக்கொடுக்குமாறு நியமித்தார்.

நாலூர் ஆச்சான் பிள்ளை (தேவராஜர் என்ற மற்றொறு திருநாமமும் இவருக்கு உண்டு) அர்த்த விஶேஷங்களைக் கற்றுக்கொடுக்கும் பொழுது, இந்தச் ஸம்பவத்தைக் கேட்ட திருநாராயணபுரத்து ஆயி, திருநாராயணபுரத்து பிள்ளை மற்றும் பலர், நாலூர் ஆச்சான் பிள்ளை மற்றும் திருமலையாழ்வரை திருநாராயணபுரத்திற்கு எழுந்தருளுமாரு பணிவுடன் கேட்டுக் கொண்டு, நாலூர் ஆச்சான் பிள்ளை இங்கு வந்து காலக்ஷேபம் ஸாதித்தால் தாங்களும் கேட்டு பயன் பெறுவோம் என்று கேட்டார்கள். இதை அவர்கள் இருவரும் ஒப்புக்கொண்டு, திருநாராயணபுரத்திற்கு எழுந்தருளி, அங்கு எம்பெருமானார், யதுகிரி நாச்சியார், செல்வப்பிள்ளை மற்றும் திருநாரணனை மங்களாஶாஸனம் பண்ணிவிட்டு, காலக்ஷேபத்தை அங்கேயே முழுமையாகச் ஸாதித்தார். திருமலையாழ்வார் ஈடு வ்யாக்யானத்தை முழுமையாகக் கேட்டவுடன், அவருடைய நடவடிக்கைகளையும், அவருடைய கைங்கர்யத்தையும் பார்த்து நாலூர் ஆச்சான் பிள்ளை தன்னுடைய திருவாராதனப் பெருமாளை (இனவாயர் தலைவன்) திருமலையாழ்வாருக்குக் கொடுத்தார். இவ்வாறு ஈடு 36000 படி நாலூர் ஆச்சான் பிள்ளையிடமிருந்து பெற்று,  திருமலையாழ்வார், திருநாராயணபுரத்து ஆயி, திருநாராயணபுரத்து பிள்ளை ஆகிய மூன்று மிகப் பெரிய பண்டிதர்கள் பரப்பினார்கள்.

பிறகு திருமலையாழ்வார் ஆழ்வார்திருநகரிக்குச் சென்று நிரந்தரமாக அங்கேயே வாழ வேண்டும் என்று முடிவு செய்தார். நம்மாழ்வார் அழ்வார்திருநகரியிலிருந்து சென்ற உடன் அந்த ஊரே காடாக மாறியதை அவர் கண்டார். முதலில் அங்கு உள்ள மரங்களையும், புதர்களையும் திருத்தினார். இப்படிப்பட்ட கைங்கர்யத்தினால் ஆழ்வார்திருநகரி மீண்டும் பழையபடியே அழகாக மாறியது, அதனால் இவருக்கு காடு வெட்டி குரு (ஏனென்றால் இந்த ஆசார்யன் தான் காட்டைத் திருத்தினார்) என்ற திருநாமமும் ஏற்பட்டது. பிறகு அவர் நம்மாழ்வாரைத் திருக்கணாம்பியிலிருந்து (கர்நாடகாவில் உள்ளது) மறுபடியும் ஆழ்வார்திருநகரியில் எழுந்தருளப்பண்ணிக் கோயிலைச் சீர் செய்தார். அடுத்ததாக எம்பெருமானாருக்காக (நம்மாழ்வாரால் பல வருடங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட பவிஷ்யதாசாரியன் திருமேனி) ஒரு கோயிலை  ஆழ்வார்திருநகரியின் மேற்குப் பகுதியில் அமைத்தார். அந்த ஸன்னிதியைச் சுற்றி சதுர்வேதி மங்கலம் (கோயிலை சுற்றி 4 வீதிகளை அமைத்தார்) அமைத்து, மற்றும் 10 குடும்பங்களை நியமித்தார். அதோடு ஒரு விதவையான ஸ்ரீவைஷ்ணவ அம்மையாரை பவிஷ்யதாசாரியன் சன்னிதிக்குக் கைங்கர்யம் செய்வதற்காக நியமித்தார். எப்பொழுதுமே நம்மாழ்வாருடைய பெருமையையே கூறிகொண்டு அவர் மீது ஈடுபாட்டுடன் இருப்பதாலும், எப்பொழுதுமே திருவாய்மொழியைக் கற்றுக் கொடுப்பதாலும், அவருக்கு திருவாய்மொழிப் பிள்ளை என்ற திருநாமமே மிகவும் பிரஸித்தமாக இன்றளவும் உள்ளது.

சில நாட்கள் கழித்து, திருவாய்மொழிப் பிள்ளை, பிள்ளை லோகாசாரியருடைய முக்கியமான ஶிஷ்யர்களுள் ஒருவரான விளாஞ்சோலைப் பிள்ளையிடம் அனைத்து ரஹஸ்ய க்ரந்தங்களை கற்றுக் கொள்வதற்காக திருவனந்தபுரத்திற்குச் சென்றார். விளாஞ்சோலைப் பிள்ளை எப்பொழுதுமே தன் ஆசார்யனை த்யானித்துக் கொண்டே இருப்பார். அவர் மிகவும் ஸந்தோஷமாக திருவாய்மொழிப் பிள்ளையை வரவேற்றார். விளாஞ்சோலைப் பிள்ளை ரஹஸ்ய க்ரந்தங்களுடைய ஆழமான உட்கருத்தை மிகவும் நன்றாக கற்றுக் கொடுத்து அவரை குளிரக் கடாக்ஷித்தார். அதன் பிறகு திருவாய்மொழிப் பிள்ளை ஆழ்வார்திருநகரிக்கு சென்றார். சில நாட்கள் கழித்து விளாஞ்சோலைப் பிள்ளை தன்னுடைய சரம திருமேனியை விட்டுத் தன் ஆசாரியனுக்கு நிரந்தரமாக நித்ய விபூதியில் கைங்கர்யம் பண்ணவேண்டும் என்று எண்ணி, திருநாடலங்கரித்தார். இதைக் கேட்டவுடன் திருவாய்மொழிப் பிள்ளை அங்குச் சென்று விளாஞ்சோலைப் பிள்ளைக்கு அனைத்து சரம கைங்கர்யங்களையும் செய்தார்.

சில காலம் கழித்து பெரிய பெருமாள் பல ஜீவாத்மக்களுக்கு உஜ்ஜீவனம் அளிக்க ஆதிஶேஷனை மறுபடியும் ஸம்ஸாரத்தில் அவதரிக்கச் சொல்லி நியமித்தார். திருவனந்தாழ்வான் தன் சுவாமியினுடைய நியமனத்தை ஏற்றுக் கொண்டு அழகிய மணவாளப் பெருமாள் நாயனாராக (இறுதியில் அழகிய மணவாள மாமுனிகளாக பிரசித்தமானார்) திகழக் கிடந்தான்   திருநாவீறுடைய பிரான் (கோமடத்தாழ்வான் வம்ஶத்தில் வந்தவர் – இவர் எம்பெருமானாரால் நியமிக்கப்பட்ட 74 ஸிம்மாசனாதிபதிகளில் ஒருவர்) மற்றும் ஸ்ரீரங்க நாச்சியாருக்கும் ஐப்பசி திருமூலத்தில் திருக்குமாரராக ஆழ்வார்திருநகரியில் திருவவதரித்தார். இவர் இவருடைய திருத்தாயார் ஊரான சிக்கில் கிடாரத்தில் வளர்ந்து வந்தார். அங்கு ஸாமாந்ய ஶாஸ்த்ரம் மற்றும் வேத அத்யயனத்தை அவருடைய திருதகப்பனாரிடத்தில் கற்று வந்தார். திருவாய்மொழிப் பிள்ளையைப் பற்றித் தெரிந்தவுடன், உடனே ஆழ்வார்திருநகரிக்கு வந்து அவரை ஆசஶ்ரயித்து, அவருக்குச் ஶிஷ்யராகப் பல கைங்கர்யங்களைப் பண்ணிக்கொண்டே அவரிடம் அருளிச்செயல் மற்றும் அதனுடைய முழுமையான அர்த்த விஶேஷங்களையும் கற்றுக்கொண்டார். திருவாய்மொழிப் பிள்ளையுடைய வழிகாட்டுதலினால் இவர் பவிஷ்யதாசாரியருக்கு உண்மையாகவும், மிகவும் அன்போடும் திருவாராதனம் செய்தார். பிறகு எம்பெருமானாருடைய பெருமைகளை யதிராஜ விம்ஶதியாக இயற்றினார். திருவாய்மொழிப் பிள்ளையுடைய ஶிஷ்யர்களுள் சிலர், ஏன் இவர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரிடம் மிகவும் பற்றோடு உள்ளார் என்று வியப்படைந்தனர், இதை உணர்ந்த திருவாய்மொழிப் பிள்ளை அவர்களை அழைத்து ஆதிஶேஷன் தான் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாராக அவதரித்திருப்பதாக விளக்கமாகக் கூறினார்.

தன்னுடைய கடைசி காலத்தில் திருவாய்மொழிப் பிள்ளை, தனக்கு அடுத்த தர்ஶன ப்ரவர்தகராக யாரை நியமிப்பது என்று மிகவும் வருத்தமாக இருந்தார். அந்த ஸமயத்தில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அனைத்து பொறுப்புகளையும் தான் எடுத்துக் கொள்வதாகவும், தன் ஆசார்யனுடைய ஆசையையும் நிறைவேற்றுவதாகவும் உறுதி பூண்டார். அவர் கூறியதைப் பார்த்து மிகவும் ஸந்தோஷமடைந்த திருவாய்மொழிப் பிள்ளை, நாயனாருடைய காலத்தில் ஒருமுறை மட்டுமே அவர் ஸ்ரீபாஷ்யம் கற்றுக்கொள்ள வேண்டும், பிறகு அவருடைய முழுமையான காலத்தையும் திருவாய்மொழி மற்றும் அதனுடைய வ்யாக்யனங்களிலேயே காலம் கழிக்க வேண்டும் என்று நியமித்தார். அதோடு மட்டுமல்லாமல் தனது மனதை திருவரங்கத்தில் உள்ள பெரிய பெருமாளுக்கு மங்களாஶாஸனம் பண்ணவேண்டும் என்ற நிரந்தரமான எண்ணத்தை மனதில் வைக்க வேண்டும் என்று நியமித்தார். அழகிய மணவாள பெருமாள் நாயனாரை அவதார விஶேஷமாக எண்ண வேண்டும் மற்றும் அவருக்குத் தனி மரியாதை கொடுக்க வேண்டும் என்று திருவாய்மொழிப் பிள்ளை தன்னுடைய ஶிஷ்யர்களுக்குக் கட்டளையிட்டார். அதன் பிறகு பிள்ளை லோகாசாரியர் திருவடிகளையே த்யானித்துக்கொண்டு திருநாடலங்கரித்தார். அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் மற்றும் சில ஶிஷ்யர்கள் திருவாய்மொழிப் பிள்ளைக்குச் சரம கைங்கர்யத்தைச் செய்தார்கள்.

எப்படி எம்பெருமானார் பராங்குஶ தாஸரான பெரிய நம்பியின் திருவடியைத் தஞ்சமடைந்தாரோ, அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஶடகோப தாஸரான திருவாய்மொழிப் பிள்ளையின் திருவடிகளைத் தஞ்சமடைந்தார். திருவாய்மொழிப் பிள்ளையின் முயற்சியால் மட்டுமே இன்று நாம் ஆதிநாதர் ஆழ்வார் சன்னிதியையும், பவிஷ்யதாசாரியன் (எம்பெருமானார்) ஸன்னிதியையும்  ஸேவிக்க முடிகிறது. இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக நம்மாழ்வாருக்காகவும், திருவாய்மொழிக்காகவும் அர்ப்பணித்தார். பிள்ளை லோகாசாரியருடைய ஆணைக்கிணங்க, பல இடங்களுக்குச் சென்று பல ஆசார்யர்களைப் பற்றி, விஷயங்களைச் சேகரித்து, அனைத்தையும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரிடம் கொடுத்தார். அதோடு மட்டுமல்லாமல் இவருடைய முழுமையான முயற்சியால் மட்டுமே ஈடு 36000 படி வ்யாக்யானம் நமக்குக் கிடைத்தது, அதைத் தான் பிற்காலத்தில் அழகிய மணவாள மாமுனிகள் மிகவும் பிரஸித்தமாக, மிகப் பெருவாரியாகப் பரப்பினார்.

நாமும் திருவாய்மொழிப் பிள்ளையுடைய திருவடித்தாமரைகளை வணங்கி, எம்பெருமானார் மீதும், நமது ஆசார்யன் மீதும் பற்றை வளர்த்துக் கொள்வோம்.

திருவாய்மொழிப் பிள்ளையினுடைய தனியன்:

நம ஸ்ரீஶைலநாதாய குந்தீ நகர ஜந்மநே
ப்ரஸாதலப்த பரம ப்ராப்ய கைங்கர்யஶாலிநே

திருவாய்மொழிப் பிள்ளையினுடைய வாழி திருநாமம்:

வையகமெண் சடகோபன் மறைவளர்த்தோன் வாழியே
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
ஐயன் அருண்மாரி கலை ஆய்ந்துரைப்போன் வாழியே
அழகாரும் எதிராசர் அடிபணிவோன் வாழியே
துய்யவுலகாரியன் தன் துணைப்பதத்தோன் வாழியே
தொல் குருகாபுரி அதனைத் துலக்கினான் வாழியே
தெய்வநகர் குந்தி தன்னில் சிறக்க வந்தோன் வாழியே
திருவாய்மொழிப்பிள்ளை திருவடிகள் வாழியே

மேலே அடுத்த ஆசார்யரான அழகிய மணவாள மாமுனிகள் வைபவத்தை அனுபவிப்போம்.

அடியேன் ரெங்க ராமானுஜம் ராமாநுஜ தாஸன்

ஆதாரம்: http://guruparamparai.koyil.org/2012/09/19/thiruvaimozhi-pillai/

வலைத்தளம் – https://guruparamparai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

2 thoughts on “திருவாய்மொழிப் பிள்ளை”

Leave a Comment