ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
திருநக்ஷத்ரம்: கார்த்திகை, கார்த்திகை
அவதாரஸ்தலம்: திருக்குறையலூர்
ஆசார்யன்: விஷ்வக்சேனர்
ஶிஷ்யர்கள்: ஆழ்வாரின் மைத்துனர் இளையாழ்வார், பரகால ஶிஷ்யர், நீர்மேல் நடப்பான், தாளூதுவான், தோலா வழக்கன், நிழலில் மறைவான், உயரத் தொங்குவான்
பிரபந்தங்கள்: பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருநெடுந்தாண்டகம்
பரமபதம் அடைந்த இடம்: திருக்குறுங்குடி
பெரியவாச்சான் பிள்ளை தம் பெரிய திருமொழி வ்யாக்யான அவதாரிகையில் திருமங்கை ஆழ்வாரைத் தன நிர்ஹேதுக க்ருபையால் திருத்திப் பணிகொண்ட எம்பெருமான் ஆழ்வார்மூலம் ஜீவாத்மாக்களைக் கரை ஏற்றுகிறான் எனும் ஶாஸ்த்ரார்த்தத்தை அழகாகக் காட்டினார்.
ஆழ்வார் தம் ஆத்மாவை வெயிலில் போட்டு, உடம்பை நிழலில் வைத்தார். ஆத்மாவை வெயிலில் வாட விடுவதாவது பகவத் விஷயத்தில் ஈடுபாடின்றி இருத்தல், ஶரீரத்தை நல்ல குளிர் நிழலில் வைப்பதாவது லௌகிக விஷயங்களில் ஈடுபட்டு அநுபவித்து அவற்றையே லக்ஷ்யமாகக் கொள்தல்.”வாசுதேவ தருச் சாயா” என்பதில் சொன்னாப்போலே உண்மையான நிழல் தரும் மரம் வாஸுதேவனே. கிருஷ்ணனாகிய இம்மரம் உண்மையில் நல்ல நிழல் தந்து ஆத்மாவைக் காக்கும். அதி சீதளமும் அத்யுஷ்ணமும் இன்றிப் புலன்களாலும் இந்த்ரிய போகங்களாலும் உண்டாகும் தாபம் தீர்க்கும். ஆழ்வார் விஷயாந்தரங்களில் மிக ஆழ்ந்து கிடந்தவர் திவ்ய தேசத்தெம்பெருமான்களின் ஸௌந்தர்யத்தில் கண்களையும் மனதையும் திருப்பி, அவ்வனுபவம் இன்றேல் க்ஷணமும் தரிக்கவொண்ணாது என்ற நிலை எய்தினார். எம்பெருமான் அவர்க்கு இவ்வுலகிலே நித்ய முக்தரின் அனுபவங்களைத் தந்து, பரமபதத்தில் ஆசையைக் கிளர்த்தி, பரமபதமும் தந்தருளினான்.
ஆழ்வாரின் விஷயத்தில் எம்பெருமான் தன் திறத்தில் முதலில் அத்வேஷத்தைக் கிளப்பி அதாவது ஈஶ்வரன் மீது சேதனனுக்குள்ள வெறுப்பை மாற்றி அவனுக்கு விஷயங்களில் உள்ள பற்றைத் தன்புறம் திருப்பி, பின் ஆபிமுக்யம் விளைத்து அதாவது ஈஶ்வரனே முக்கியம் பிற புலன் அனுபவங்கள் யாவும் வீண் என உணர்த்தி திருமந்திர அர்த்தம் ஆழ்வார் மனதில் இருத்தி ஈஶ்வரனின் ஸ்வரூப ரூப குண விபவங்களில் ருசி ஏற்படுத்தி இந்த ஞானம் இன்றேல் தன் ஸ்வரூபம் தெரியாது என்பதால் மயர்வற மதிநலம் அருளினான். ஆனது பற்றி எம்பெருமான் திறத்தில் தம் நன்றி/க்ருதஞதையை வெளிப்படுத்தவே ஆழ்வார் பிரபந்தங்கள் அமைந்தன.
பெரியவாச்சான் பிள்ளை ஆழ்வாருக்கு எம்பெருமானின் நிர்ஹேதுக கிருபையால் இது விளைந்தது என ஆழ்வாரே பாடிய பெரிய திருமொழிப் பாசுரம் 4.9.6 “நும்மடியாரோடும் ஒக்க எண்ணியிருந்தீர்” என்பதற்கான வ்யாக்யானத்தில் அழகாகக் காட்டுகிறார்.
இராமானுச நூற்றந்தாதி இரண்டாம் பாசுரத்தில் அமுதனார், இராமானுசரைப் பற்றி, “குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன்”என எம்பெருமானாரின் அசைக்கமுடியாத கலியன் பக்தியைப் பாடுகிறார்.
மாமுனிகள் திருவாலி திருநகரி திவ்யதேசங்களுக்குச் சென்ற பொழுது, ஆழ்வாரின் திவ்ய திருமேனி ஸௌந்தர்யத்தில் மிகவும் ஈடுபட்டு, அந்தத் திருமேனி அழகு நம் கண்ணுக்கும் அழகாகப் புலப்படும்படி ஒரு பாசுரத்தை உடனே ஸமர்ப்பித்தார். அதை இப்பொழுது அனுபவிப்போம்.
அணைத்தவேலும், தொழுதகையும், அழுந்திய திருநாமமும், ஓம் என்றவாயும், உயர்ந்த மூக்கும், குளிர்ந்த முகமும், பரந்த விழியும், பதிந்த நெற்றியும், நெறித்த புருவமும், சுருண்ட குழலும், வடித்த காதும், அசைந்த காது காப்பும், தாழ்ந்த செவியும், சரிந்த கழுத்தும், அகன்ற மார்பும் திரண்ட தோளும், நெளிந்த முதுகும், குவிந்த இடையும், அல்லிக்கயிறும், அழுந்திய சீராவும், தூக்கிய கருங்கோவையும், தொங்கலும் தனிமாலையும், தளிருமிளிருமாய் நிற்கிற நிலையும், சாற்றிய திருத்தண்டையும், சதிரான வீரக்கழலும் தஞ்சமான தாளிணையும், குந்தியிட்ட கனணக்காலும் குளிரவைத்த திருவடி மலரும், வாய்த்த மணங்கொல்லையும், வயலாலி மணவாளனும், வாடினேன் வாடி(என்று) வாழ்வித்தருளிய, நீலக்கலிகன்றி, மருவலர்தம் உடல்துணிய வாள்வீசும் பரகாலன், மங்கைமன்னனான வடிவே.
உறை கழித்த வாளையொத்த விழிமடந்தை மாதர்மேல்,
உருகவைத்த மனமொழித்திவ்வுலகளந்த நம்பிமேல்,
குறையைவைத்து மடலெடுத்த குறையலாளி திருமணங்
கொல்லைதன்னில் வழிபறித்த குற்றமற்ற செங்கையான்,
மறையுரைத்த மந்திரத்தை மாலுரைக்க, அவன்முனே
மடியொடுக்கி மனமடக்கி வாய்புதைத்து, ஒன்னலார்
கறைகுளித்த வேலணைத்து நின்றவிந்தநிலைமை, என்
கண்ணைவிட்டு கன்றிடாது கலியனாணை ஆணையே.
காதும் சொரிமுத்தும் கையும் கதிர்வேலும்,
தாதுபுனை தாளிணையும் தனிச்சிலம்பும்
நீதுபுனை தென்னாலி நாடன் திருவழகைப்போல,
என்னாணை ஓப்பாரில்லையே.
வேலணைத்தமார்பும், விளங்கு திருவெட்டெழுத்தை
மாலுரைக்கத்தாழ்த்த வலச்செவியும்
தாளினிணைத் தண்டையும், தார்க்கலியன் கொண்ட நன்முகமும்
கண்டு களிக்குமென்கண்.
இதுவோ திருவரசு இதுவோ திருமணங்கொல்லை
இதுவோ எழிலாலி என்னுமூர்
இதுவோதான் வெட்டும் கலியன் வெருட்டி நெடுமாலை
எட்டெழுத்தும் பறித்தவிடம்.
பரகாலனின் இந்த திவ்ய மங்கள விக்ரஹம் எப்போதும் என் நெஞ்சில் உள்ளது. திருத்தோள் தாங்கிய வேலும், எம்பெருமானைத்தொழுத திருக்கரங்களும், அழகிய ஊர்த்வ புண்ட்ரமும், ஓம் என்னும் திருப்பவளமும், கூர்த்த சிறிது தூக்கிய நாசியும், குளிர நோக்கும் விழிகளும்,சுருண்டு இருண்டு கருத்த குழலும், எம்பெருமானிடம் திருமந்த்ரம் கேட்ட செவ்விய செவி மடல்களும், வட்டமான கழுத்தும், அகன்ற திருமார்வும், வழிய திருத்தோள்களும், வனப்பான மேல்முதுகும், குறுகிய இடையும், எழிலார் மாலைகளும் மனங்கவர் கைவளையங்களும், வீரம் செறிந்த திருக்கழல்களும், மறம் செறிந்த கணைக்கால்களும், பகைவர்களை அழித்து ஒழிக்கும் ஒள் வாளும் மாமுனிகளின் வர்ணனை.
ஆழ்வார்க்கு பரகாலன், கலியன், நீலன், கலி த்வம்ஶன், கவிலோக திவாகரன், சதுஷ்கவி ஶிகாமணி ஷட் பிரபந்தக் கவி, கலிவைரி, நாலுகவிப் பெருமாள், திருநாவீறுடைய பெருமான், மங்கையர்கோன், அருள்மாரி, மங்கைவேந்தன், ஆலிநாடன், அரட்டமுக்கி, அடையார் சீயம், கொங்குமலர்க் குழலியர் வேள், கொற்றவேந்தன், கொற்றவேல் மங்கை வேந்தன் என்னும் பல பெயர்களால் ப்ரஶித்தி உண்டு.
ஆழ்வாருடைய சரித்திரத்தை இப்பொழுது அனுபவிப்போம்.
ஆழ்வார் திருவாலி திருநகரி அருகே திருக்குறையலூரில் சதுர்த்த வர்ணத்தில் கார்முக அம்ஶமாய் தம் நிறத்துக்கேற்ப நீலன் எனும் பெயருடன் அவதரித்தார் என கருட வாஹன பண்டிதரின் திவ்ய ஸூரி சரிதை கூறுகிறது. பால்யத்தில் பகவத் விஷயத்தில் ருசியின்றியே வளர்ந்த இவர் வாலிபத்தில் வழிய திருமேனியும் பொருள் ஆர்வமும் போர்க்கலையில் தேர்ச்சியும் பெற்றுத் திகழ்ந்தார். இவர்தம் போராற்றலறிந்த சோழ பூபதி இவரைத்தன் சேனாபதிகளில் ஒருவர் ஆக்கிக்கொண்டனன்,
அப்போது திருவாலியில் விளையாடவந்த அப்ஸரஸுகளில் திருமாமகள் (குமுதவல்லி) என்பாளை அவள் தோழிகள் ஆட்டமுடிவில் மறந்து விட்டுச் செல்ல, அம்மானிட உடல்தாங்கிய அப்ஸரஸை அவ்விடம் வந்த ஒரு ஸ்ரீவைஷ்ணவ வைத்தியன் பரிவினால் காக்கவும், அவள் அழகுபற்றிக் கேள்வியுற்ற நீலன் அவளை மனம் புணர விரும்பினாராக, அவள் ஓர் ஆசார்யனிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் ஆன ஸ்ரீவைஷ்ணவனையே மணப்பேன் என்ன அவரும் உடனே திருநறையூர் நம்பியிடம் ஓடி இரக்க எம்பெருமான் மிக்க கருணையோடு ஶங்க சக்கர முத்திரை செய்து திருமந்தரம் ஓதுவித்தான். பாத்ம புராணத்தில் இது பற்றி
ஸர்வை: ஶ்வேதம்ருதா தார்யம் ஊர்த்வபுண்ட்ரம் யதாவிதி
ருஜுநி ஸாந்தராளாநி ஹ்யங்கேஷு த்வாதஶஸ்வபி
என்று சொல்லப்படுகிறது.
பன்னிரு ஊர்த்வபுண்ட்ர தாரணத்தோடு வந்த நீலன் குமுதவல்லியை மணம் புரியக் கேட்க, குமுதவல்லி, தான் எவர் ஒருவர் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஓராண்டு காலம் ததீயாராதனம் செய்கிறார்களோ, அவரையே மணப்பேன் என்று சொல்ல, ஓராண்டு காலம் அவர் 1008 ஸ்ரீ வைஷ்ணவர்க்குத் ததீயாரதனம் செய்ய வேணும் என்றனள். இதுவும் நிறைவேறின பின்பே திருமணம் ஆயிற்று.
ஆராதநாநாம் ஸர்வேஷாம் விஷ்ணோர் ஆராதநம் பரம்
தஸ்மாத் பரதரம் ப்ரோக்தம் ததீயாராதநம் ந்ரூப
என்று பாத்ம புராண வசனமுண்டிறே. ஓ அரசனே விஷ்ணு ஆராதனத்திற் காட்டிலும் விஷ்ணு பக்த ஆராதனமே மேலானது என்பதை அறிந்து ஆழ்வார் அதில் ஊன்றித் தம் பொருள் முழுதும் அதிலேயே செலவழிக்கலானார்.
இது கண்ட சிலர் அரசனிடம் பரகாலன் அரசுப் பணம் முழுதும் அடியார்க்கு உணவளிப்பதில் ஒழித்துவிடுவதாகப் புகார் சொல்ல, அரசன் அவரை அழைத்துவர ஆட்களை அனுப்ப, அவர் அவர்களிடம் ஹிதமாகப் பேசவும் அந்த வீரர்களின் தலைவன் அவரிடம் பணங்கேட்டுப் பேருஞ்சேநையோடு பொருதனன். சினமுற்ற ஆழ்வார் அவர்களைத்தோற்கடித்து அனுப்ப அரசன் மீண்டும் அனுப்பிய பெரும் சேனையும் தோற்க அவர் வீரங்கண்டுகந்த அரசன் தானே வந்து ஸமாதானம் ஆகினான் என ஆழ்வார் அவனிடம் செல்ல அவன் அவரை வளைத்துப் பிடித்து ஒரு கோயிலில் சிறையிட அவர் மூன்றுநாட்கள் உணவின்றி, திருவேங்கடத்தானையும் பெரிய பெருமாளையும் தொழுது மறுபடி அவர்களை வென்றார். தேவப்பெருமாள் இவர் கனவில் வந்து காஞ்சீபுரம் அருகே பெரும் செல்வம் உண்டென்ன, அவர் அரசனிடம் சொல்ல அவன் ஆட்களோடு அவரைக் காஞ்சீபுரம் அனுப்பினான். அங்கு செல்வம் இல்லாதபோது அடியாரை விடாத தேவப்பெருமாள் மீட்டும் அவர் கனவில் வந்து வேகவதிக்கரையில் தோண்டச் சொல்ல அவர்கள் தோண்டி அவர் தந்த வெறும் மணல் நெல்லாக மாறியது கண்டு அவ்வீரர்கள் வியந்து அரசனிடம் கூறினர். ஆழ்வார் பெருமை உணர்ந்த அவன் தனது பிழையுணர்ந்து அவரிடம் க்ஷமாபனம் வேண்டி. தானும் அறம் செய்யத் தொடங்கினான். தேவப்பெருமாள் தெரிவித்தபடியே வேகவதிப் படுகையில் ஆழ்வார் பெரும்புதையல் கண்டெடுத்து, அரசனின் கப்பமும் கட்டித் தம் கைங்கர்யமும் நிறைவேறத் திருக்குறையலூர் திரும்பித் தொடர்ந்தார்.
ததீயாராதனம் தொடர்ந்த ஆழ்வார் மீண்டும் பொருள் செலவாகிவிடவே மேல்செலவுக்குப் பொருள் களவில் சேர்க்க எண்ணிச் செல்வர்களைக் கொள்ளையடித்தார். இவ்வளவில் இவரைத் திருத்திப்பணிகொள்ள நினைத்த எம்பெருமான் ஏற்கெனவே சரம புருஷார்த்த நிலை நின்ற இவர் விஷயமாக ஒரு திருவிளையாடல் நிகழ்த்தத் திருவுளம் பற்றினானாக, திருநகரியில் திருமணம் ஆகிய புதுமண மக்களாக அவனும் பிராட்டியும் வர, நிறையப் பொருளோடு இவர்கள் வருவதைச் ஶிஷ்யர்கள் மூலமறிந்த நீலன் அவர்களைத் திருமணங்கொல்லையில் வழிப்பறிக்கு ஆளாக்கினார். எல்லாப் பொருள்கள் அணிகலன்களையும் எடுத்துக்கொண்ட ஆழ்வாரால் பெருமாளின் திருவடியில் இருந்த மோதிரத்தைக் கழற்ற அவன் திருவடியைப்பிடித்த அளவில் அவர்க்கு மெய்ஞானம் ஸ்வரூபம் பிறந்ததாக, “நீர் யார்” எனக் கேட்க அவன் “நீர் நம் கலியனோ” என்றான். கலியன் எனில் பெருவீரன், ஆனால் அவர் வீரம் அவன் முன் தோற்றுக் காதலாகியது.
நகைகளை மூட்டை கட்டியவரால் அவற்றைத் தூக்க முடியவில்லை. அவனிடம் நீ மந்த்ரம் போட்டாயோ என்று வினவ அவன் ஆம் என்று அவர் காதில் திருமந்தரம் சொல்ல அவரது மீதி பிரகிருதி மாயைகளும் விலக மயர்வற மதி நலம் அருளப் பெற்றவராய், அந்த ஆனந்த ப்ரகர்ஷத்தை “வாடினேன் வாடி வருந்தினேன்” என்று தொடங்கி அவன்பால் தம் க்ருதஜ்ஞதையை அங்கேயே அப்போதே வெளியிட்டாராயிற்று.
வ்ருத்த ஹாரீத ஶ்ருதி
ருசோ யஜுகும்ஷி ஸாமாநி ததைவ அதர்வணாநி ச
ஸர்வம் அஷ்டாக்ஷராந்தஸ்த்தம் யச்சாந்யதபி வாங்மயம்
என்றாப்போலே எல்லாம் அஷ்டாக்ஷர மந்தரப் பொருளே என்ற தத்துவம் உணர்த்தினார்.
நாரதீய புராணம்
ஸர்வவேதாந்த ஸாரார்த்தஸ் ஸம்ஸாரார்ணவ தாரக:
கதிர் அஷ்டாக்ஷரோ ந்ருணாம் அபுநர்பவகாங்க்ஷிணாம்
என்றாப்போலே மோக்ஷம் பெற இச்சித்தானுக்கு வேதாந்த ஸாரம் அதுவே என உறுதிப்படுத்தினார்.
நாராயண உபநிஷத்
ஓமித்யக்ரே வ்யாஹரேத், நம இதி பச்சாத், நாராயணாயேத்யுபரிஷ்டாத், ஓமித்யேகாக்ஷரம், நம இதி த்வே அக்ஷரே, நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி
என்றாப்போலே ஓம் என ஓர் எழுத்திலே தொடங்கி நம என்கிற ஈரெழுத்து நடுவாகி நாராயணாய எனும் பஞ்சாக்ஷரம் ஈறாகி இது அமைந்துள்ளது.என்று ஶாஸ்திரம் இதன் வடிவை வர்ணிக்கிறது.
நாரதீய புராணம்
மந்த்ராணாம் பரமோ மந்த்ரோ குஹ்யாநாம் குஹ்யமுத்தமம்
பவித்ரஞ்ச பவித்ராணாம் மூலமந்த்ரஸ் ஸநாதந:
மந்த்ரங்களில் பரம பவித்ரமானது, ரஹஸ்யங்களில் பரம ரஹஸ்யம், மிகத் தொன்மையானது மூல மந்த்ரமும் ஆனது அஷ்டாக்ஷரம்.
“பேராளன் பேரோதும் பெரியோர்” என ஆழ்வார் திருநாம மஹிமை சொன்னார். “பெற்ற தாயினும் ஆயின செய்யும்” என்றார். எம்பெருமான் பிராட்டிமாரோடும் தன் திவ்ய ஸ்வரூபம் காட்டி நிர்ஹேதுக க்ருபையடியாக அவர்க்கு அருள் செய்தான்.
எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபையால் திருமந்த்ரோபதேஶம் பெற்று மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார் அவனருளால் திவ்ய மஹிஷிகளோடு கருடாரூடனான அவன் திவ்ய தர்ஶனம் பெற்று ஆனந்தக் களிப்பில் ஆறு ப்ரபந்தங்களில் நம்மோடு தம் பாவநாப்ரகர்ஷத்தைப்பகிர்ந்துகொண்டார். அவை பெரியதிருமொழி, திருக்குறுந்தாண்டகம், திரு எழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருநெடுந்தாண்டகம் என்பன. அவ்வாறு திவ்ய பிரபந்தங்களும் நம்மாழ்வாரின் நான்கு வேதங்களுக்கு ஆறங்கமாய் அமைந்தன. பிராட்டியின் புருஷகாரத்தால் தாம் பெற்ற பேற்றை ஆழ்வார் நாமுமடையத் திருவுளம் பற்றி இத்திவ்ய பிரபந்தங்களை அருளினார்.
ஆசுகவி, விஸ்தாரகவி, மதுரகவி, சித்திரகவி என நால்வகைக் கவிதைகள் யாப்பதில் வல்லவரானதால் ஆழ்வாருக்கு நாலுகவிப் பெருமாள் வந்தார் என ஶிஷ்யர்கள் முழங்க. அங்கு வந்த சைவ அடியார் திருஞான சம்பந்தரடியார்கள் ஆக்ஷேபிக்கவும், ஆழ்வார் சம்பந்தர் விரும்பியபடியே “ஒரு குறளாய் ஈரடியால்” என்று தொடங்கிப் பாடிய பாசுரங்கள் கேட்டு சம்பந்தர் உகந்து நீரே நாலு கவிப் பெருமாள் எனப் பாராட்டித் தம் கை வேலையும் அளித்துச் சென்றனர். ஆழ்வாரும் எல்லாதிவ்ய தேசங்களுக்கும் ஆவலோடு சென்று மீதூராக் காதலோடு எம்பெருமானை மங்களாசாசநம் செய்து வந்தார்.
ஆழ்வார் திருவரங்கம் செல்ல விழைந்தார். விமாநம் ப்ரணவாகாரம் வேதஶ்ருங்கம் மஹாத்புதம் ஸ்ரீரங்கஸாயீ பகவாந் ப்ரணவார்த்த ப்ரகாஶக: – எனும்படியான திருவரங்கத்தை சேவிக்க ஆழ்வார் திருவுளம் பற்றி ஆங்கே கைங்கர்யமும் செய்ய ஆவலுற்றார்.
ஆச்சர்யகரமான ஸ்ரீரங்க விமானம் ஓங்கார வடிவானது, அதன் முடி வேத ஸ்வரூபம், அங்குள்ள ஸ்ரீரங்கநாதனே ப்ரணவப் பொருள்.
ஆழ்வார் அரங்கன் சன்னிதியைச் சுற்றித் திருமதிள் எடுக்க விரும்ப, ஶிஷ்யர்கள் அதற்காம் பெரும் செலவுக்கு, நாகப்பட்டினத்து புத்த விஹாரத்துள்ள பொன் விக்ரஹம் சரியாயிருக்கும் என, அந்த விக்ரஹத்தைக் களவாட அவர் விக்ரஹத்தின் பாதுகாப்பு ஏற்பாட்டைச் செய்த ஸ்தபதி வேறு தீவில் இருப்பதைக் கேள்விப்பட்டு உடனே அவர்களோடு அங்கே செல்ல முற்பட்டு, அங்குச் சென்ற அளவில் அவ்விடத்து ஸ்தபதி தன் ஆகாராதிகளை முடித்துவர அவனிடம் இவர், “நாகைக் கோயிலில் களவு போயிற்றாம்” என்று வருந்துவதுபோல் சொல்ல அவன் “ஐயோ யார் குறும்போ இது. நான் விமானத்தில் வழியே பூட்டுப் போட்டேனே, இதுபோல்” என்று திறக்கும் வழியைச் சொல்லிக் காட்ட அதைக் கிரஹித்துக்கொண்ட இவர் அக்கோயிலை உடைத்து உள்ளே புகும் வழி அறிந்துகொண்டார். அங்கே அப்போது ஒரு கப்பல் கிளம்ப, இவர் அந்த மாலுமியிடம் ஒரு கொட்டைப் பாக்கில் பாதியை வெட்டித் தந்து “இதை வைத்துக்கொள்ளும், பயணம் முடிந்து நான் வாங்கிக்கொள்வேன் அதற்கு ஒரு சீட்டு மட்டும் கொடும்” என்ன அவன், “ஆழ்வாரிடம் இக்கப்பலின் அரைப் பாக்குப் பெற்றேன்” என எழுதித் தர, பயணம் தொடங்கியது. நாகப்பட்டினம் சேர்ந்த அளவில் இவர் அவனிடம் கப்பல் சரக்கில் பாதியைத் தமக்குத் தரக் கேட்க, அவன் மறுக்க அவ்விடத்து வணிகர்களிடம் இவர் முறிச்சீட்டுக் காட்டவும் அவர்கள் இவர்க்கு ஸாதகமாகத் தீர்ப்பு சொல்லிப் பொருள் சேர்ந்ததும், மீண்டும் ததீயாராதனம் தொடங்கியது.
பின் ஆழ்வார் ஶிஷ்யர்களோடு அப்புறமதக் கோயிலில் நுழைந்து பளபளக்கும் ஸ்வர்ண விக்ரஹம் கண்டு எடுக்கப்போக, அது “ஈயத்தால் ஆகாதோ இரும்பினால் ஆகாதோ, பூயத்தால் மிக்கதொரு பூதத்தால் ஆகாதோ, தேயத்தேய் பித்தளை நற்செம்புகளாலாகாதோ, மாயப்பொன் வேணுமோ மதித்தென்னைப் பண்ணுகைக்கே” என்று வினவ, ஆழ்வார் தன் மைத்துனனைக் கொண்டு அந்த விக்ரஹத்தை எடுத்தார். ஆழ்வார் அவ்விக்ரஹத்தை எடுத்து ஶிஷ்யர்களோடு அருகிலுள்ள சிற்றூரில் அப்போதே உழுது ஈரமாயிருந்த ஒரு நிலத்தில் பாதுகாப்புக்காகப் புதைத்துச் சென்றனர். பின்னர் அவர் அதைத் தோண்டப் போகவும் உழவர்கள் எங்கள் நிலம் நீர் யார் இதில் என்று சினக்க, ஆழ்வார் இது நம் நிலம் நாளை நாம் நிரூபகம் காட்டுவோம் என்று போக, விக்ரஹக் களவறிந்த ஊரார் அறியாமல் அதை உத்தமர் கோயிலில் சென்று சேர்ப்பித்தார். அவர்கள் வந்து கேட்க முதலில் ஏதும் அறியேன் என்றவர் பின் பங்குனியில் மழை நின்றபின் விரலளவும் தருகிறேன் என்று எழுதிக் கொடுத்தார். அவர் உடனே அதை உருக்கி விற்றுக் காசாக்கி, பெரிய கோயிலின் பெரு மதிள் கட்டலானார். இடையில் தொண்டரடிபொடி ஆழ்வார் திருநந்தவநம் வர, அங்கு சுவரை வளைத்து நந்தவனத்தோடே சேர்த்துக் கட்டினார். தொண்டரடிப்பொடிகள்பால் தம் ஆதரத்தால் தம் பூக்குடலைக்கு அருள்மாரி என்று பேரிட்டுக் க்ருதஜ்ஞதானுஸந்தானம் பண்ணினாராயிற்று.
மழைக்காலத்துப்பின் அவர்கள் மீளவும் வந்து விக்ரஹத்தைக் கேட்க, வாக்குவாதம் முற்றி அவர்கள் நீதிபதியிடம் சென்று முறையிட, நீதிபதியின் முன்னால் விரலளவும் தருகிறேன் என்று எழுதிக் கொடுத்துள்ளதால் தன் விரலைத் தருகிறேன் என்கிறார். நீதிபதியும் அதை ஏற்றுக் கொள்ளுமாறு அவர்களுக்குச் சொல்ல, அவர்கள் ஆழ்வாரின் ஸாமர்த்தியத்தைப் புரிந்து கொண்டனர். பின்னர், ஆழ்வார் அந்தக் கட்டிடத் தொழிலாளிகளை அழைத்து, ஒரு தீவில் தன் சொத்து உள்ளதாகவும், அங்கு வந்து வாங்கிக்கொள்ளுமாறும் கூறுகிறார். அவர்கள் படகில் செல்லும் பொழுது படகோட்டியிடம் சொல்லி அவரகளை மூழ்கடித்துவிடுகிறார். இறந்தவர்களின் பேரன்கள் ஆழ்வார்மீது சந்தேகப்பட்டு அவர்கள் தம் மூத்தோர் என்னாயினர் என்றும் கேட்க இவர் கவலையுற்றார். பெரிய பெருமாளின் ஆணைப்படி, அவர்களிடம், காவிரியில் நீராடி ஊர்த்வ புண்ட்ர தாரணம் செய்து பெரிய பெருமாளை ஶரண் புகுருங்கோள் என்ன அவர்களும் அவ்வாறே செய்து எம்பெருமான் திருமுன்பே வர, பெரிய பெருமாள் அவர்களை நோக்கி “உங்கள் பாட்டனார்களின் பெயர்களைக் கூப்பிட்டு அழையும்” என, அவரகளும் அவ்வாறு செய்ய, இறந்த ஒவ்வொருவரும் பெருமாளின் பின்புறம் இருந்து வெளி வந்து “நாங்கள் ஆழ்வார் ஸம்பந்தத்தால் மோக்ஷம் பெற்றோம், நீங்களும் அவ்வாறே செய்யுங்கோள்” என, அவர்களும் அவரை ஆசார்யனாய் ஏற்று ஊர் திரும்பினர்.
பெரியபெருமாள் இவரை, உமக்கு ஏதும் ஆசையுண்டோ என வினவ, ஆம் உம் தஶாவதாரம் சேவிக்க வேணும் என்றாராய் அவர் “ஆகில் நீரே ஒரு தஶாவதார ஸந்நிதி கட்டுவியும்” என்ன அவ்வாறே கட்டினார்.
பெரியபெருமாள் ஆழ்வாரின் மைத்துனரை அழைத்துத் திருக்குறையலூர்க் கோயிலில் ஆழ்வார் அர்ச்சையை எழுந்தருளப் பண்ணுவித்தார், ஆழ்வாரும் எப்போதும்போல் சேதனர்களை உஜ்ஜீவிப்பித்துக் கொண்டு எம்பெருமானே உபாய உபேயம் என உபதேசித்து எழுந்தருளியிருந்தார்.
திருமங்கை ஆழ்வார் தனியன்:
கலயாமி கலித்வம்ஸம் கவிம் லோக திவாகாரம்
யஸ்ய கோபி: ப்ரகாஶாபிர் ஆவித்யம் நிஹதம் தம:
திருமங்கை ஆழ்வார் வாழி திருநாமம்:
கலந்திருக் கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே
காசினியொண் குறையலூர்க் காவலோன் வாழியே
நலந்திகழாயிரத்தெண்பத்து நாலுரைத்தோன் வாழியே
நாலைந்துமாறைந்தும் நமக்குரைத்தான் வாழியே
இலங்கெழுகூற்றிருக்கையிருமடலீந்தான் வாழியே
இம்மூன்றில் இருநூற்றிருபத்தேழீந்தான் வாழியே
வலந்திகழுங் குமுதவல்லி மணவாளன் வாழியே
வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே
அய்யன் அருள்மாரி கலை ஆய்ந்துரைத்தோன் வாழியே
அந்துகிலும் சீராவும் அணியுமரை வாழியே
மையிலகு வேலணைத்த வண்மை மிகு வாழியே
மாறாமல் அஞ்சலிசெய் மலர்க்கரங்கள் வாழியே
செய்ய கலனுடன் அலங்கல் சேர்மார்பும் வாழியே
திண்புயமும் பணியமர்ந்த திருக்கழுத்தும் வாழியே
மையல் செய்யும் முகமுறுவல் மலர்க்கண்கள் வாழியே
மன்னுமுடித் தொப்பாரம் வலயமுடன் வாழியே
திருமங்கை ஆழ்வார் அர்ச்சாவதார அனுபவம்: http://ponnadi.blogspot.in/2012/10/archavathara-anubhavam-thirumangai.html
திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
அடியேன் சடகோப ராமாநுஜ தாஸன்
ஆதாரம்: https://guruparamparai.koyil.org/2013/01/23/thirumangai-azhwar/
வலைத்தளம் – https://guruparamparai.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://guruparamparai.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org
1 thought on “திருமங்கை ஆழ்வார்”