முன்னுரை

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யாமுந மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்

ஸ்ரீமந் நாராயணன் தொடக்கமாகவும் நாதமுனி மற்றும் ஆளவந்தாரை நடுவாகவும் என்னுடைய ஆசார்யனை ஈறாகவும் கொண்டுள்ள சீரிய குருபரம்பரையை நான் வணங்குகிறேன். நம்முடைய குருபரம்பரையைக் கொண்டாடும் இந்த திவ்யமான ச்லோகம் கூரத்தாழ்வானால் அருளப்பட்டது. அவருக்கு அஸ்மதாசார்ய என்னும் பதம் அவருடைய ஆசார்யனான எம்பெருமானாரைக் குறிக்கும். ஆனால் பொதுவாக, இந்தச் சொல், இந்த ச்லோகத்தைச் சேவிப்பவரின் ஆசார்யனைக் குறிக்கும்.

மணவாள மாமுனிகள் உபதேச ரத்தின மாலையில் காட்டியுள்ளபடி நம் தரிசனம் “எம்பெருமானார் தரிசனம்” என்றே வழங்கப்படுகிறது. எம்பெருமானாரே, அவருடைய வாழ்நாளில், ஸநாதன தர்மத்தைச் சிறந்து விளங்கச் செய்தார். தன்னுடைய முன்னோர்களான நாதமுனி, ஆளவந்தார் போன்றோரின் உபதேச மொழிகளை அனைவரும் புரிந்து கொள்ளும்படி எளிமையாக விளக்கினார்.

குரு மற்றும் ஆசார்யன் என்கிற சொற்கள் பர்யாய பதங்கள். குரு என்றல் அஜ்ஞானத்தை போக்குபவர் என்று பொருள். ஆசார்யன் என்றால் சாஸ்த்ரத்தை நன்கு கற்று, அதை தான் அனுஷ்டித்து மற்றவர்களையும் அனுஷ்டிக்கச் செய்பவர் என்று பொருள். குருபரம்பரை என்பது அப்படிப்பட்ட ஆசார்யர்கள் தொடர்ந்து வழி வழியாக அமைந்து இருத்தல். கீழே லக்ஷ்மீநாத ச்லோகத்தில் பார்த்தபடிக்கு, நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரை, ஸ்ரீமந் நாராயணனாலேயே தொடங்கப்பட்டதாக உள்ளது. ஸ்ரீமந் நாராயணன் தன்னுடைய எல்லையில்லாத கருணையால் தானே இந்த ஸம்ஸாரத்தில் கட்டுண்டு இருக்கும் ஜீவாத்மாக்களின் அஜ்ஞானத்தைப் போக்கி, அவர்களுக்குப் பரமபதத்தில் அந்தமில்லாத பேரின்பத்தை அளிக்கிறான். ஆகையால் அவனே நம்முடைய குருபரம்பரையில் ப்ரதமாசார்யனாக விளங்கி சாஸ்த்ரத்தின் சீரிய அர்த்தங்களை வெளியிடுகிறான்.

தத்வ ஜ்ஞாநாந் மோக்ஷ லாப:” என்கிறது சாஸ்த்ரம். நாம் உண்மையான ஞானத்தைப் பெற்று மோக்ஷம் அடைகிறோம். நாம் அறியும் உண்மை விஷயங்கள் அனைத்தையும், இந்த இடைவிடாத குருபரம்பரையில் உள்ள ஆசார்யர்கள் மூலமாகவே அறிந்துள்ளோம். ஆகையால் அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்வதும் அவர்கள் வாழ்வையும் உபதேசங்களையும் பேசிக் கொண்டு இருப்பதும் நமக்கு மிகவும் அவசியாமாகிறது.

இது பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய 6000 படி குருபரம்பரா ப்ரபாவம், பிள்ளை லோகம் ஜீயர் அருளிய யதீந்த்ர ப்ரவணப் ப்ரபாவம் மற்றும் ஏனைய பூர்வாசார்ய க்ரந்தங்களைக் கொண்டு நம்முடைய குருபரம்பரையைப் பற்றி விவரிக்க ஒரு சிறு முயற்சி.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://guruparamparai.koyil.org/2012/08/16/introduction/

வலைத்தளம் – http://guruparamparai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://guruparamparai.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

7 thoughts on “முன்னுரை”

Leave a Comment